PUBLISHED ON : ஜன 15, 2023

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. இந்த வயதில் வரும் 50 சதவீத சிறுநீர் பிரச்னைகளில், 60 சதவீதம் சிறுநீர் கசிவு பிரச்னை தான். பிரசவ சமயத்தில் பிரச்னை இருந்திருந்தால் இப்பிரச்னை 30 வயதிலும் வரலாம்.
சிறுநீர் கசிவு பிரச்னைக்கு முறையான சிகிச்சை இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை; தானாகவே சரியாகி விடும் என்று தான் நினைக்கின்றனர்.
இரண்டு விதங்களில் இப்பிரச்னை வரலாம். முதல் வகையில் இருமல், தும்மல் வரும் சமயத்தில், வாய் விட்டு சிரிக்கும் போது, குனிந்து, நிமிரும் நேரங்களில் சிறுநீர் கசிவு ஏற்படலாம். வேகமாக நடந்தாலும் பிரச்னை வரலாம்.
இதற்கு பயந்து பல பெண்கள் நடைபயிற்சி செய்வதில்லை. விளைவு, உடல் பருமன், தொடர்ந்து அது தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் பருமனுக்கான காரணத்தை அலசும் போது தான் பிரச்னையே தெரிய வரும்.
பள்ளி, கல்லுாரி, வங்கிகளில் பணி செய்யும் பெண்கள் இப்பிரச்னைக்கு பயந்தே வேலையை விட்டு விலகுவதும் நடக்கிறது.
பல பெண்கள் வெளியில் செல்லக் கூட பயந்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இதனால், மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
பிரச்னைக்கு காரணம்
பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். சகஜ நிலைக்கு திரும்பியதும், தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பயிற்சிகளை செய்யாவிட்டால் வயது ஆகும் போது, தசைகள் மேலும் வலுவிழந்து, சிறுநீர் கசிவு ஏற்பட காரணமாகும். இப்பிரச்னை இருந்தால், தோல் தொற்று, சிறுநீர் தொற்று உட்பட பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவதை உணர்ந்ததும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப நிலையில் இருந்தால், இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வதால் மட்டும் பிரச்னையை சரி செய்து விட முடியும். தீவிர நிலையில் சிகிச்சை அவசியம்.
இப்பிரச்னை உள்ள பெண்களில் 45 சதவீதம் பேர், சிறுநீர் பை கூடுதலாக வேலை செய்யும், 'ஓவர் ஆக்டிங் பிளாடர்' பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததும் கட்டுப்படுத்த முடியாத நிலை.
எங்கே சிறுநீர் கழிக்க வேண்டி வருமோ என்று தண்ணீர் குடிக்காமல் இருந்து, அதனால் நீர்ச்சத்து குறைபாடு, இரவில் துாக்கம் கெடுவது, அதைத் தொடர்ந்து வரும் உடல் கோளாறுகள் என்று பலபிரச்னைகள் வரும்.
டாக்டர் வி.பாரதி,
மகளிர் நல மருத்துவர்,சென்னை.
97010 59595
