அப்பாக்களும் செய்ய விரும்பும் 'கங்காரு - மதர் கேர்!'
அப்பாக்களும் செய்ய விரும்பும் 'கங்காரு - மதர் கேர்!'
PUBLISHED ON : ஜன 08, 2023

இரண்டு கிலோவுக்கும் குறைவான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை, 'கங்காரு - மதர் கேர்' என்ற முறையில் பராமரிப்பது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; இதற்கென்று தனியாக எந்த செலவும் கிடையாது.
இம்முறையில் குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது தெரிந்தால் போதும்... டாக்டர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பயிற்சி பெற்ற நர்ஸ் உதவியுடன், யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
குறை பிரசவ குழந்தைகளை பொதுவாக, 'வென்டிலேட்டரில்' வைத்தே பராமரிப்போம். இப்படி இருந்தாலும், குழந்தையின் உடல் நிலை சீராக, அதிக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லாத பட்சத்தில், கங்காரு - மதர் கேர் முறையில் குழந்தையை வைக்கலாம்.
கங்காரு - மதர் கேர் என்பது, தாயின் மார்பகங்களுக்கு நடுவில் குழந்தையை படுக்க வைப்பது. குழந்தையின் மார்பு, வயிற்று பகுதி, தாயின் மார்பு பகுதியில் இருக்கும். தோலுடன் தோல் ஒட்டி குழந்தையை வைக்கும்போது, தாயின் கருவறைக்குள் இருந்த பாதுகாப்பு உணர்வை குழந்தை உணர்கிறது.
'நார்மல் டெலிவரி'யில் சில மணி நேரத்தில் தாயின் உடல் நிலை சீராக, சமாளிக்க முடிகிற அளவில் இருக்கும். 'சிசேரியன்' என்றால், வலி இருக்கும்; தாயின் உடல்நிலை சீராக, ஓரிரு நாட்கள் ஆகலாம்.
தாயின் உடல் நிலையையும், மன நிலையையும் கவனத்தில் வைத்தே, இதை செய்ய வேண்டும். கர்ப்பம் உறுதியானதும், இம்முறை பற்றி தாயிடம் விளக்கி, மனதளவில் தயார் செய்வதால், இன்னும் சிறப்பான பலன் தரும்.
என்ன பலன்?
குறை பிரசவத்தில் குழந்தை பிறக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இப்படி பிறந்த குழந்தைகள், தங்கள் உடல் வெப்பத்தை வெகுவாக இழப்பதால், உடல் நடுக்கத்துடன் குளிராக இருக்கும்.
அம்மாவின் மார்பகங்களுக்கு நடுவில், தோலுடன் தோல் படும்படி குழந்தையை வைக்கும் போது, நேரடியாக கிடைக்கும் அம்மாவின் உடல் சூடு, குழந்தையின் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
இதனால், தாய்க்கும், குழந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும்; தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்; தாயின் இதயத் துடிப்பை மட்டும் கேட்கும் குழந்தையின் சுவாசிக்கும் திறன் அதிகரிக்கும்; சீரான மூச்சு விடுவதற்கு உதவும்; குழந்தையின் உடல் எடை சீராக அதிகரிக்கும்.
சுத்தமாக குளித்து, வசதியான உடை அணிந்து, நகங்களை வெட்டி, தலைமுடியைக் கட்டி, குழந்தைக்கு எந்தவித தொற்றும் ஏற்படாதவாறு, சுகாதாரமாக இதை செய்ய வேண்டியது அவசியம். தாயால் எவ்வளவு நேரம் உட்கார முடிமோ, அவ்வளவு நேரம் காலை, மாலை இரு வேளையும் செய்யலாம்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரசவத்தின் போது, குழந்தையின் தந்தையும் உடன் இருக்க அனுமதிப்பர்; எல்லா விதங்களிலும், மனைவிக்கு உதவியாக இருப்பர். இந்த பழக்கம் இங்கும் வந்திருக்கிறது.
ஆரோக்கியமான மாற்றம்
பெரும்பாலான ஆண்கள் தாங்களே முன்வந்து, பிரசவத்தின் போது அருகில் இருக்கின்றனர். குழந்தையின் விஷயத்தில், தங்களுக்கும் சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்கின்றனர்.
கங்காரு - மதர் கேர் தாயால் தர முடியாத நிலையில், நெருங்கிய உறவுக்கார பெண்களை செய்யச் சொல்வது மாறி விட்டது. குழந்தை பிறந்து, அது இயல்பு நிலைக்கு வந்ததும், பல ஆண்கள் தாங்களே முன்வந்து, கங்காரு கேர் தருகின்றனர்; வியப்பூட்டும் ஆரோக்கியமான மாற்றம் இது.
டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி,
பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர், அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை.
