PUBLISHED ON : டிச 30, 2019
நான் ஹாங்காங் போனபோது, ஒரு விஷயத்தைப் பார்த்தேன். நம்ம ஊர் டெபிட் அட்டை மாதிரி ஓர் அட்டையை அங்கே பெற்றுக்கொள்ளலம். அதற்கு 'ஆக்டோபஸ் கார்டு' என்று பெயர்.
அதைக் கொண்டு பைக்குக்கு பெட்ரோல் போடலாம், சினிமா டிக்கெட் வாங்லாம், பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கலாம், இரயில் டிக்கெட் வாங்கலாம், முடிதிருத்தகத்தில் பணம் செலுத்தலாம். எல்லாமே சின்னச் சின்ன தொகைதான். அந்தச் சின்ன தொகையைக் கூட 'ஆக்டோபஸ் கார்டு' மூலம் செய்துகொள்ள முடிந்தது.
தற்போது அதேபோன்ற கார்டு இந்தியாவில் அறிமுகமாகப் போகிறது. இதற்கு 'ப்ரீபெய்டு பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்' (பி.பி.ஐ.) என்று பெயர். இதில், பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் லோடு செய்துவைத்துக்கொள்ள முடியும். ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1,20,000 வரை செலவு செய்யலாம். எங்கேயும் பின் நம்பர் போட வேண்டாம். கையெழுத்துப் போடவேண்டாம்.
இந்தக் கார்டை நீட்டினாலே போதும், கடைகளிலோ, வணிக நிறுவனங்களிலோ, மால்களிலோ எங்கே வேண்டுமானாலும், ஏற்றுக்கொள்ளப்படும். பணம் உடனடியாக அடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
இந்தப் பி.பி.ஐ. கார்டுக்கும் டெபிட் கார்டுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இதனை
'ஹேக்' செய்ய முடியாது. தேவைப்பட்ட தொகையை இதில் லோடு செய்துகொள்ள முடியும். வங்கிகளும் இதர 'வேலட்' நிறுவனங்களும் பி.பி.ஐ. கார்டுகளை விரைவில் அறிமுகம் செய்யும்.
அதாவது சிறிய தொகைகளைக் கூட இனி நீங்கள் கையில் எடுத்துப் போகத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் மிகச் சுலபமாகப் பயன்படுத்த முடியும்.
ஏற்கெனவே இணையப் பணப் பரிமாற்றம், எளிமையாக ஆகியிருக்கிறது. தற்போது, அதன் பயனை சாதாரணர்களும் பெறுவதற்கு பி.பி.ஐ. கார்டுகள் உதவப் போகின்றன.
2019ஆம் ஆண்டின் மிக முக்கியமான முன்னேற்றமாக இதைப் பார்க்கிறேன்.
ஷ்யாம் சேகர்,
பொருளாதார ஆலோசகர்
