தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குளிர் காலத்தில் பற்கூச்சம் ஏன்

குளிர் காலத்தில் பற்கூச்சம் ஏன்

குளிர் காலத்தில் பற்கூச்சம் ஏன்


PUBLISHED ON : டிச 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு இருதய நோய் உள்ளது. சில சொத்தை பற்களும், ஈறுகளில் வலியும் உள்ளது. பல் சிகிச்சை செய்ய பயமாக உள்ளது. இது பாதுகாப்பானதா?

இருதய நோயாளிகள் பற்கள், ஈறுகளை ஆரோக்கியமாக வைப்பது அவசியம். பல், ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது. வாயில் உள்ள கிருமிகள் ரத்தத்தில் கலந்து இருதயத்தையும் பாதிக்கும். இவை ரத்தக்குழாயில் சிறிய காறைகளை படியச்செய்யும். இது சில நேரங்களில் அடைப்பை ஏற்படுத்தி சிக்கலை உருவாக்கிவிடும். எனவே மற்றவர்களை விட இருதய நோய் உள்ளவர்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகம் கவனிக்க வேண்டும். இன்றைய சூழலில் நீங்கள் பல் சிகிச்சை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

* சாப்பிடும்போது பற்களிடையே உணவுத்துகள் மாட்டிக்கொள்கிறது. ஈறுகளில் வீக்கமும் வலியும் வருகிறது. பல் குச்சி, ஊசி மூலம் உணவு துகள்களை அகற்றுகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு என்ன?

பற்களிடையே இயற்கையாகவே இடைவெளி இருக்கும். பல் வரிசை சீராக இல்லையென்றாலோ பக்கத்து பற்களின் சீரற்ற அமைப்பினாலோ இடைவெளி அதிகமாகும். இதனால் உணவு மாட்டிக்கொள்ளும். பின்னர் கிருமிகள் சேர்ந்து ஈறுகளில் வலி, வீக்கம் ஏற்படும். பல் குச்சி, ஊசி பயன்படுத்துவதால் இடைவெளி அதிகரிக்கும். இதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக 'டென்டல் பிளாஸ்' பயன்படுத்தலாம். இது நுால் போன்று இருக்கும். பிரத்தியேக பிரஷ்களும் உள்ளன. இவற்றின் மூலம் சுத்தம் செய்யலாம். இதிலும் சரியாகவில்லையென்றால் இடைவெளிக்கு பக்கத்தில் உள்ள பல்லை அடைத்தோ அதில் 'கேப்' போட்டோ சரி செய்யலாம்.

* குளிரில் வெளியே சென்றால் பல் வலி, கூச்சம் ஏற்படுகிறது. சாதாரணமாக குளிர் காலத்தில் பல் வலி அதிகம் வருமா. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நமது பற்களுக்கு இயற்கையாகவே தட்பவெப்ப நிலைகளை ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. 70 டிகிரி செல்சியஸ் சூடான காபியையும் 1.5 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி உண்டு. குளிர் காற்றில் நிற்கும்போதோ, குளிரில் வெளியே செல்லும்போதோ தட்பவெப்பம் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக மாறும். இதனால் பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் நாளடைவில் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும். இதுவே வலி மற்றும் கூச்சம் வர காரணம். விரிசல்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் சீலன்டஸ் எனப்படும் மருந்தினை பூச வேண்டும். பல் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான இடைவெளியில் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* எனக்கு முன் பற்கள் ஆடுகின்றன. வலியும் உள்ளது. பற்களை எடுக்காமல் சிகிச்சை செய்ய முடியுமா?

பற்கள் ஆடுவதற்கு காரணம் அதனை சுற்றி உள்ள ஈறுகளும் எலும்பும் தேய்ந்து பற்களுக்கு பிடிமானம் இல்லாமல் போவது தான். ஈறு நோயாலும் கோணலான பல் வரிசையாலும் இது போன்று தேய்மானம் ஏற்படும். இருவகை சிகிச்சை முறைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். ஒன்று பற்களின் உட்புறத்தில் இருந்து அழுக்கு மற்றும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். மற்றொன்று பற்களின் வெளிப்புறத்தில் 'ஸ்ப்லின்டிங்' எனப்படும் சிகிச்சை செய்ய வேண்டும். கிருமிகளை நீக்கி விடுவதால் மீண்டும் எலும்பு, ஈறுகள் பலம் பெற்று நாளடைவில் ஆடும் பற்கள் குணமடையும்.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்

பல் மருத்துவ நிபுணர்

மதுரை. 94441 54551


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us