PUBLISHED ON : டிச 08, 2019

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு, குறிப்பிட்டு ஒரு காரணத்தை சொல்ல முடியவில்லை. மருத்துவ ரீதியில் உறுதியான காரணம் தெரிந்தால், குறை பிரசவத்தை தவிர்த்து விடலாம்.கர்ப்ப காலத்தில், தாய்க்கு தொற்று ஏற்பட்டாலே, குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
காரணங்கள்
இதுதவிர, வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி இல்லாதது, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சிறுநீரகத் தொற்று இப்படி நிறைய காரணங்கள் உள்ளன.குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உடல் உறுப்பு கள் அனைத்தும், முழுமையாக உருவாகி இருந்தாலும், முழு வளர்ச்சி பெற்றிருக்காது. உடல் எடையும் குறைவாக இருக்கும். நுரையீரலின் செயல்பாடு, மிகவும் குறைவாக இருக்கும். இதனால், மூச்சுத் திணறல் உட்பட, சுவாச பிரச்னைகள் வரும். குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்களில் முக்கியமானது இது.
இரண்டாவது, குழந்தையின் செரிமான மண்டலம், பாலை செரிக்கும் அளவிற்கு, முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. தாய்ப் பாலை உறிஞ்சுவது, விழுங்குவது, குழந்தையால் முடியாது. அதனால், பிறந்தவுடனேயே, அம்மாவிடம் பால் குடிக்க முடியாது. தாயிடம் இருந்து, பாலை தனியே எடுத்து, குழாயை, நேரடியாக குழந்தையின் வயிற்றில் இணைத்து, அதன் வழியே ஒரு தடவைக்கு, 1 மில்லி என, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்து, ஒரு நாளைக்கு, 25 மில்லி குடிக்கும் வரை, சிறிது சிறிதாக தர வேண்டியதிருக்கும். வலுக்கட்டாயமாக ஒரே நேரத்தில் பாலை புகட்டினால், வயிற்றில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.கடைசி, 12 வார கர்ப்பத்தில் தான், அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தால், இது குறைவாக இருக்கும். தொற்று ஏற்படும் போது, அதை எதிர்த்து போராடும் வலிமை, குழந்தையிடம் இருக்காது என்பதால், முழுமையாக, 'ஆன்டிபயாடிக்' மருந்துகளையே சார்ந்து இருக்க வேண்டி வரலாம்; நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், இறக்கவும் நேரிடலாம்.
பார்வை இழப்பு
மூளையில் உள்ள ரத்த நாளங்கள், மென்மையாக இருக்கும் என்பதால், ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. 34 வாரங்களுக்கு முன், 2 கிலோவிற்கும் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பார்வை குறைபாடு அல்லது பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, விழித்திரை எனப்படும், 'ரெடினா'வில் உள்ள ரத்த நாளங்களின் வளர்ச்சியை, அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். அசாதாரண வளர்ச்சி இருந்தால், ஆரம்பத்திலேயே. 'லேசர்' சிகிச்சை செய்து, கண் பார்வையை பாதுகாக்கலாம்.காது நரம்புகள், சரியாக வளராமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிரச்னை இல்லாவிட்டாலும், நான்கு ஆண்டுகள் வரை, குறிப்பிட்ட இடைவெளியில், குழந்தைகள் நல மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது பாதுகாப்பானது.
கற்றலில், நடத்தையில் குறைபாடுகள் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.குறை பிரசவத்தை, 100 சதவீதம் முன்கூட்டியே
தெரிந்து கொள்ள முடியாது. 24 - 37 வாரங்களில், எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்.முதல் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தால், அடுத்த குழந்தையும் அப்படி பிறக்க வாய்ப்பு உள்ளது. 37 வாரங்களுக்கு முன், வயிற்றில் வலி வந்தால், பிரசவ வலியாக இருக்க வாய்ப்பு உள்ளதால், சாதாரண வலி என்று நினைக்காமல், பரிசோதிப்பது நல்லது.குறை பிரசவத்தால் ஏற்படும் குறைபாட்டை தவிர்க்க, தற்போது, பல நவீன மருத்துவ முறைகள் உள்ளன; எனவே, பயப்படத் தேவையில்லை.
டாக்டர் எஸ்.கே.எஸ்.ராமகிருஷ்ணா,
பச்சிளங் குழந்தைகள் மருத்துவர்,
சேலம்.
96553 19192
