PUBLISHED ON : ஆக 06, 2018

இந்த ஆண்டின் 'சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டி' (International Physics Olympiad 2018) போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் சமீபத்தில் நடந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சர்வதேசப் போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர்.
பாஸ்கர் குப்தா (மகாராஷ்டிரம்), லே ஜெயின், பவன் கோயல் (ராஜஸ்தான்); நிஷாந்த் அபங்கி (குஜராத்), சித்தார்த் திவாரி (மேற்கு வங்காளம்) ஆகிய ஐவரும்தான் அந்தத் தங்கங்கள்!
1998இல் இருந்து, இந்திய மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றாலும், பங்கேற்ற ஐவருமே தங்கப் பதக்கம் பெற்றது இதுவே முதல் முறை.
இயற்பியல் மீது அபார விருப்பம் கொண்ட ஐவருமே, ஒலிம்பியாட் தேர்வுகளில் பங்கேற்பதற்காகவே, சிறுவயதில் இருந்து இயற்பியலைத் தெளிவாகக் கற்றுவந்தனர். 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சர்வதேச ஜூனியர் ஒலிம்பியாட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 86 நாடுகளில் இருந்து 396 மாணவர்கள் கலந்துகொண்ட சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில், சீன மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இடையில்தான் கடும்போட்டி நிலவியது. சீனாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் தங்கம் வென்றனர். முழுமையான வெற்றியாளராக (absolute winner) சீனாவின் யான் டியான்ஹுவா அறிவிக்கப்பட்டார்.
1967 முதல் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்களின் இயற்பியல் பார்வையைக் கூர்மைப்படுத்தி, ஆய்வு உலகத்துடன் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும், அரசு சார் அறிவியல் அமைப்பு ஒன்று, தேசிய அளவிலான ஒலிம்பியாட் தகுதித் தேர்வுகளை நடத்தும். பல்வேறு கட்டங்களாகத் தேர்வு நடத்தி, ஒவ்வொரு நாடும் ஐந்து மாணவர்களை சர்வதேசப் போட்டிக்கு அனுப்பும். இந்தியாவில், அணுசக்தி துறையின் கீழ் இயங்கும், மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
சர்வதேச அளவிலான இறுதிப் போட்டியில், கோட்பாட்டு இயற்பியலில் இரண்டு தாள்கள், செய்முறை இயற்பியலில் இரண்டு தாள்கள் என மொத்தம் நான்கு தேர்வுகள், தலா 5 மணி நேரம் நடந்தன.
என்ன மாதிரியான கேள்விகள்?
பூமியை ஈர்ப்பு அலைகள் (Gravitational waves) கடந்து சென்றதை, 2015இல், ஈர்ப்பு அலைகள் ஆய்வகமான LIGO முதன்முதலில் பதிவு செய்தது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பாக, இது கொண்டாடப்படுகிறது. இரு கருந்துளைகள் இணைந்ததன் விளைவாக, அந்த அலைகள் வெளிப்பட்டன.
இந்த ஆண்டு ஒலிம்பியாட் தேர்வில், இதை ஒட்டிய கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கருந்துளைகளின் வேகத்தைக் கண்டறிந்து, ஒப்பீட்டளவில் அவை சிறியவை என்று நிறுவச் சொல்லும் கேள்விகள் இருந்தன.
சூரியனைவிட அந்தக் கருந்துளைகள் 3,000 மடங்கு சிறியவை; நிறை ௩௦ மடங்கு அதிகம். ஒளியின் வேகத்தில் (நொடிக்கு 3 லட்சம் கி.மீ.), 20 சதவீத வேகத்தில் அந்தத் துளைகள் சுற்றும் என்றும் மாணவர்கள் கண்டறிய வேண்டும். எவ்வளவு அறிவுச்செறிவு இருந்தால், இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளித்து, நமது இந்திய மாணவர்கள் தங்கத்தை வென்றிருப்பார்கள்!
