PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

காலை சூரியன் மெதுவாக எழுந்துகொண்டிருந்தது. சங்குமுகம் கடற்கரையின் அலைகள் வழக்கம்போல மணலை வந்து வந்து தழுவிக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அன்றைய தினம் வெறுமனே வந்து போகவில்லை ஒரு துயரத்தையும் கொண்டு வந்தது.
அந்த துயரத்திற்கு காரணம் இறந்து போன கடல் ஆமை.
அது ஒரு சாதாரண ஆமை அல்ல. ஆர்ப்பரிக்கும் கடல் அலைக்கு நடுவே ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திக் களித்த ஆமை. ஒருகாலத்தில் பவளப்பாறைகளின் நடுவே விளையாடி, கடல் புல்வெளிகளின் ஆழ அகலங்களில் அலைந்து திரிந்த ஆமை. ஆனால் இன்று மணலில் சடலமாக சரிந்திருக்கும் அதன் இறப்பு இயற்கையானதல்ல அதுதான் துயரம்.
ஒரு கடல் ஆமையின் உயிரிழப்பு, மொத்த கடல்சூழலின் சங்கிலியை உடைக்கும். ஆமை இல்லாமல், கடல் வளம் இல்லை,கடல் வளம் இல்லை என்றால் மனித வளமே இல்லை.
சங்குமுகத்தில் கடலில் இறந்து ஒதுங்கிய இந்த ஆமை இயற்கை வஞ்சிக்கும் மனிதர்களுக்கு நிறைய செய்திகளை சொல்லி எச்சரித்துள்ளது,எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் நல்லது.
-எல்.முருகராஜ்