PUBLISHED ON : மார் 10, 2013
எனது 10 வயது மகனுக்கு இருதயம் இடது புறத்திற்கு பதிலாக வலதுபுறம் உள்ளது. இதனால் நுரையீரலுக்கு ஏதேனும் பிரச்னைகள் வருமா?
ஒரு சிலருக்கு இடதுபுறம் உள்ள உறுப்புகள் அனைத்தும் வலது புறமும், வலதுபுறம் உள்ள அனைத்து உறுப்புகளும் இடதுபுறமாகவும் இருக்கும். இதனால் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால் இடதுபுறத்தில் இருக்க வேண்டிய இருதயம் மட்டும் வலதுபுறமாக இருந்தால், ஒரு சில நுரையீரல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் நெருங்கிய உறவுகளில் திருமணம் புரிவோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற உறுப்புகளின் இடமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இவர்களுக்கு வேறு சில பிறவி கோளாறுகளும் ஏற்படலாம். அதனால் வரும் சந்ததியினராவது மிகவும் நெருங்கிய உறவுகளான மாமன் மகளையோ, மாமாவையோ மணப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்கள் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.
எனது 4 வயது குழந்தைக்கு, எனது கணவரைப் போலவே, சில மாதங்களாக இரவில் தூங்கும்போது குறட்டை வருகிறது. குறட்டை பரம்பரையாக ஏற்படுமா? இதனை தவிர்க்க நான் செய்ய வேண்டியதென்ன?
ஒரு சிலருக்கு கீழ்த்தாடை எலும்பு உள்வாங்கி இருக்கும். இதனால் படுக்கைக்கு சென்றவுடன், கீழ்த்தாடை எலும்பு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்துவதால் குறட்டை ஏற்படுகிறது. இதேபோன்று கீழ்த்தாடை அமைப்பு பரம்பரையாக குழந்தைகளுக்கும் இருந்தால் அவர்களுக்கும் குறட்டை ஏற்படும்.ஆனால் 99 சதவீதம் குழந்தைகளுக்கு 'அடினாய்டு' சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு, மூச்சுக்குழாயை அழுத்தி, அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டை ஏற்படுகிறது. பெரும்பாலும் இதனை பெற்றோர் கவனிப்பதில்லை. இதனால் காதுகளில் நீர்வரக்கூடும். மேலும் காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் பல மாற்றங்கள்
ஏற்பட்டு, முகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். இதனை அடினாய்டு பெயிஸ் என்பர். அதனால் உடனடியாக ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி, குறட்டைக்கான காரணத்தை கண்டறிவது நல்லது. இதனால் பல பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.
எனது 20 வயது தங்கைக்கு, இரண்டு வயதில் முதுகுதண்டு வளைய ஆரம்பித்தது. இப்போது அதிகளவில் வளைந்து உள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். முதுகுதண்டு வளைந்து இருப்பதற்கும் மூச்சுத் திணறலுக்கும் சம்பந்தம் உண்டா?
ஒரு அடிகுழாய்க்கு கைப்பிடி எவ்வளவு முக்கியமோ, அதுபோல நம் நுரையீரல் செயல்பட நம் முதுகுதண்டு மிகவும் அவசியம். நம் நுரையீரல் சுருங்கி விரியும்போது, முதுகுதண்டானது மேலும், கீழுமாக அசைகிறது. முதுகுதண்டு வளைந்து இருந்தால் நுரையீரல் அதிகளவில் சுருங்கி விரியமுடியாது. இதனால் நுரையீரலின் திறன் குறைகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தஅழுத்தம் அதிகமாகிறது. எனவே உங்கள் தங்கை உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது. இதனால் முதுகுதண்டு மேலும் வளைவதை தடுக்கலாம். மூச்சுப் பயிற்சி செய்வதால்
நுரையீரல் திறன் சற்று அதிகரிக்கலாம். சிலசமயங்களில் கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகம் இருந்தால், சி.பி.ஏ.பி.,போன்ற நவீன கருவி மூச்சுத் திணறலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425 24147