PUBLISHED ON : மார் 10, 2013

எஸ். பார்த்திபன், மதுரை: எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு அம்லோடிபின் 5 மி.கி., என்ற மாத்திரையை தொடர்ந்து எடுத்து வருகிறேன். ஆனால் தற்போது எனது ரத்தஅழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் அம்லோடிபின் மாத்திரையை 10 கிராமாக உயர்த்திக் கொள்ளலாமா?
ரத்தக்கொதிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர், தங்களுக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது என்பதையே அறியாமல் உள்ளனர். ரத்தக்கொதிப்பு உள்ளது என தெரிந்தவர்களில் 60 சதவீதம் பேர் மருந்து எடுக்காமல் உள்ளனர். ரத்தக் கொதிப்புக்கு மருந்து எடுத்துக் கொள்வோரில், பெரும்பாலோருக்கு உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் உண்மையே. எனவே வாழ்க்கை முறை மாற்றம், தினசரி நடைப்பயிற்சி, உணவில் உப்பை குறைப்பது, வேளை தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது என அனைத்தையும் சரியாக செய்தால்தான், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதாவது எந்த வேளையிலும், எந்த வயது மற்றும் எந்ததருணத்திலும் ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90க்கு கீழ், 120/ 80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.
மருந்துகளை பொறுத்தவரை, தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒரு மருந்தின் அளவைக் கூட்டுவதைவிட, மற்றொரு மருந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்வதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும். எனவே உங்கள் டாக்டருடன் கலந்து ஆலோசித்து, அம்லோடிபின் மாத்திரையுடன், வேறு ஒரு மாத்திரையை எடுப்பதே சரியானதாக இருக்கும். ஏனெனில் ரத்தக்
கொதிப்புள்ள பெரும்பாலோருக்கு ஒரு மருந்துமட்டும் போதுமானதாக இருக்காது.
மி.சாமிக்கண்ணு, விருதுநகர்: நான் பல ஆண்டுகளாக புகைபிடித்தேன். கடந்த ஒரு ஆண்டாக நிறுத்திவிட்டேன். இதனால் எனக்கு மாரடைப்பு வரும் தன்மை குறையுமா?
இருதய ஆரோக்கியத்திற்காக ஒருவர் செய்யும் முதல்படி சிகிச்சை, புகை பழக்கத்தை நிறுத்துவதுதான். எனவே அதை நிறுத்திய உடனேயே, அவருக்கு மாரடைப்பு வரும் தன்மை பல மடங்கு குறைகிறது. இருந்தாலும், புகை பிடிக்காதவர் அளவுக்கு, மாரடைப்பு வரும்தன்மை குறைவதற்கு, பல ஆண்டுகள் ஆகும்.
கே.சிங்காரவேலு, திண்டுக்கல்: ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர், பின்வரும் நாட்களில் எந்தளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
மாரடைப்பு என்பது, இருதய ரத்தநாளங்களில் ரத்தஓட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் வியாதி. இதில், எந்த ரத்தநாளத்தில், எந்த இடத்தில், எத்தனை சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, அதன் தீவிரம் அமையும். ஆனால் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால், மறுபடியும் மாரடைப்பு வரும் தன்மை உள்ளது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்தல், வேளை தவறாமல் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம்.
வி. சத்தியநாதன், கூடலூர்: மார்பு பகுதியில் ஏற்படும் எல்லா வலியும், இருதய வலியாக இருக்க வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக இல்லை. நெஞ்சில் ஏற்படும் எல்லா வலியும் இருதய வலிஇல்லை. பொதுவாக இருதய வலி என்பது, நடக்கும்போது, நடுநெஞ்சில், கனமாக அழுத்துவது போல, வியர்வையுடன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் நெஞ்சில் இருக்கும் தசை, எலும்பு, நரம்பு, நுரையீரல் மற்றும் உணவுக் குழாய் போன்றவற்றில் ஏற்படும் வலியும் நெஞ்சுவலியாகவே தெரியும்.
எனவே சில பரிசோதனைகளை செய்த பிறகு, இருதய வலியா அல்லது சாதாரண வலியா என தெரிந்து கொள்ளலாம். அதை உங்கள் டாக்டர் நன்கு அறிவார்.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452-233 7344