PUBLISHED ON : டிச 30, 2019
இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் பெரிய அளவிலான நாட்டுப்புறக் கலை விழா - RIFF. இதற்கு Rajasthan International Folk Festival என்பது விரிவாக்கம்.
உலகின் பல பகுதிகளில் இருந்தும் இசை ரசிகர்களும் கலை விரும்பிகளும் வந்து குழுமும் பெரும் நிகழ்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்தது.
அந்தந்த நாட்டின் பாரம்பரிய வாத்தியக் கலைஞர்கள் பங்குபெறும் தனிக் கச்சேரிகள் மட்டுமல்லாது, நம் இந்திய பாரம்பரியக் கலைஞர்களோடு அவர்கள் இணைந்து நடத்தும் ஜுகல்பந்தியை நேரடியாகப் பார்ப்பதும் கேட்பதும் வரம்.
இரானிய வாய்ப்பாட்டுக் கலைஞர் மக்கன் அஷ்க்வாரி, ஆஸ்திரேலிய டிரம்ஸ் கலைஞர் பீட்டர்சன் மற்றும் டாம் தம் ஆகிய மூவரும் இணைந்து நடத்திய கூட்டுக் கலவை ஏகப் பிரமாதம். தன் வாயினாலே பல பாரம்பரிய இசைக் கருவிகளின் ஒலிகளை மிகத் துல்லியமாகக் கொண்டுவந்து பிரமிக்கவைத்தார் டாம் தம்.
அடுத்ததாக, அதே மேடையில் டிரம்மர் பீட்டர்சனுடன் ஸ்பானிஷ் இசைக் கலைஞர்கள் (பெண்கள்) ஒலையா மனெரியொ, ஸபெலா மனெரியொ, எய்டா டாரியொ ஆகிய மூவரும் கையில் டாம்போரின் கருவி (நம் கஞ்சிராவை ஒத்த பாரம்பரிய ஒலிக் கருவி), கூட ஒரு அக்கார்டின் இசைக் கலைஞருடன் ஸ்பானிய நாட்டுப்புறப் பாடலைப் பாடத் தொடங்கினர். அந்தந்த இசை வடிவத்தின் மேல் அவர்கள் காட்டும் ஆளுமை - நாம் இதுவரை கேட்டிராத கூட்டு ஒலி, நம்மை இந்த உலகை விட்டு எங்கேயோ அழைத்துச் சென்றது.
இது முடிந்ததும், அதே ஸ்பானிய ஆஸ்திரேலியக் கலைஞர்களுடன் நம் இராஜஸ்தான் வாத்தியக் கலைஞர்கள், கர்த்தால் மோர்ச்சங், கமைச்சா, சாரங்கியுடன் மேடைக்கு வர , உடன் சில இராஜஸ்தானிய வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் சேர்ந்து தொடங்கினர். இத்தனை பாரம்பரிய இசை வடிவங்களையும் ஒரு ஜுகல்பந்தி வடிவில் கேட்கும் அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
இத்தனை பெரிய அனுபவத்துக்குப் பின், மறுநாள் அதிகாலை, ஜஸ்வந்த் தடா என்னும் இடத்தில் ஒரு கோவிலுக்கு முன் இந்துஸ்தானிய வாய்ப்பாட்டுக் கலைஞர் வித்யா ராவின் தும்ரி மற்றும் டாத்ராவுடன் தெய்வீகமாக இசை விழா நிறைவடைந்தது.
- அரவிந்த் யுவராஜ்
