PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM
![]() |
மதுரை கனரா பாங்க் அலுவலகம்.
அந்த பாங்கின் கடை நிலை ஊழியரான 53 வயதான பூரணத்தம்மாள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
'பூரணத்தம்மா, இந்த பைலை அங்கே கொண்டு போய் கொடுங்க'
'பூரணத்தம்மா, இந்த டேபிளை கொஞ்சம் சுத்தம் செய்யுங்க'
பாங்க் அதிகாரிகளும்,அலுவலர்களும் இடும் இது போன்ற வேலைகளை, 'இதோ வந்துட்டான்யா,இதோ செஞ்சுடேறேன்யா' என்று சொல்லியபடி அங்குமிங்கும் ஒடி ஒடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் வாசலில் மதுரை எம்.பி.,வெங்கடேசனின் கார் வந்து நிற்கிறது.
மொத்த பாங்குமே எம்.பி.,எதற்காக பாங்கிற்கு வந்திருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறது.
அவரை வரவேற்ற அலுவலர்கள், பாங்க் மேலாளர் அறைக்கு அழைத்துச் செல்ல யத்தனிக்கின்றனர்.
'இல்லை, நான் மேலாளரை பார்க்க வரவில்லை! இங்கே பணியாற்றும் பூரணத்தம்மாளை பார்க்க வந்துள்ளேன்' என்கிறார்
பூரணத்தம்மாளையா! அவர் கடைநிலை ஊழியராயிற்றே, அவரை இவர் எதற்கு பார்க்கவேண்டும் என்று விழிகளில் வினாக்களை தேக்கிவைத்துக் கொண்டு பூரணத்தம்மாளை அழைக்கின்றனர்.
![]() |
அவர் வந்ததும் வெங்கடேசன் எம்.பி.,பூரணத்தம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர், இல்லையில்லை கோடியில் ஒருவர், உங்களைப் போல மனிதத்தன்மை கொண்டவரை பார்த்ததே இல்லை என்று பல படக்கூறி அவரது கையைப்பிடித்து கண்களில் ஒற்றிக்கொள்கிறார்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டும்.
மதுரை கொடிக்குளத்தில் பிறந்து வளர்ந்தவர் பூரணத்தம்மாள்.
அவர் படிக்க ஆசைப்பட்டாலும் பிறந்து வளர்ந்த கிராமத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க பள்ளி இல்லாததால் அதற்கு மேல் படிக்க முடியாமல் போனவர்.
பூரணத்தம்மாளின் தாத்தா பேத்தியின் மீது கொண்ட பிரியம் காரணமாக தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் நிலமாக பேத்தியின் பெயரில் வாங்கிப்போட்டார்.
மதுரை கனரா பாங்கில் கடை நிலை ஊழியராக பணியாற்றிய உக்கிரபாண்டியனை திருமணம் செய்த பூரணத்தம்மாளுக்கு ஒரு மகளை கொடுத்துவிட்டு உக்கிரபாண்டியன் முப்பது வருடத்திற்கு முன்பாக திடீரென இறந்துவிட்டார்.,கருணை அடிப்படையில் அவரது வேலை பூரணத்தம்மாளுக்கு வழங்கப்பட்டது.
சிறு வயதிலேயே கணவரை இழந்த பூரணத்தம்மாளுக்கு மகள் ஜனனிதான் உலகமே.,மகளை நன்கு படிக்கவைத்தார்.,துரதிருஷ்டவசமாக ஒரு காய்ச்சல் காரணமாக மகள் ஜனனியும் இறந்துவிட்டார்.
இறக்கும் தருவாயில், மறைந்த தாத்தா உன்னையும், உன் மூலமாக என்னையும் படிக்கவைக்க நினைத்தார், ஆனால் அது முடியவில்லை, நமது கிராமத்தில் உள்ள பள்ளியை மேம்படுத்தி குழந்தைகள் அனைத்தும் நல்ல கல்வி பெற நீதாம்மா உதவி செய்யணும்3 என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்.
கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தகுதி உயரவேண்டுமானால் நல்ல வகுப்பறைகள் வேண்டும் இதற்கு நிறைய பணம் வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதைக் கேள்விப்பட்ட பூரணத்தம்மாள் தாத்தா தன் பெயரில் வாங்கிப்போட்ட சொத்தின் ஒரு பகுதியை பள்ளி வகுப்பறை கட்ட தானமாக முன்வந்தார்.
தாத்தா அப்போது ஆயிரங்களில் வாங்கிப் போட்ட 1புள்ளி 52 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு 7 கோடியாகும்.அதை விற்றால் பங்களா,கார்,வேலையாட்கள்,என்று சகல வசதிகளுடன் மகராணி போல பூரணத்தம்மாள் வாழமுடியும், ஆனால் அது பற்றி கவலைப்படாமல், கிராமத்து பிள்ளைகள் நன்கு படிக்கவேண்டும், இந்த சொத்தை வைத்து அல்லது விற்று அரசாங்கம் இங்கு வகுப்பறை கட்டித்தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரியிடம் முறைப்படி தனது நிலத்தை தானமாக ஒப்படைத்தார்.
பணம் இருக்கும் பல கோடீஸ்வரர்கள் கிள்ளிக் கொடுக்கக்கூட தயங்கும் இந்தக் காலத்தில் கொஞ்சமும் தயங்காமல் தனது 7 கோடி ரூபாய் சொத்தை அப்படியே அள்ளிக் கொடுத்த பூரணத்தம்மாள் அதற்காக எந்த பாராட்டையும் வாழ்த்தையும் எதிர்பார்க்காமல் மறுநாள் பாங்கிற்கு வேலைக்கு வந்துவிட்டார்.
இந்த விஷயம் பரபரப்பாக பரிமாறப்பட்டு எம்.பி.,யின் காதில் விழுந்ததை அடுத்து மறுநாள் பூரணத்தம்மாளை காணவும், பாராட்டவும், வாழ்த்தவும் விரும்பி பாங்கிற்கு வந்துவிட்டார்.
ஒரு குண்டு மணி தங்கம் கூட காதிலோ,கழுத்திலோ,கைகளிலோ அணிந்து கொள்ளாமல் சாதாரண சேலையில் எளிமையின் இலக்கணமாய் காணப்பட்ட பூரணத்தம்மாள் இப்போது கல்வித்தாயாக பாங்கில் உள்ள அனைவருக்கும் புலப்பட்டார்.,காலில் விழாத குறையாக அனைவரும் பூரணத்தம்மாளை வாழ்த்தி ஆசிபெற்றனர்.
இது பற்றி கேள்விப்பட்ட தமிழக முதல்வர் குடியரசு தின விழாவில் நேரில் அழைத்து கவர்னர் முன்னிலையில் விருது வழங்கி கவுரவித்தார்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்த பூரணத்தம்மாள் அடுத்து செய்த காரியம் இன்னும் பெரிது.
நிலத்தின் மதிப்பு தெரியாமல் கொடுத்துவிட்டார் தெரிந்திருந்தால் இவ்வளவு பெரிய தொகையுள்ள நிலத்தை அப்படியே துாக்கிக் கொடுத்திருக்கமாட்டார் என்று சிலர் நினைத்தார்கள்.
பாங்கில் பணியாற்றும் எனக்கு நிலத்தின் மதிப்பு பற்றிய தெரியும் ஆனால் பணத்தை விட கிராமத்து நலனை பெரிதாக மதிக்கிறேன் என் மகளின் வார்த்தையை தெய்வ வாக்காக கருதுகிறேன் இதோ என்னிடம் மிச்சம் உள்ள 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் இப்போது கொடுக்கிறேன் என்று சொல்லி சர்வேயர் காலணியில் இருந்த 91 சென்ட் நிலத்தை நேற்று மீண்டும் கல்வி அதிகாரியை சந்தித்து முறைப்படி தான பத்திரமாக வழங்கியுள்ளார்.
பூரணத்தம்மாளை என்னவென்று சொல்வது..
-எல்.முருகராஜ்


