தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஈறுகளில் ரத்தக் கசிவு ஏன்?

ஈறுகளில் ரத்தக் கசிவு ஏன்?

ஈறுகளில் ரத்தக் கசிவு ஏன்?


PUBLISHED ON : ஏப் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவிற்கு பயந்து, ஈறு பகுதிகளில் பிரஷை உபயோகிப்பதைத் தவிர்த்தும், முற்றிலுமாக பற்களை சுத்தம் செய்வதையே நிறுத்தி விடுவதும் வழக்கமாக உள்ளது; இது தவறான செயல். ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் புறத்திசு நோயின் முதல் அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈறுகளும், பல் புறத் திசுக்களும் தான் ஆரோக்கியமான மற்றும் உறுதியான பற்களின் ஆதாரம்.

நம் வாயில் உள்ள கிருமிகள், பற்களின் மேல் பல் படலத்தை ஏற்படுத்துகின்றன. முறையாக பற்களைத் துலக்குவதன் மூலம் இவற்றை அகற்றுகிறோம். முறையாக பற்களை சுத்தம் செய்யாத போது, நாளடைவில் பற்களும், ஈறுகளும் இணையும் இடத்தில் பல் காரையாகப் படிகிறது; காரைகளை பிரஷ் செய்து அகற்ற முடியாது.

இதில் உள்ள கிருமிகள் வெளியிடும் அமிலங்களும், நச்சுப் பொருட்களும் ஈறுகளில் எரிச்சலை ஏற்படுத்தும்; இதற்கு எதிர் விளைவாக ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டாகிறது. இதை கவனிக்காமல் விட்டால், நச்சுப் பொருட்கள் பல்லின் புறத் திசுக்களை அடைந்து, எலும்பைத் தேயச் செய்து, திசுக்களை தளர்த்தி, பற்களை ஆடச் செய்து விடும்.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, ஈறுகளின் ரத்த ஓட்டத்தில் உள்ள பிராண வாயு குறைந்து காணப்படும். இதனால், ஈறுகளில் ஏற்படும் காயங்கள் தானே ஆறும் தன்மை குறைந்து, ரத்தக் கசிவு ஏற்பட வழிவகுக்கும்.

ஹார்மோன்கள் சுரப்பு காரணமாக, கர்ப்பிணிக்கு ஈறுகள் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படலாம். மேலும், ரத்தம் உறைவதைத் தவிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்வோருக்கும் ரத்தக் கசிவு ஏற்படலாம். தினமும் இரு வேளை பற்களை சுத்தம் செய்வது. 'ப்ளாசிங்' முறையை தெரிந்து கொண்டு, சுத்தம் செய்தாலும் இப்பிரச்னையைத் தவிர்க்கலாம்.

வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். சர்க்கரை மற்றும் ஒட்டும் தன்மையுடைய உணவுகளைக் குறைத்து, 'வைட்டமின் கே, சி' அதிகம் உள்ள கீரைகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம். பல் காரைகளை பல் மருத்துவரிடம் சென்று, 'ஸ்கேலிங்' செய்தால் மட்டுமே அகற்ற முடியும். ரத்தக் கசிவிற்கான காரணத்தை அறிந்து கொண்டால், பிற்காலத்தில் இயற்கையான பற்களை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.

டாக்டர் ஆர்.வி.அபராஜிதா,

வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்,

கல்பாக்கம்.

97919 06962

drrvaparajitha@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us