PUBLISHED ON : டிச 13, 2015

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலின் அறிகுறி, மருத்துவ தீர்வுகள் குறித்து ஒரு அலசல் இதோ. டெங்கு, வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல். இது, ஏடிஸ் இ.ஜிப்.டி., வகை கொசு கடிப்பதால் பரவுகிறது. கொசு கடித்த, 5 அல்லது 6 நாட்கள் கழித்து, இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. இது, இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல்; மற்றொன்று ரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல். இதில், ரத்தப்போக்குடன் கூடிய, டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்தும். காய்ச்சல் அறிகுறி அறிந்ததும், மருத்துவரை அணுக வேண்டும்.
அறிகுறிகள்: அதிக முன் தலைவலி, காய்ச்சல், கண்களின் பின்புறம் வலி, தசை மற்றும் மூட்டுவலியே இதன் அறிகுறிகள். ருசியை உணரும் தன்மையும், பசி ஏற்படுவதும் குறையும். மார்பு, கைகளில், தட்டம்மை போன்று தழும்புகள் எற்படும். குமட்டல்,வாந்தி ஏற்படும்.
ரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்: டெங்கு அறிகுறிகளுடன், தாங்கி கொள்ள முடியாத வயிற்றுவலி, சருமம் வெளிர்தல், சில்லிட்டுப் போதல் இருக்கும். மூக்கு, வாய், பல் ஈறுகள் மற்றும் தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து, ரத்தம் வடியும். அடிக்கடி வாந்தி எடுப்பது, தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை, அதிக தாகம், நாக்கு வறட்சி.
காய்ச்சல் வருவதற்கான காரணம்: டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமி, கொசுவின் உடலில், 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், அக்கொசு மற்றொருவரை கடிக்கும் போது, கொசு கடிபட்ட நபருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள், பகல் வேளைகளில் கடிக்கும். மனிதர்களின் ரத்தத்தை, உட்கொண்டு வாழக்கூடியவை. வீட்டின் இருட்டான மூலைகள், தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகள், குடைகள், மேசை, நாற்காலி அடியில் ஓய்வெடுக்கும். ஏடிஸ் எஜிப்டி வகை கொசுவானது,
பாத்திரங்களில், மிக குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும், தங்கள் இனப்பெருக்கத்தை செய்யும்.
குளிர்பானங்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள், தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர்வடிபள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமென்ட் தொட்டிகள், சிமென்ட் கலசங்கள், மூங்கில் புட்டிகள், தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும், இவை இனப்பெருக்கம் செய்கின்றன.
கட்டுப்படுத்தும் முறை: டெங்கு நோய், வரும்முன் காப்பதே சரியானது. இதற்கு, தடுப்பு மருந்து இல்லை. ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும். சரியான சிகிச்சை முறையை கையாள்வதின் மூலம், உயிரிழப்பு நேரிடுவதை குறைக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்: கொசு விரட்டும் உடல் பூச்சுகளிம்புகள், திரவம், சுருள் பயன்படுத்தலாம். முழுக்கை சட்டை, பேன்ட்ஸ் மற்றும் காலுறை பயன்படுத்தலாம். குழந்தைகள் தூங்கும் போது, படுக்கையை சுற்றி கொசுவலைகளை பயன்படுத்தி, கொசுக்கள் கடிப்பதை தவிர்க்கலாம். பிரிட்ஜில் தேங்கும் நீரை, வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தினால், கொசு இனப்பெருக்கத்தை தடுக்கலாம். வீட்டைச் சுற்றிலும் தேங்கியுள்ள தண்ணீரை தேடுங்கள்; கவிழ்த்து காலி பண்ணுங்கள். இவற்றில் டெங்கு கொசு உருவாவதை தடுக்கலாம்.

