தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கால்களில் நரம்பு சுருள்வது ஏன்?

கால்களில் நரம்பு சுருள்வது ஏன்?

கால்களில் நரம்பு சுருள்வது ஏன்?


PUBLISHED ON : பிப் 22, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமும், 10 மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்பவர்களுக்கு, 'வெரிகோஸ் வெயின்' எனப்படும், கால்களில் நரம்பு சுருளும் பிரச்னை வருகிறது. உடல் பருமன் இருந்தால், இப்பிரச்னை வரும் வாய்ப்பு அதிகம்; அதிக உடல் எடையால், இது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், தொடர்ந்து அதிக நேரம் நடக்க வேண்டிய சூழலில் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில், கால்களில் வலி ஏற்படும். உடனடியாக உட்கார்ந்தாலோ, படுத்தாலோ இந்த வலி குறையாது. கால்களை சற்று உயரமாக துாக்கி வைத்தால், சில நிமிடங்களில் வலி குறைந்து விடும். இது, வெரிகோஸ் வெயின் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறி; கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் சிகிச்சை செய்தால், எந்த பாதிப்பும் இல்லாமல் சரி செய்து விடலாம்.

அப்படி இல்லாத நிலையில், நரம்புகள் சுருள்வதால், ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ரத்தம் தேங்கி நரம்புகள் சுருண்டு, கால்கள் கறுப்பாக மாறுவது, புண்கள் ஏற்படுவது போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும். இதற்கு குறைந்தது, இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.

இதயத்தில் இருந்து, ரத்த நாளங்கள் வழியாக, கால்களுக்கு ரத்தம் வருகிறது. மீண்டும், ரத்தக் குழாய் வழியே இதயத்திற்கு ரத்தம் செல்லும்.

நீண்ட நேரம் நிற்பதால், தோலின் அடியில் செல்லும் ரத்தக் குழாய்களில், ரத்தம் தேங்காமல் இருக்கச் செய்யும் வால்வுகள் மூடியபடியே இருக்கும். இப்படி, பல மணி நேரம் மூடியபடியே இருக்கும் ரத்த வால்வுகள், பலவீனமாகி உடைந்து விடும். அந்த இடம் பலுான் போல வீங்கத் துவங்கும்; ரத்த ஓட்டமே இல்லாமல், பாம்பு சுருண்டது போல, நரம்புகள் சுருண்டு விடும்.

மரபியல் காரணங்களாலும் இப்பிரச்னை வரலாம். கர்ப்ப காலத்தில், அடிவயிற்றில் கனம் அதிகம் இருப்பதால், கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, நரம்பு சுருளும் வாய்ப்புகள் அதிகம். அடிவயிறு, தொடைப் பகுதியில், கொழுப்பு அதிகம் இருந்தாலும், கால்களில் அழுத்தம் ஏற்பட்டு, பிரச்னை வரும்.

வராமல் தடுக்க...

உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்க வேண்டியது அவசியம்.

அதேபோல், நின்றே வேலை செய்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்து, கால்களை பின்னால் மடக்கி, நீட்டி, சில பயிற்சிகளை செய்து கொள்ள வேண்டும்.

பிரச்னையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், இறுக்கமான சாக்ஸ் அணிந்து கொண்டால், பிரச்னை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

இதற்கான, 'டாப்ளர்' பரிசோதனையைச் செய்யும் போது, நரம்புகளின் பாதிப்பை தெளிவாக கண்டறிய முடியும்.

டாக்டர் எம்.ராஜ்குமார்,

ரத்த நாள சிறப்பு மருத்துவர், சென்னை.

98410 25996

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us