PUBLISHED ON : மார் 10, 2013

எனது 10 வயது மகன், முறையாக பற்களை சுத்தம் செய்தாலும், சொத்தை வந்து விடுகிறது. சொத்தை வராமல் தடுக்க ஏதும் சிகிச்சை உள்ளதா?
பற்களில் சொத்தை வந்தபின், சிகிச்சை செய்து கொள்வது ஒருவழி. சொத்தை வராமல் தடுப்பது அதைவிட சிறந்தது. இதற்கு வீட்டில் செய்ய வேண்டியது, சரியான முறையில் பல்துலக்குவது, சத்தான உணவு உண்ணுதல், பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவற்றை செய்தும் சிலருக்கு சொத்தை வந்துவிடலாம். இதற்கு காரணம் சிலரது பற்களின் அமைப்பு, சுலபமாக சொத்தை வரக்கூடிய வடிவில் இருக்கும். பற்களின் மேற்புறத்தில்
சிறுகுழிகள், பிளவுகள் இயற்கையிலேயே இருக்கும். சிலருக்கு இது மிகுந்து காணப்படும். இவை நாம் உண்ணும் உணவுகளும், கிருமிகளும் தங்குவதற்கு உகந்த இடங்களாகின்றன. இதனால் இவர்களுக்கு சொத்தை அதிகமாக வரும். இதை 'சீலண்ட்' எனும் சிகிச்சை செய்து தவிர்க்கலாம்.
எட்டு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை இச்சிகிச்சை செய்து கொள்ளலாம். சொத்தை வரும் வாய்ப்பு அதிகம் உள்ள
பற்களின் மேற்புறத்தில் சீலண்ட் என்னும் ரசாயனத்தை தடவ வேண்டும். இது நுண்ணிய குழிகள் மற்றும் பிளவுகளுக்குள் பரவி, அவற்றை அடைத்துவிடும். எனவே உணவோ, கிருமிகளோ பற்களில் தங்காது. சொத்தை வருவதும் பெருமளவு குறையும்
நான் பல் சீரமைப்புக்காக கம்பி போட்டுள்ளேன். பற்களில் கம்பி மாட்டியவர்கள், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
பல் சீரமைப்புக்காக பற்களில் கம்பி போடுவது வழக்கமான சிகிச்சை முறைகளுள் ஒன்று. ஆனால் கம்பி போட்டு இருப்பவர்கள், பற்களை அதிக அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். பல் துலக்கும் முறை முதல் உணவுப் பழக்கம் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். பற்களில் கம்பி போட்டுள்ளவர்களுக்கு என, பிரத்யேக பிரஷ்கள் உள்ளன. பல் இடுக்குகளிலும் கம்பியின் இடையிலும் சுத்தம் செய்ய அவை உதவும். சாப்பிட்டவுடன் தண்ணீரால் வாயை நன்கு கழுவ வேண்டும். ஒருநாளைக்கு 2, 3 முறை பல் துலக்க வேண்டும். புளூரைடு கலந்த 'மவுத் வாஷ்' என்னும், திரவத்தால் தினமும் வாயை சுத்தம் செய்ய வேண்டும். கடினமான அல்லது பற்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ள சாக்லேட் போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
இவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் அமிலத்தன்மை பற்களில் கம்பியை ஒட்டி உள்ள இடங்களில் நிரந்தரமான பாதிப்பை
ஏற்படுத்தும். நாளடைவில் இதுவே பல்சொத்தைக்கு காரணமாகவும் இருக்கும். மாதம் ஒருமுறை பல் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441 54551