PUBLISHED ON : டிச 30, 2019
ஆர்ட் அண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்கிற அமைப்பு, இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி 'ப்ரஹார் 8' என்கிற மெகா இசை நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியது. மும்பை சண்முகானந்தா அரங்கில் நடந்த நிகழ்வு, இசை ரசிகர்களை மட்டும் அல்லாமல் விற்பன்னர்களையும் பெரிதும் ஈர்த்தது.
இடைவெளி இல்லாமல் 8 மணி நேரம், 8 கலைஞர்கள், தலா ஒரு ராகம் என 8 ராகங்கள் என்பதாக இந்த நிகழ்வு மிகவும் ஆழமும் விரிவுமாக அமைக்கப்பட்டிருந்தது.
பண்டிட் ஜஸ்ராஜின் மகளான துர்கா ஜஸ்ராஜின் இந்த அமைப்பு ஹிந்துஸ்தானி இசைக்கு மாத்திரம் என்று ஒதுங்கி நிற்பதில்லை. இந்திய இசை வடிவங்கள் அனைத்திலும் கவனம் செலுத்துகிறது.
அவற்றில் வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் சிறப்பு அம்சங்களைப் பிடித்து நிறுத்திப் பாதுகாத்து வருகிறது. அதன் ஓர் அம்சமாகத்தான் 'டைம் தியரி ஆஃப் மியூசிக்' என்கிற இந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராகங்களின் நுணுக்கங்களையும், இசை இடையிட்ட உரையாக நிகழ்த்திக்காட்ட, பர்வீன் சுல்தானா, சுபா முத்கல் போன்ற பெரும்புள்ளிகள் வந்திருந்தனர். கடைசிக் கட்ட நிகழ்வாக பண்டிட் ஜஸ்ராஜ் இசை வகுப்பும் செம்மையாக நடந்தேறியது.
இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வில் பங்கேற்ற உத்வேகத்துடன் பார்வையாளர்கள் கலைந்தனர்.
