PUBLISHED ON : நவ 10, 2013

எனது மனைவிக்கு பிரசவத்தின்போது, 48 மணி நேரத்திற்குள், 'ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம்' என்று கூறி செயற்கை சுவாசம் கொடுத்தபின் சரியானது. இதுபற்றி விளக்குங்களேன்?
பிரசவத்தின் போது கர்ப்பப்பையில் அல்லது ரத்தக்குழாய்களில் காயம் ஏற்பட்டாலோ, குழந்தையை சுற்றியுள்ள 'ஆம்னி@யாடிக்' எனப்படும் திரவம் அல்லது
குழந்தையின் செல்கள், மொக்கோனியம் போன்றவை ரத்தத்தின் வழியே தாயின் நுரையீரலுக்கும், உடலின் பிறபகுதிகளுக்கும் சென்றுவிடும். அதைத்தான் ஆம்னியோடிக் ப்ளூயிட் எம்போலிசம் என்பர். அப்படி செல்வதால் மூச்சுத் திணறல், உடலில் ரத்தம் கட்டுதல் போன்ற பல பிரச்னைகளை ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக தீவிர சிகிச்சை அவசியம். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதற்கு செயற்கை சுவாசம் பொருத்தி, அதில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஆனால் மருந்துகள் ஏதும் பெருமளவு தேவைப்படுவதில்லை.
எனக்கு சில ஆண்டுகளாக குறட்டை தொந்தரவு உள்ளது. டாக்டர், 'சி பாப்' எனப்படும் ஒரு கருவியை பரிந்துரைத்தார். வாரத்தில் 2 நாள் நான் வெளியூர் சென்றுவிடுவதால், அதை சரியாக உபயோகிக்க முடியவில்லை. வாரத்தில் 5 நாள் உபயோகித்தால் போதுமா?
பொதுவாக குறட்டை தொந்தரவு உள்ளவர்கள் டாக்டர்கள் பரிந்துரைத்தபின், 'சி பாப்' தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தநாள் காலையில் தூக்கம் வரலாம். வேலை நேரத்தின்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோகூட தூங்கி விடலாம். அத்துடன் இந்த 'சி பாப்' பயன்படுத்தவில்லையெனில், ரத்தஓட்டம் சீராக இல்லாமல் இருதய துடிப்பு அதிகரிப்பது, மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்னைகளை உண்டுபண்ணும்.
இதுவும் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். இந்த 'சி பாப்' என்பது குறட்டையை சரிசெய்து அதனால் வரும் பின்விளைவுகளில் இருந்து காப்பது. எனவே கட்டாயமாக நீங்கள் வெளியூர் செல்லும்போது அதை கையோடு கொண்டு சென்று, தொடர்ந்து உபயோகிப்பதே நல்லது.
ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு? அப்படி என்னதான் அதில் உள்ளது?
அதாவது நீங்கள் சிகரெட் பிடித்த 3வது நிமிடமே அதில் உள்ள நிகோட்டின் எனப்படும் பொருள், மூளைக்குச் சென்று, 'டோபமைன்' என்பதை சுரக்கச் செய்கிறது. இது உற்சாகத்தை தரக்கூடிய பொருள். உதாரணமாக நாம் நல்ல உணவு உண்ணும்போதோ அல்லது நமக்குப் பிடித்த நண்பர்களுடன் இருக்கும்போதோ நமக்கு ஏற்படும் உணர்வுக்குக் காரணம் இதே 'டோபமைன்'தான். ஆனால் சிகரெட் பிடிக்கும்போது எவ்வளவு எளிதில் இந்த டோபமைன் உருவாகிறதோ அவ்வளவு வேகமாகவே இது குறைந்துவிடும். அதனால்தான் அடுத்தடுத்து என்று புகைபிடிக்கத் துவங்கி, எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.
இதைத் துவங்கியபின், நிறுத்துவது கடினமாகும். எனவே, ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147
