கைவிடப்பட்ட விலங்குகள் காப்பகம் நடத்தும் 23 வயது இளைஞர் சாய் விக்னேஷ்
கைவிடப்பட்ட விலங்குகள் காப்பகம் நடத்தும் 23 வயது இளைஞர் சாய் விக்னேஷ்
PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM
![]() |
கணிசமாய் சம்பாதிக்கும், 23 வயது சென்னை இளைஞர் எப்படியிருப்பார். எல்லாவிதமான பொழுது போக்கு அம்சங்களையும் அனுபவித்தபடி, நண்பர்களுடன் நகரில் கார், பைக் சகிதம் ஜாலியாக வலம் வந்து கொண்டிருப்பார்.
ஆனால், இங்கே ஒரு இளஞைர் எல்லாவித சந்தோஷங்களையும் தவிர்த்துவிட்டு, 136 மாடுகள், 37 ஆடுகள், 110 நாய்கள், 3 முயல்கள், 3 பன்றிகள், 2 குதிரைகள், ஒரு கழுதை ஆகிய பிராணிகளை வளர்த்து வருகிறார். அதன் நலனிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். கேட்டால் அதுதான் என் சந்தோஷம் என்கிறார்.
![]() |
இந்த விலங்குகளில் பெரும்பாலானவை ரோட்டில் அடிபட்டது அல்லது நோய்வாய்ப்பட்டு மனிதர்களால் கைவிடப்பட்டவை என்பதுதான் இன்னும் முக்கியம்.
திருவள்ளூர் - திருத்தணி சாலையில் அமைந்துள்ள ராமஞ்சேரி பக்கம் உள்ள, சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ளது 'அல்மைட்டி விலங்குகள் காப்பகம்'.
இந்த காப்பகத்தை நடத்திவரும் இளைஞர் சாய் விக்னேஷ் கூறியதாவது:
எனக்கு சின்ன வயதில் இருந்தே, விலங்குகள் மீது பாசம் அதிகம். பின், கால ஒட்டத்தில் நான் படித்து, 'வெப் டெவலப்பர்' ஆக, சம்பாதித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு நாய்களை வீட்டிற்கு கொண்டு போய் வளர்த்தேன்.
பின், வாகனத்தில் அடிபட்ட இரண்டு நாய்கள் என, சிறுகச் சிறுக வீட்டில் நான் வளர்த்துவரும் நாய்களின் எண்ணிக்கை, 20ஐ தொட்டது.
![]() |
என் நாய்களின் மீதான பாசத்திற்கு பெற்றோர் ஆதரவாக இருந்தாலும், வீடு வாடகைக்கு விட்டவர் ஆதரவாக இல்லை; வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறிவிட்டார். நீண்ட நாள் குடியிருந்த வீட்டைக் காலி செய்தோம்.
இப்படியே, நான்கைந்து வீடுகள் மாறியபின், இந்த உலகம் விலங்குகளுக்கானது அல்ல. ஆகவே, நாமே இதற்கான ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பி, என் சமூக வலைத்தளத்தில், விலங்குகளுக்காக தனி இடம் தேடும் விஷயத்தை அறிவித்தேன்.
இப்போது, நான் காப்பகம் நடத்தும் இடத்தின் உரிமையாளர் சிவமணி என்பவர், என் நாய்ப் பாசத்தைப் பார்த்துவிட்டு, இந்த இடத்தை தானமாக வழங்கினார். இங்கு வந்த பின், இது கைவிடப்பட்ட அனைத்து விலங்குகளுக்கான காப்பகமாக மாற்றினேன்.
இந்த இடத்தில் விலங்குகளுக்கு தேவையான ெஷட் மற்றும் கட்டுமானப்பணிச் செலவிற்காக, என் பெற்றோர் மகாதேவன் - சுப்புலட்சுமி ஆகியோர், தங்களது பூர்வீக வீடை விற்று பணம் கொடுத்தனர். இறக்கும் வரை என் தாத்தா அழகுசுந்தரம் தான் வாங்கி வந்த பென்ஷன் தொகை முழுதையும் விலங்குகள் நலனிற்காக கொடுத்தார்.
ரோட்டில், வாகனங்களில் அடிபட்டு குற்றுயிராகக் கிடக்கும் மாடு, குதிரை, கழுதை என்று, எல்லா விலங்குகளையும் இங்கு கொண்டுவந்து, சிகிச்சை கொடுத்து காப்பாற்றி வளர்த்து வருகிறேன்.
கன்றுக்குட்டி, கர்ப்பமான மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்பது உத்தரவு. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு, அதைக் கொல்பவர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் உள்ள மாடுகளைப் பற்றி கேள்விப்பட்டு, சட்டப்படி மீட்டுக் கொண்டு வந்துள்ளேன்.
இதேபோல, கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் மாடுகளையும் மீட்டு வந்துள்ளேன். கால் இல்லாமல் உடல் ஊனத்தோடு பிறக்கும் ஆட்டு குட்டிகளைக்கூட, கறிக்காக வெட்ட துணியும்போது, அதைத்தடுத்து கொண்டு வந்து வளர்த்து வருகிறோம்.
எங்களைப்பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள், நோய்வாய்ப்பட்ட கோழி, முயல் போன்ற பிராணிகளைக்கூட கொண்டுவந்து கொடுத்துவிட்டு போயுள்ளனர். கழுதை ஒன்று வாகனத்தில், அடிபட்டு உயிருக்கு பேராடிக்கொண்டு இருந்தது. அதைக்கொண்டுவந்து வளர்த்து வருகிறோம்.
இப்படி ஆடு, மாடு, கழுதை, குதிரை என்று எல்லாவிதமான பிராணிகளும், அதனதன் இயல்பில் இங்கு வளர்ந்து வருகிறது. இறக்கும் தருவாயில் இருந்த விலங்குகள்கூட, இங்கு வந்தபின் பிழைத்து, தற்போது நன்கு வலம் வருகிறது. இந்த விலங்குகளும் உயிர்களே; அவைகளுக்கும் உணர்வு உண்டு.
ஆகவே, இங்கே அவைகளுக்கு உணவோடு சேர்த்து, அன்பும் புகட்டப்படுகிறது. இங்குள்ள எந்த விலங்கும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவது கிடையாது. அதாவது, பால்தரும் பசுமாடாக இருந்தால், அதன் பால் முழுவதும் கன்றுக்குத்தான்.
இங்குள்ள விலங்குகளை பாராமரிக்க, 15 பேர் பணியாற்றுகின்றனர். விலங்குகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படியே வளர்க்கப்படுகிறது. அவர்களும் தினமும் வந்து பார்த்துவிட்டு, தங்கள் மருத்துவ சேவையை வழங்குகின்றனர்.
விலங்குகளுக்கான உணவு, ஊழியர்களுக்கான சம்பளம், மருத்துவ செலவு உள்ளிட்ட பராமரிப்பு செலவு என்று, மாதம் 8 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. இதில், நான்கு லட்ச ரூபாய் நன்கொடையாளர்களாலும், என் சம்பளத்தாலும் சமாளிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை கடன் வாங்கி சமாளித்து வருகிறேன்.
என்ன வருமானம் வருகிறதோ; அதற்குள்தான் விலங்குகளை வைத்து சமாளிக்க வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறுகின்றனர், ஆனால், எல்லாராலும் கைவிடப்பட்ட விலங்கு ஒன்று, சாலையில் அடிபட்டு துடித்துக் கொண்டு இருக்கிறது என்று கேள்விப்பட்ட பின், அதை பொருளாதாரத்தை காரணமாக வைத்து கைவிட, என் மனம் மறுக்கிறது, இங்கே கொண்டு வந்து விடுகிறேன்.
இப்படியே விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இன்னும் எவ்வளவு விலங்குகள் வந்தாலும் பாதுகாக்க முடியும். ஆனால், பணம்தான் பிரச்னையாக இருக்கிறது. பார்ப்போம், நம்மை கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் என் தொழில் நிமித்தமாக, சென்னை அய்யப்பன் தாங்கலில் தங்கியிருக்க வேண்டியது அவசியம். அங்கிருந்து, 60 கி.மீ., துாரம் உள்ள இந்த காப்பகத்திற்கு, நாள் தவறாமல் வந்துவிடுவேன். என் செல்லங்களை பார்க்காமல் என்னாலும்; என்னைப் பார்க்காமல் என் செல்லங்களாலும் இருக்க முடியாது.
இதன் காரணமாக, நான் சென்னையை விட்டு எங்கேயும் போனது கிடையாது. சென்னைக்கு உள்ளேயே, உறவினர்கள், நண்பர்கள் விசேஷத்திற்கு போகக்கூட நேரம் கிடையாது. சினிமா பார்த்தே, 10 ஆண்டுகளாகிறது.
ஆனால், இதை எல்லாம் எனது தியாகமாக பார்க்கக்கூடாது; வாயில்லா ஜீவன்களுக்கு உதவ, இறைவன் நம்மை தேர்ந்து எடுத்துள்ளான் என்ற மகிழ்ச்சியே ஏற்படுகிறது.
எனக்கு உதவ இல்லையில்லை; இங்குள்ள விலங்குகளுக்கு உதவ நினைப்பவர்கள் பணமாகத்தான் தரவேண்டும் என்பது இல்லை. விலங்குகளுக்கான உணவாகவும் தரலாம் என்று கூறி முடித்த சாய் விக்னேைஷ, 89393 20846 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
----எல்.முருகராஜ்




