PUBLISHED ON : ஜூலை 02, 2018

யூசுப் சலீம், பிறவியிலேயே பார்வைத்திறன் சவால் கொண்டவர். எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவியை நாட வேண்டி இருந்தாலும், அதற்காகச் சோர்ந்துவிடவில்லை. படிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். சிறு வயது முதலே எல்லாவற்றையும் கேட்டுத், தெரிந்துகொள்ளும் வழக்கமுடையவர். சொல்லிக்கொடுப்பதை அப்படியே கேட்டுக்கொள்ளாமல், கேள்விகள் கேட்டு, தெளிவு பெற்றுக்கொள்வார். இப்பழக்கம் அவரைச் சட்டம் படிக்கத் தூண்டியது. பள்ளிப்படிப்பை முடித்ததும், சட்டப் படிப்பில் சேர்ந்து, தேர்ச்சி பெற்றார். நீதிபதி ஆவதுதான் அவரது அடுத்த இலக்காக இருந்தது. கடின உழைப்பிற்குப்பின் அத்தேர்விலும் வெற்றிபெற்றார். உரிமையியல் நீதிபதிக்கான தகுதித்தேர்வை 6 ஆயிரத்து ஐநூறு பேர் எழுதினர். அதில் வெற்றிபெற்ற 21 பேர்களில் யூசுப்பும் ஒருவர்.
பார்வைக்குறைபாட்டைக் காரணம்காட்டி, நேர்முகத் தேர்வில் அவரை தேர்வாணையம் நிராகரித்தது.
இச்செய்தி ஊடகங்களுக்குத் தெரியவர, அவை யூசுப்பிற்கு ஆதரவாகக் களமிறங்கின. ஊடகம் வழி அறிந்துகொண்ட பாகிஸ்தான் தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து இவ்வழக்கை எடுத்துக் கொண்டார். 'நீதிபதியாவதற்கு, ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு தடையாக இருக்க முடியாது' என்று அவர் தன் தீர்ப்பில் தெரிவித்தார். மேலும், யூசுப்பின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இவர் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படியும் உத்தரவிட்டார். விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்ட யூசுப், பாகிஸ்தானின் முதல் பார்வை சவால் கொண்ட நீதிபதியாகி இருக்கிறார். ஆம், லாகூர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு இரண்டு சகோதரிகள். ஒருவர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இன்னொரு சகோதரியும் பார்வைத்திறன் சவால் கொண்டவர், அவரும் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுப்பணித்தேர்வு எழுதி வெற்றிபெற்று, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
