மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் எளியவர்களுக்கு உணவு
மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் எளியவர்களுக்கு உணவு
PUBLISHED ON : மே 15, 2021 12:00 AM

பெயரில் நெல்லை இருந்தாலும் இவர் வாழ்வது மதுரையில்தான்.
வாழ்க்கையில் பலர் பகுதி நேரம் சேவைக்கு என ஒதுக்கிக் கொள்வார்கள் இவர் தனது வாழ்க்கையின் முழுநேரத்தையே சேவைக்காக ஒதுக்கிக் கொண்டவர்.
பேச்சை விட செயலுக்கு முக்கியத்துவம் தரும் இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனாவால் மதுரை நடைபாதைவாசிகள் படும் சிரமம் கண்ணில் நீர் வரவழைத்திருக்கிறது.
அதிலும் ஊரடங்கு காலத்தில் நடமாட முடியாதவர்களும் மனநோயாளிகளும் நிறையவே சிரமப்படுவதை பார்த்தவர் மறுநாள் முதல் அவர்களுக்கு சாப்பாடு வழங்குவது என்று முடிவு செய்தார்.
பெரிதாக வருமானமோ சேமிப்போ இல்லாத நிலையிலும் உணவு வழங்குவது என்று முடிவு செய்துவிட்ட நிலையில் இவரது நண்பர்கள் மற்றும் பொது நலம் விரும்புபவர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டினர்.
இதன் காரணமாக முடிவெடுத்த மறுநாளே இருநுாறு பேருக்கு ஆரோக்கியமான ருசியான உணவு தயார் செய்து தேவைப்பட்டவர்களுக்கு தேடிதேடிக் கொண்டு போய்க் கொடுத்தார்.
கடந்த எட்டு நாட்களாக தொய்வின்றி இந்த தொண்டு தொடர்கிறது பகல் 12 மணியானதும் சமையல் கூடத்தில் தயார் செய்யப்பட்டுவிடும் அந்த உணவை எடுத்துக் கொண்டு ஆட்டோ அல்லது காரில் கிளம்பிவிடுகிறார் இவர் வருகைக்காக காத்திருந்தது போல பலரும் கும்பிடு போட்டு உணவை வாங்கிக் கொள்கின்றனர்.
உணவு கிடைத்த சந்தோஷத்தில் அவர்கள் கைகூப்பி நன்றி தெரிவிக்கும் போது இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம் என்று தோன்றுகிறது, இப்போது என் கையில் உள்ள பணத்திற்கு இன்னும் ஒரு பத்து நாளைக்கு உணவு கொடுக்கமுடியும் அதற்கு பிறகு இறைவன் வழிகாட்டுவார் என்று நம்புகிறார்.
மதுரையின் அட்சய பாத்திரம் என்ற இவரது இந்த அமைப்பின் மூலம் நீங்களும் பங்கேற்று அங்குள்ள ஏழை எளியவர்களின் பசிப்பிணி போக்கலாம்.அவரது தொடர்பு எண்:94426 30815
-எல்.முருகராஜ்
