PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

காலங்களில் அவன் வசந்தம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் புகழ்பாடும் நிகழ்வு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியின் ஆதரவுடன் இசைக்கவி ரமணன் சென்னையில் தொடர்ந்து நடத்திவருகிறார்.
இதுவரை 102 முறை இந்த நிகழ்வு மேடையேறியுள்ளது,ஒவ்வொரு முறையும் ஒரு ஆளுமை மேடையேறி கவியரசருடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்.
மிக சுவராசியமான இந்த நிகழ்ச்சியின் 102 வது பகுதி கடந்த 28 ஆம் தேதி சென்னை வாணிமகாலில் நடைபெற்றது,இந்த நிகழ்வில் பல திரைப்படங்களை கதை வசனம் எழுதிய இயக்கி தயாரித்தவரான காரைக்குடி நாராயணன் கலந்து கொண்டார்.
மாணவப்பருவத்தில் காரைக்குடி வந்த கண்ணதாசனை நேரில் பார்த்து தனது கவிதைகளைக் காண்பித்திருக்கிறார் அதைப் பார்த்துவிட்டு ஒரு பாராட்டுக்கவிதையும் எழுதிக் கொடுத்துள்ளார்.
அந்தக் கவிதையைப் படித்துவிட்டு, கவியரசரே பாராட்டிவிட்டார் இனிமேல் நாமும் சினிமாவில் கவிதை எழுதுவோம் என்று சென்னை கிளம்பிவிட்டேன்.
ஒவ்வாரு சினிமா கம்பெனிகளாக ஏறி இறங்கினேன், பல நாள் தண்ணீர்தான் உணவு ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் சுற்றிவந்தேன், கவிதைகள் கைகொடுக்கவில்லை கதை வசனங்கள் கைகொடுத்தன பீம்சிங்கிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.
அவரிடம் சினிமாவைக் கற்றுக் கொண்டேன் இருபது வயதில் 'திக்கற்ற பார்வதி' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது கதாசிரியர் மூதறிஞர் ராஜாஜி நேரில் கூப்பிட்டு பாராட்டினார். பிறகு நிறைய நாடகங்கள் சினிமாவிற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதினேன்.
அதன்பிறகு கவியரசருடன் பல சந்திப்புகள் நடந்தது எனது படபூஜைக்காக ஒரு நாள் காலை 6 மணிக்கு செட்டிற்கு வந்தார் ஏவிஎம் சரவணனே ஆச்சரியப்பட்டு என்ன கவிஞரே இவருக்கு மட்டும் ஸ்பெஷல் என்று கேட்டபோது அவர்தானே என் ஊர் பெயரை தன்னுடன் சேர்த்து ஊருக்கு பெருமை சேர்க்கிறார் அதனால் என்று சொல்லிவிட்டு சென்றார்.
தீர்க்க சுமங்கலி என்ற எனது படத்தில் வரும் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலின் மூலம் வாணி ஜெயராமை அறிமுகம் செய்தேன்.சிவாஜியைப் போல நடிகர் இல்லை என்பது தெரியும் ஆனால் அவரைப் போல மனிதரைப் பார்ப்பதும் அரிது, ஒரு நாடக விழாவில் அவரை அனைவரும் படம் எடுத்த போது என்னைவிட முக்கியமானவர் இந்த நாடக கதாசிரியர் அவரை படம் எடுங்கள் என்று என்னை அழைத்து நடுவில் நிறுத்தி படம் எடுக்கச் செய்தவர்.
என் மீது கொண்ட பிரியம் காரணமாக அன்பே ஆருயிரே படம் கொடுத்தார் எனக்கு பிரச்னை வந்த போது என்னை துாணாக தாங்கிப்பிடித்தவர்.
இது சத்தியம் படத்தில் கதாநாயகனாக நடித்த அசோகனும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஏண்ணே அப்படி எல்லாம் நடித்துவிட்டு இப்போது படு கோமாளியாக நடிக்கிறீர்கள் என்று கேட்டபோது எல்லாருமே எம்ஜிஆராக முடியாது அவர் எதிர்பார்ப்புக்கும் மேலே கொடுத்தார் ஆனால் இப்போது அப்படியில்லையே இந்த ரோல்தான் இருக்குங்கிற போது மாட்டேன்னு சொன்னா பிழைப்பது எப்படி என்றார்.
வெறும் இரண்டரை லட்சத்தில் திக்கற்ற பார்வதி படம் எடுத்தோம் இப்போது அதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது இன்றைய காலத்திற்கேற்ப ஒடிக்கொண்டே இருக்கவேண்டும் கடந்த வாரம் கூட அக்னி பிரவேசம் என்ற எனது வசனத்தில் மேடையேறிய நாடகம் நன்கு வரவேற்பை பெற்றது.
இந்த தொழிலில் என்ன கிடைத்தது என்றால் கவியரசர் என்ற மாபெரும் மனிதரைச் சந்திக்க முடிந்ததே பெரும்பேறு அது போதும் இந்தப்பிறவிக்கு என்றபடி மக்களின் கைதட்டலுக்கு நடுவே விடைபெற்றார்.
-எல்.முருகராஜ்