sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நிஜக்கதை/நெகிழ வைத்த சிலம்ப ஆசான் பழனிவேலு

நெகிழ வைத்த சிலம்ப ஆசான் பழனிவேலு

நெகிழ வைத்த சிலம்ப ஆசான் பழனிவேலு

2


PUBLISHED ON : மே 26, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026 04:21 PM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,ஜனாதிபதி மாளிகையில் நேற்று நாட்டின் மிக உயரிய 'பத்ம விருதுகள்' வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.ஜனாதிபதி திரௌபதி முர்மு மேடையில் வீற்றிருக்க... பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய ஆளுமைகள் சபையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் ஆகச்சிறந்த அறிஞர்களும், மேதைகளும் கம்பீரமாக நடந்து வந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தப் பெரும் சபையில், ஒரு நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது.Image 1580776வெண்ணிற வேட்டி-சட்டையுடன், தூய்மையான எளிமையின் வடிவமாய் மேடையை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். திடீரென, அவர் பாரதப் பிரதமரின் முன்னால் நின்று, சற்றும் எதிர்பாராத விதமாக அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.Image 1580777இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, பதறியடித்துக் கொண்டு உடனே இருக்கையை விட்டு எழுந்து, அந்த எளிய மனிதரைத் தன் கரங்களால் தூக்கி நிறுத்தினார். அவரது கைகளைப் பற்றிக் குலுக்கி, நெஞ்சாரப் பாராட்டி, நெகிழ்வோடு வாழ்த்தினார். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு தலைவனும், அடித்தட்டில் இருந்து வந்த ஒரு கலைஞனும் கரம் கோர்த்து நின்ற அந்தக் காட்சி, அங்கிருந்த ஒட்டுமொத்த சபையையும் ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்தது.Image 1580778பிரதமரின் வாழ்த்தைப் பெற்று, மெல்லிய புன்னகையோடு குடியரசுத் தலைவரிடம் இருந்து தன் வாழ்நாள் அங்கீகாரமான 'பத்மஸ்ரீ' விருதை அவர் ஏந்தியபோது, அந்த அரங்கம் அதிரும் வண்ணம் கைதட்டல்கள் ஒலித்தன.Image 1580779யார் இந்த எளிய மனிதர்? டெல்லி மாளிகையையே திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் பேராற்றலின் பெயர் ஆசான் பழனிவேலு (53). தமிழ் மண்ணின் 5000 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை, தன் மூச்சாகக் கொண்டு வாழும் ஒரு உன்னதக் கலைக்காவலர்!

புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'பூரணங்குப்பம்' . அங்கிருந்த ஒரு எளிய குடிசை வீட்டில்தான் பழனிவேலுவின் வாழ்க்கை பிறந்தது.சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பாரம் அந்த ஏழைத் தாயின் தோள்களில் விழுந்தது. வீட்டு வேலை செய்து வரும் சொற்ப வருமானத்தில் தான் அந்தக் குடும்பத்தின் அடுப்பு எரிந்தது.

குடும்ப வறுமையின் கொடூரம், பழனிவேலுவை 7-ஆம் வகுப்போடு பள்ளிக்கூடத்திற்குப் பூட்டுப் போட வைத்தது. பசி தீர்க்கும் வழி தேடி, பேருந்தில் 'கிளீனர்' வேலைக்குச் சேர்ந்தார். விடிய விடிய உழைத்தால் தினக்கூலி வெறும் 3 ரூபாய்தான்! அந்த மூன்று ரூபாயையும் அப்படியே கொண்டு வந்து தாயின் கைகளில் கொடுத்துவிட்டு, பசியோடு தூங்கிய இரவுகள் நிறைய. தேநீர்க் கடையில் விற்கப்படும் ஒரு 'இனிப்பு போண்டா'வை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற அவரது ஆசையே, பல ஆண்டுகள் கழித்தே நிறைவேறியது என்றால், அவரது வறுமையின் ஆழத்தை புரிந்து கொள்ளவும்.

வறுமை உடலை வாட்டியதே தவிர, பழனிவேலுவின் மன உறுதியைக் குலைக்கவில்லை. வீட்டுக்கு அருகில் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம், அந்தப் பாலகனின் கண்கள் ஒளிரத் தொடங்கின. ஆர்வத்தோடு சிலம்பக் கூடத்திற்குள் நுழைந்தார். அன்றைய காலத்து குருமார்கள் ஒரு வித்தையை ஒருமுறைதான் சொல்லிக் கொடுப்பார்கள். அதைத் தன் மனதில் பதிய வைத்து, நிலவொளியிலும் இருளிலும் தூக்கத்தைத் தொலைத்து, விடிய விடியப் பயிற்சி செய்தார் பழனிவேலு.

உழைப்பால் பேருந்து கிளீனர் வேலையிலிருந்து, 'பேருந்து ஓட்டுநராக' உயர்ந்தார். ஸ்டீயரிங் பிடிக்கும் கைகள், ஓய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் சிலம்பக் கம்புகளைச் சுழற்றின. சிலம்பம் மட்டுமன்றி, தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான குத்துவரிசை, களரி, வாள் சண்டை, நெருப்பு வித்தைகள், புலியாட்டம் மற்றும் காலியாட்டம் என அனைத்து வீரக்கலைகளிலும் அசாத்திய நிபுணத்துவம் பெற்றார்.

நாடு முழுவதும் நடைபெற்ற வீர விளையாட்டுப் போட்டிகளில் களம் கண்டு, சுழன்றடித்த புயலென முதல் பரிசுகளைக் குவித்து, புதுச்சேரி அரசின் உயரிய விருதுகளையும் தன் வசமாக்கினார்.ஒரு கட்டத்தில், தான் கற்ற வித்தை தன்னோடு அழிந்துவிடக் கூடாது என்ற தீர்க்கமான முடிவு அவருக்குள் பிறந்தது. பஸ் டிரைவர் வேலையை விட்டுவிட்டு. 'மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக் கலை மேம்பாட்டுக் கழகத்தை' நிறுவி முழு நேர சிலம்ப பயிற்சியாளரானார்.

'கலை என்பது வியாபாரமல்ல; அது நம் இனத்தின் அடையாளம்' என்று முழங்கிய ஆசான் பழனிவேலு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்குத் தான் கற்ற அத்தனை கலைகளையும் முற்றிலும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

இன்று பெண்களுக்கு எதிரான அநீதிகள் பெருகி வரும் சூழலில், சிலம்பம் அவர்களுக்கு ஆயுதமாக மாறும் என்பதை உணர்ந்தார். பெண்களுக்கு எனத் தனிப்பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி, அவர்களை வீர மங்கைகளாக மாற்றினார். அச்சம் தவிர்த்து, நேர்க்கொண்ட பார்வையுடன் பெண்கள் சிலம்பம் சுழற்றியபோது புதுச்சேரி மண்ணே வியந்து பார்த்தது.

பூரணங்குப்பத்து மண்ணில் சுழன்ற பழனிவேலுவின் சிலம்பக் கம்பு, மெல்ல மெல்ல உலக அரங்குகளை நோக்கிப் பாய்ந்தது. இவரது குழுவினரின் அசாத்திய சிலம்பக் கலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கடல் கடந்து துபாய், பாரீஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அரங்கேறி, உலகத் தமிழர்களையும், மாற்று இனத்தவர்களையும் வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றன.

யாரோ ஒரு பெரும் புள்ளிக்கோ, பரிந்துரையின் பெயரிலோ விருதுகள் வழங்கப்படும் வழக்கத்தை உடைத்து, 'தேசிய அளவில் அறியப்படாத, ஆனால் அடித்தட்டில் நின்றுகொண்டு சமுதாயத்திற்குப் பங்காற்றும் உண்மையான நாயகர்களை'த் தேடிக் கண்டுபிடித்துக் கௌரவிப்பதே தற்போதைய பத்ம விருதுகளின் பெருமையாகும். அந்த வகையில், பூரணங்குப்பத்துத் தாயின் புதல்வன் ஆசான் பழனிவேலுவுக்கு இந்த 'பத்மஸ்ரீ' விருது தேடி வந்துள்ளது.

இது பழனிவேலு என்ற தனிமனிதருக்குக் கிடைத்த விருது மட்டுமல்ல; தமிழர்களின் ஐந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான, ரத்தமும் சதையுமான வீர வரலாற்றைக் கொண்ட 'சிலம்பக் கலைக்கு' இந்தியத் திருநாடு சூட்டியுள்ள மகுடமாகும்!

பத்மஸ்ரீ பழனிவேலுவை வாழ்த்த விரும்புபவர்களுக்காக அவரது எண்:???? 90039 62155 (அவர் டில்லியில் இருப்பதால் ஒரு வேளை நீங்கள் அழைக்கும் போது எடுக்காமல் இருக்கலாம் பொறுயுடன் முயற்சிக்கவும்)

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us