PUBLISHED ON : மார் 09, 2020

'யாருக்கு தான் பணம் சம்பாதிக்க ஆசையில்லை... யாராவது பணம் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகின்றனர். எண்ணம் தான் எல்லாம் என்றால், எல்லாருக்கும் பண ஆசை உள்ளதே... பின் ஏன் பெரும்பாலானோர், பணத்துக்கு கஷ்டப்படுகின்றனர்?' என்று நீங்கள் கேட்கலாம்; நியாயமான கேள்வியும் கூட!
ஆழ் மனதில் ஓங்கி உள்ள எண்ணங்கள் தான், கற்பனை படங்களாக, மேல் மனதில் ஓடும்; இந்த மன ஓட்டங்கள், அதற்கு தக்க உணர்வுகளை தேர்ந்தெடுக்கும்; உணர்வுகளின் அதிர்வுகளை, நம் உடல் பதிவு செய்து கொள்ளும்; உள்ளமும், உடலும் இயக்கும் திசையில், நம் செயல்கள் செல்லும்; அதன் விளைவுகள் தான், நம் வாழ்வின் மொத்த தொகுப்பும்.
கவனம்
இதுதவிர, நம் மன அதிர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ளும் போது, எண்ண அலைவரிசைக்கு ஏற்றவாறு, அது நிகழ்வுகளை தேர்வு செய்து கொள்ளும்; இதைத் தான், நம் விதி என்கின்றனர்.
கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டுபவர், கயிற்றிலே மட்டும் கவனம் செலுத்தி, கிடைக்கும் கை தட்டலிலும், சாகச உணர்விலும் திளைக்கும் போது, உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் நடக்கிறான். அதுவே, அவன் சற்று பயத்திலும், மனக் குழப்பத்திலும் இருந்தால் என்ன ஆகும்... நடப்பதில் இருந்த கவனம், விழக் கூடாது என்பதில் போகும். கீழே விழுந்தால் என்னாகும் என்று, விரிவான கவலையும், பயமும் வரும்; உற்சாகம் இருக்காது.
'விழாமல் நடந்து முடித்தால் போதும்...' என தோன்றும். இந்த எண்ணமும், உணர்வும் அவன் நடையை தடுமாறச் செய்யும்; கீழே விழும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.பணம் சம்பாதிப்பதும், கயிறு மேல் நடப்பது போல் தான். மேலோங்கி நிற்கும் நம் எண்ணங்களும், உணர்வுகளும் என்னென்ன என்பது நமக்கு தெரிந்தால், பணம் சம்பாதிக்கும் வழியை சுலபமாகச் செய்யலாம்.
மனப்பழக்கம்
இது, முழுக்க முழுக்க மனதின் விளையாட்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லையா... சரி, ஒரு சின்ன காரியம் செய்யுங்கள். பணம் சம்பாதிப்பது பற்றி நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்கள் என்பதை, ஒரு வாரத்திற்கு கவனித்து, குறித்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, நம் எண்ணங்களை நாமே கவனித்து, குறித்து வைப்பதற்கு, ஒரு மனப்பழக்கம் தேவைப்படும். அது சிரமம் எனில், ஒரு துணையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அது, உங்கள் வாழ்க்கைத் துணையோ, தொழில் கூட்டாளியோ அல்லது நண்பரோ என, யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் பேசுவதை, மற்றொருவர் குறுக்கிடாமல் குறித்துக் கொள்ளுங்கள்; ஒரு வாரம் வரை எதையும் அலசாதீர்கள்.
அகழ்வாராய்ச்சி
பணம் பற்றிய ஆழ் மன எண்ணங்கள், நம் பேச்சின் இடையே அழகாக வெளிப்படும்; அதனால், நம் பேச்சுக்கள் தான், கவனிக்கப்பட வேண்டியவை. அவற்றில், எவை ஆரோக்கியமானவை, எவை நமக்கு சிக்கல் கொடுப்பவை என்று, பின் ஆராய்வோம்.இந்த வேலை, பொங்கலுக்கு வெள்ளையடிப்பது போல் தான். வீடு முழுக்க பூச்சு வேலை ஆரம்பிப்பதற்கு முன், வீட்டிலுள்ள பொருட்களை நகர்த்தி வைப்பது, தேவையில்லாதவற்றை துாக்கி எறிவது, பொருட்களை கொஞ்சம் இடம் மாற்றி வைப்பது, சுத்தம் செய்வது என்று, சின்ன அகழ்வாராய்ச்சிப் பணி நடக்கும் இல்லையா...
அதேபோல் தான், மனதை பொலிவுபடுத்தி, வண்ணம் மாற்ற, முதலில் அதில் உள்ளவற்றில் தேவையானவை எது, தேவையில்லாதவை எது என்று பட்டியல் போடுவது முக்கியம். வடிவேலு சொல்வது போல, 'எல்லாமே தேவையில்லாத ஆணிகள்...' என்று கூட நீங்கள் முடிவுக்கு வரலாம்!பணம் நம்மை தேடி வர, நம் எண்ணங்கள் ஒத்துழைக்க வேண்டும். பணமும் விருந்தாளி போல தான். அதனால், விருந்தாளி வர, வீட்டை சரி செய்து, சுத்தம் செய்வதைப் போல, செல்வம் சேர, நம் மன நிலையை சீராக்க வேண்டும்.
பணத்திற்கு எதிரான எண்ணங்களை நாம் நிறைய தேக்கி வைத்துள்ளோம். அதெப்படி என்று கேட்கிறீர்களா? சில, 'சாம்பிள்'கள் பார்ப்போம்...
* நாலு காசு சேக்கணும்னா நாயா, பேயா அலையணும்!
* காசு இல்லேன்னாலும் பிரச்னை; அளவுக்கு மேல் இருந்தாலும் பிரச்னை!
* எல்லா பிரச்னைக்கும் காரணம் பணம் தான்.
* நல்ல வழியில எல்லாம் காசு சம்பாதிக்க முடியாது.
* அதென்ன பிச்சைக்காரக் காசு... வேண்டான்னுட்டேன்.
* பணம் வந்தா, குணம், நிம்மதி போயிடும்.
* கடைசியில வேற வழியில்லாம, 'தொலை'ன்னு தண்டம் அழுதேன்.
* நம்ம தலையெழுத்து... ஏதாவது ஒரு செலவு வந்து நிக்கும்!
* சாண் ஏறுணா முழம் சறுக்குது... என்ன செய்ய?
* எவ்வளவு இறுக்கி வச்சாலும், பணம் தண்ணி மாதிரி ஓடிடுது!
* நாம என்ன பண்ணாலும் நமக்கு ஒட்டுறது தான் ஒட்டும்.
* நாற்றமடிக்கும் அளவிற்கு பணக்காரன் அவன்
* பணம் என்ன மரத்திலா காய்க்குது, அள்ளி இறைக்கறதுக்கு?போதுமா? இவை சின்னஞ்சிறு துளிகள் தான். நீங்கள் இந்த ஒரு வாரம் கவனியுங்கள்.
எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள், பணம் பற்றி நமக்கு உள்ளன என்று தெரியும்.இவை சாதாரண வார்த்தைகள் அல்ல; ஆழ் மனதில் இறுகிப் போன எண்ணங்களின் சொல் வடிவங்கள். இந்த எண்ணங்கள் சொல்கையில், என்ன உணர்வுகள் இருக்கும் என்று யோசித்து பாருங்கள்!
பணம் மரத்தில் காய்ப்பதில்லை; அது, மனதில் காய்ப்பது. மனம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு தானே மனித வாழ்க்கை! அப்போது, பணம் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளும், மனம் தானே எடுக்கிறது. பணம் செய்ய, முதலில் மனதை பக்குவப்படுத்துவோம், வாங்க!
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
