இரு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத ஆசிரியர்
இரு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத ஆசிரியர்
PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண விழா
இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிறைய மாற்றுத்திறானிகள் வந்து கலந்து கொண்டனர்.
அவர்களில் வெங்கடேசனும் ஒருவர் இரண்டு கைகளையும் இழந்திருந்தாலும் திருமண மண்டபத்தில் அவரது சுறுசுறுப்பும் செயல்பாடும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
வந்தவர்களை வரவேற்று இருக்கைகளில் அமரவைப்பது,சாப்பிடவைப்பது,தேவையான விஷயங்களை பெறவைப்பது என்று ஓடிக்கொண்டே இருந்தார்.
முக்கியமாக அவர் தனக்கு வரும் மொபைல் போன் அழைப்புகளை 'அட்டெண்ட்' செய்த விதம் பிரமிக்கவைப்பதாக இருந்தது,போன் அழைப்பு வந்ததும் சட்டைப்பையில் உள்ள போனை ஒரு மாதிரியாக ஊனமான கையால் துாக்கிவிட அந்த மொபைல் போன் அவரது காதிற்கு போய்விடுகிறது,காதிற்கு போவதற்கு முன்பாகவே நாக்கால் காலை அட்டெண்ட் செய்துவிடுகிறார் பின்னர் வழக்கம் போல பேசிவிட்டு போனை விடுவித்ததும்,போன் சரியாக சட்டைப் பாக்கெட்டிற்கு போய்விடுகிறது.
அவரை அருகில் சென்று பாராட்டி விசாரித்த போது இன்னும் சில வியப்பான தகவல்கள் கிடைத்தது.
தர்மபுரியைச் சேர்ந்த வெங்கடேசன் பத்து வயது வரை சாரசரியாக வளர்ந்த பையன்தான்.ஒரு மின்சார விபத்தில் சிக்கியதில் முழங்கைகளுக்கு மேல் இரண்டு கைகளையும் இழந்தார்.
ஆனால் கொஞ்சமும் நம்பிக்கை இழக்காமல் எம்.ஏ.எம்,எட் வரை படித்து ஆசிரியர் தகுதிக்கு தன்னை தயார்செய்து கொண்டார்.படிக்கும் போதே ஊனமுற்றவர்களுக்கான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் பல பெற்று தேசிய வீரரானார்.
இந்த தகுதிகளில் அடிப்படையில் இவருக்கு தற்காலிகமாக தமிழ் ஆசிரியர் வேலையை அரசு வழங்கியது.
தனக்கு இந்த தமிழாசிரியர் பணி அனுதாபத்தால் வழங்கப்பட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதற்காக, பணியில் கடுமையாக உழைக்கிறார், இதன் காரணமாக இவரிடம் படிக்கும் எந்த மாணவரும் தமிழில் பெயிலானதே கிடையாது.நல்ல மார்க்குகள் எடுத்து தங்களுக்கும் தமிழாசிரியருக்கும் பெருமை தேடித்தருகின்றனர்.
வெங்கடேசனுக்கு உள்ள ஒரு குறை என்னவென்றால், தான் சராசரி ஆசிரியருக்கும் மேலாக உழைத்துவந்தாலும் தன்னை இன்னமும் தற்காலிக ஆசிரியராகவே அரசு வைத்துள்ளது.விரைவில் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்கிறார்.
இது தனக்கு மட்டுமின்றி தன்னைப் போன்ற ஊனமுற்ற பலருக்கும் மேலும் நம்பிக்கையைத் தரும் என்கிறார்.
இதில் அரசுக்கு எந்த தடங்கலும் சங்கடமும் இருக்கப் போவது இல்லை, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் போதும் நிரந்தரம் என்பது நிச்சயம் நடந்துவிடும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அந்த வேலையை இந்தக் கட்டுரையின் மூலம் நாம் செய்வோம்.
-எல்.முருகராஜ்