தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ மின்கம்பங்களில் ஏறி வரலாறு படைத்த சிங்கப் பெண்கள்!

மின்கம்பங்களில் ஏறி வரலாறு படைத்த சிங்கப் பெண்கள்!

மின்கம்பங்களில் ஏறி வரலாறு படைத்த சிங்கப் பெண்கள்!


PUBLISHED ON : நவ 13, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 05:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பெண்களால் இது முடியுமா?' என்ற காலங்காலமான கேள்விகளுக்குத் தங்கள் வியர்வையாலும், அசாத்தியத் துணிச்சலாலும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தமிழகத்தின் இளம்பெண்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு, வெறும் அரசு வேலைக்கான தேர்வாக மட்டுமல்லாமல், பெண் சக்தியின் பேருருவத்தை உலகுக்குப் பறைசாற்றும் களமாக மாறியிருக்கிறது.

கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலக வளாகம் அன்று ஒரு புதிய வரலாற்றுக்குச் சாட்சியாக நின்றது. ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த கடினமான களப்பணிக்கு, 'நாங்களும் சளைத்தவர்கள் அல்ல' எனத் துணிந்து களமிறங்கிய பெண்களின் கண்களில் அத்தனை உறுதி!

தேர்வுத் திடலில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடையுள்ள கனமான இரும்புக் கம்பிகளைத் (Rods) தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடிய வேகம், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதுமட்டுமா? உயரமான மின்கம்பங்களை அண்ணாந்து பார்த்து மலைக்காமல், கண்ணிமைக்கும் நேரத்தில் விறுவிறுவென உச்சிக்கு ஏறி, மேலே நின்றபடியே மின் கம்பிகளைத் துல்லியமாக இணைத்துத் தங்கள் திறமையை நிரூபித்தபோது, பார்த்தவர்கள் மனம் வியப்பில் ஆழ்ந்தது.

பொதுவாக, புயல் சீற்றம், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில்தான் மின்வாரியக் களப்பணியாளர்களின் உண்மையான சவால் தொடங்கும். இருளும் மழையும் சூழ்ந்த ஆபத்தான சூழலில், உயிரைப் பணயம் வைத்து மின்கம்பங்களில் ஏறி மின்சாரத்தை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியமல்ல. அத்தகைய இக்கட்டான சவால்களையும் எங்களால் எளிதில் எதிர்கொண்டு வெல்ல முடியும் என்பதை, இந்தத் தேர்வின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள்.

இவர்கள் ஏறியது வெறும் மின்கம்பங்களில் மட்டுமல்ல; சமூகத்தின் தயக்கங்களையும் தாண்டி, தங்களின் தன்னம்பிக்கையின் உச்சத்தில் ஏறி நின்றிருக்கிறார்கள். அச்சத்தைத் துறந்து, சவால்களைச் சாதனைகளாக மாற்றியிருக்கும் இந்தச் சிங்கப் பெண்களின் வீரத்தையும் மனவலிமையையும் மனதார வாழ்த்திப் போற்றுவோம்!

படங்கள்:அருள்குமார்

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us