தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?

பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?

பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?


PUBLISHED ON : பிப் 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களை பெற்றவர்கள், தங்கள் பெண் புத்திசாலியாக, அழகாக இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்வர். வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது.

ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.

இதோடு கூட, மாதவிடாய் சுழற்சியிலும் கோளாறு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு மாதவிடாயே ஏற்படாமல், திடீரென அளவுக்கு அதிகமாய் உதிரப் போக்கு ஏற்படும் நிலை உருவாகும். அடி வயிற்றில் கடுமையான வலி, விட்டு விட்டு ஏற்படும். தொட்டால், இன்னும் அதிக வலி ஏற்படும்.

இந்தியாவில், 14 முதல் 40 வயதுக்குட்பட்ட, 30 - 35 சதவீதப் பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. கர்ப்பப் பை கட்டியால் அவதிப்படுகின்றனர். இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பப் பை கட்டியை கண்டறிய, ரத்தப் பரிசோதனை முறை இல்லை. ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், ஆண் ஹார்மோன்கள் அதிகமாய் தென்படுதல் ஆகியவை இருக்கலாம். 'அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' மூலம் மட்டுமே, கட்டியை கண்டறிய முடியும்.

கட்டி உள்ளவர்களின் கருப்பையில் உள்ள முட்டைகள், போதுமான வளர்ச்சியடைய வழியில்லாமல் போவதால், முதிர்ச்சியும் அடைவதில்லை. இதனால், மாதவிடாயும் ஏற்படுவதில்லை. முட்டை வளர்ந்து, வெளிவந்தால் தான், குழந்தை பிறக்க வழி உண்டாகும். முட்டை முதிர்வடையவில்லை எனில், மகப்பேறுக்கான வாய்ப்பே இல்லாமல் போகும்.

இதனால், பயந்து போகும் பெண்ணின் பெற்றோர், தீர்வு தேடி அலைகின்றனர். மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறாமல், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். 'குடும்ப பாரம்பரியமே இப்படி தான்' என்று கருதி, மருத்துவரிடம் செல்வதே இல்லை. மூலிகைகள், நாட்டு மருந்துகளை கொடுக்கின்றனர்.

முகத்தில் முடி நீக்குதல், அதிக உடல் எடை குறைத்தல், மாதவிடாய் சீராக்குதல், மகப்பேறுக்கு வழி உண்டாக்குதல் ஆகியவை அவசியம். கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், மாதவிடாய் சீராகும்; ஆண் ஹார்மோன்கள் அளவு குறையும். முகத்தில் பருக்களும் குறையலாம்; ஆனால், மகப்பேறு தவிர்க்கப்படும். மாத்திரையை நிறுத்தி விட்டால், மீண்டும் பிரச்னைகள் முளைக்கும்.

நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான, 'மெட்பார்மின்' இந்த உபாதைகளை குறைக்கும்; உடல் எடையும் குறையும். சில மாதங்களில், கருத்தரித்தல் நிகழும்.

திருமணமான பெண்கள், கருத்தரிக்க இயலாமல் போனால், அதற்குரிய மருந்துகள் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனையுடன், 'மெட்பார்மின்' மாத்திரை சாப்பிடுவதை தொடரும் போது, கருத்தரிப்புக்கான மாத்திரைகள் சாப்பிடும் அளவை குறைத்து கொள்ளலாம்.

மகப்பேறுக்கு தயாராக இல்லாதவர்கள், 'ஸ்பைரோனோலாக்டோன் சைப்ரோடெரோன் அசிடேட்' சாப்பிட்டால், முகத்தில், கை, கால்களில் முடி வளர்வதை தவிர்க்கலாம்; மாதவிடாயும் சீராகும். கர்ப்பப் பையில் கட்டி ஏற்பட்டால், வேறு சில பிரச்னைகளும் உருவாகலாம். ஹார்மோன் சீரற்ற நிலையில், கர்ப்பப் பை சுவற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வளர்சிதை மாற்றம் சீராக இல்லாமல், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு, ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மெனோபாஸ் கட்டத்தை அடையும் போது, மாதவிடாய் சீராகும். ஆனால், முகத்தில் முடி வளர்தல், தலைமுடி மெலிதாகுதல், வழுக்கை விழுதல் ஆகிய பிரச்னைகள் உருவாகும்.

மன உறுதியுடன் இருந்தால், மருந்து இல்லாமலேயே இப்பிரச்னையை சரி செய்யலாம். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொண்டு, உடல் எடையை சீராக வைத்து கொண்டாலே, ஹார்மோன் சுரப்பது சீராகும். அதிக உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்தாலே, கர்ப்பப் பையில் கட்டி உள்ளவர்களின் மாதவிடாய் பிரச்னை சீராகும். கர்ப்பப் பை கட்டி உள்ளவர்கள், மற்றவர்களை விட, குறைவான அளவு உணவே உண்ண வேண்டும். மற்றவர்கள் உதவி இன்றி நடப்பது, மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது, ஒரு மணி நேர நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவை, பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க உதவும். மேலே சொன்ன பிரச்னைகளிலிருந்து வெளிவர உதவும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us