PUBLISHED ON : ஆக 06, 2018

இப்போதான் பள்ளிக்கூடம் ஆரம்பித்தது போலிருந்தது. உடனே, வகுப்புத் தேர்வுகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்க ஆரம்பித்துவிட்டன. செப்டம்பர் மாதம் முதல் பருவத் தேர்வு வந்துவிடும். நினைக்கும்போதே வயிற்றை லேசாகப் பிசையத் தொடங்கிவிட்டது. வகுப்புத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் ஒரு அத்தியாயம், அரை அத்தியாயம் தான் சிலபஸ். சுலபமாகப் படித்துவிடலாம் என்று நினைப்போடு ஆரம்பித்தால், எல்லாமே புதுசாகத் தெரிகிறது. இத்தனைக்கும் இவையெல்லாம் வகுப்பில் நடத்தப்பட்டவை. நன்றாகக் கவனித்தவை. ஆனாலும், எல்லாமே படிக்காத மாதிரியே இருக்கின்றன.
எனக்கு மட்டும்தானா இந்தப் பிரச்னை என்று சந்தேகம் ஏற்பட்டது. ஓவியாவிடம் கேட்டேன். அவளுக்கும் இதே பிரச்னை தான். படித்தபோது புரிகிறது. ஆனால், ஒரு வாரம், பத்து நாட்களில் படிப்படியாக படித்த பல அம்சங்கள் மறந்துபோய்விடுகின்றன. மீண்டும் எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கவேண்டி இருப்பதாகச் சொன்னாள் ஓவியா.
உமா மிஸ்ஸிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, “இது வழக்கமான பிரச்னைதான். ரொம்ப சுலபத்துல தீர்த்துடலாம்.” என்றபோது ஆச்சரியமாக இருந்தது.
“எப்படி மிஸ்?”
“ரொம்ப சுலபம். நீங்க படிக்கும்போது, நுனிப்புல் மேயறீங்க. அதுதான் பிரச்னை. ஆழமாக மனத்தில் வாங்கிக்கொள்வதில்லை. புரிந்தமாதிரி இருக்கும். ஒரு நாள், இரண்டு நாட்களில் மறந்துபோக ஆரம்பிச்சுடும். இதைத் தீர்ப்பதற்குத் தான் அந்தக் காலத்துல 'எழுதிப் பார்க்கணும்'னு சொன்னாங்க. அதுக்குப் பின்னே ஒரு லேர்னிங் டெக்னிக் இருக்கு.”
“அது என்ன மிஸ்?”
“ரிச்சர்டு ஃபெயின்மென்னு ஒரு இயற்பியலாளர் இருந்தார். நோபல் பரிசு வாங்கினவர். நல்ல ஆய்வாளர் மட்டுல்ல; நல்ல ஆசிரியரும்கூட. உண்மையிலேயே அவர்கிட்ட படிச்சவங்க அதிர்ஷ்டசாலிகள். அவர் உருவாக்கின உத்திக்கு 'ஃபெயின்மென் டெக்னிக்'ன்னு பேரு.”
“என்ன டெக்னிக் மிஸ் அது?”
“நீங்க என்ன படிச்சீங்களோ, அதை உங்களுக்கு நீங்களே விளக்கிக்கொள்வதுதான் இந்த உத்தியோட அடிப்படை. இதுல நான்கு ஸ்டெப்ஸ் உண்டு. இதைப் பின்பற்றினால், வேகமாகப் புரிஞ்சுக்கறது மட்டுமல்ல; ஆழமாகவும் பதியும்.” என்றவர், அந்த உத்தியை விளக்க ஆரம்பித்தார்.
முதலில் எந்த ஒரு கருத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோமோ, அதன் தலைப்பை ஒரு காகிதத்தின் மேலே எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, 'புவியீர்ப்பு விசை' பற்றிப் படிக்கிறீர்கள் என்றால், அதுதான் மேலே உள்ள தலைப்பு. இதுதான் முதல் படி.
அடுத்த படி, அந்தத் தலைப்பு பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ, ஞாபகம் இருக்கிறதோ அதையெல்லாம் எழுதவேண்டும். அதுவும் உங்களுக்கான மொழியிலேயே. இது தேர்வு இல்லை. உங்களுக்காகவே எழுதுகிறீர்கள் எனும்போது, எந்தவிதமான தயக்கமோ, பயமோ தேவையில்லை. யாரிடமும் காண்பிக்கப் போவதும் இல்லை. இதில் சரி, தப்பு என்று எதுவும் இல்லை.
அதேசமயம், பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் 'புவியீர்ப்பு விசை'யைப் பற்றி விளக்கினால், எப்படி நிதானமாக, விரிவாக விளக்குவீர்களோ, அப்படி எழுத வேண்டும். கூடவே அது தொடர்பாக உங்களுக்கு ஞாபகம் வரக்கூடிய உதாரணங்கள், கணக்குகள், நபர்களுடைய பெயர்கள் ஆகியவற்றையும் எழுதி வையுங்கள்.
இப்படி எழுதும்போதுதான், பல உண்மைகள் தெரியவரும். எழுதிய விளக்கம் சரியா, கொடுத்த எடுத்துக்காட்டுகள் சரியா, பயன்படுத்திய கலைச்சொற்கள் சரியா என்று சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். இப்படி ஒரு சொல்லைப் போட்டிருக்கிறோமே, இதன் பொருள் தெரியுமா என்று திடீரென்று கேள்வி பிறக்கும். ஏதோ ஒரு வரிசைக்கிரமத்தில் எழுதியிருப்போம். அதுதான் சரியான வரிசை முறையா என்ற சந்தேகமும் வரும். இதுதான் மூன்றாவது படி.
சொல்லப் போனால், இரண்டு பத்தி எழுதுவதற்குள் மண்டை காய்ந்துவிடும். ஒவ்வொரு வார்த்தையும் உங்களைப் பார்த்து முறைக்கும், சவால் விடும், சண்டைக்கு அழைக்கும். புரிந்துகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்ததை வாந்தி எடுத்திருக்கிறாய் என்று கேலி பேசும்.
இங்கிருந்து நான்காவது படி ஆரம்பிக்கிறது. எந்தெந்தச் சொல் புரியவில்லையோ, எந்தெந்தக் கருத்து தெளிவில்லாமல் இருக்கின்றனவோ, அவற்றை மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். எங்கே புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கக்கூடிய தர்க்கங்கள் எதிர்ப்பட்டனவோ, அவற்றைச் சிடுக்கை அவிழ்ப்பதுபோல் அவிழ்த்து புரிந்துகொள்ள வேண்டும். பாடப் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பதை, இப்போது நிதானமாக மனத்தில் வாங்கிக்கொள்ள முடியும்.
விளக்கமாக அதே பத்திகளை மீண்டும் எழுதவேண்டும். ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு கருத்தையும் அதற்குள் இருக்கும் நுட்பமான தொடர்புகளையும் தர்க்கங்களையும் வாதங்களையும் புரிந்துகொண்டு எழுதவேண்டும். சட்டென 'புவியீர்ப்பு விசை' என்பது மோரில் இருந்து திரண்டு வரும் வெண்ணெய் போல் உங்கள் மனத்தில் உருவம் பெற்றிருக்கும்.
இந்த உத்தியின் அடிப்படையே எளிமைதான். புரியாத சொற்கள் என்று எதையும் விட்டுவிடாதீர்கள். பின்னால் தெரிந்துகொள்ளலாம் என்று எந்தக் கருத்தையும் விட்டுவிடாதீர்கள். மேலும், எல்லாவற்றையும் உங்களுக்குப் புரிந்த மொழியில் மிகமிக எளிமையாக எழுதிவைக்கப் போகிறீர்கள். முடிந்தது கதை.
கணிதம், அறிவியல், ஆங்கிலம், வரலாறு என்று எல்லா பாடங்களுக்கும் பொருந்தக்கூடிய உத்தி இது. புரிந்துகொள்வது என்பது ஒருவகையில் மனத்துக்குள் மறு உருவாக்கம் செய்துகொள்வது, காட்சிப்படுத்துவது. அதற்கு உதவுவதுதான் ஃபெயின்மென் டெக்னிக்.
“நான் என்ன புரிஞ்சுக்கிட்டிருக்கேன்னு எனக்கு நானே சவால்விட்டு, அதுல வெற்றி பெறுவதுதான் ஃபெயின்மென் டெக்னிக்னு சொல்லலாமா மிஸ்?”
“கரெக்ட். படிப்புங்கறது வெளியில இருந்து வருவதில்லை. அது நமக்குள்ளே கிடைக்கும் தெளிவு. அதனால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல், உண்மையாக இருந்தால், நிச்சயம் எல்லா விஷயங்களும் புரிந்துவிடும். அவரோட புகழ்பெற்ற மேற்கோள் என்ன தெரியுமா?
“என்ன மிஸ்?”
“உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்பதுதான், முதல் கொள்கை. ஏனெனில், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது சுலபம் (The First Principle is that you must not fool yourself - - and you are the easiest person to fool).”
