PUBLISHED ON : அக் 03, 2016

காபி கப்பை பென் ஸ்டாண்ட்டாக பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அதில் பெயின்டிங் செய்து பார்த்திருக்கிறீர்களா? இந்த வாரம் அதைத்தான் செய்யப்போகிறோம்.
'ஐயோ! எனக்கு பெயின்டிங் எல்லாம் வரையத் தெரியாது. ஆளை விடுங்கள்!' என்று பயப்படத் தேவையில்லை. தூரிகை பிடிக்காமல், ஏன்? வழக்கமான பெயின்ட் கூட பயன்படுத்தாமல், வெறும் நெயில் பாலிஷ் கொண்டு, எளிமையான முறையில் பெயின்ட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை நிற பீங்கான் காபி கப்
2. நெயில் பாலிஷ்
3. அகன்ற பாத்திரம்
4. தண்ணீர்
பாத்திரத்தில் காபி கப் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் நிரப்பி, அதில் நெயில் பாலிஷை துளித்துளியாக ஊற்றவும்.
தண்ணீரின் மேற்பரப்பில் காபி கப்பின் மேற்பரப்பு மட்டும் படுமாறு சுழற்றவும். நீரில் தெளித்த நெயில் பாலிஷ், மாடர்ன் ஆர்ட் ஓவியம் போல காபி கப்பின் வெளிப்பகுதியில் படிந்துவிடும்.
குறைந்தது இரண்டு மணி நேரம் நன்கு காய விடவும்.
நம் விருப்பத்திற்கு ஏற்ப நெயில் பாலிஷின் அளவைக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம். ஒரே நேரத்தில் பல வண்ணங்களைக் கலந்தும் பயன்படுத்தலாம். அடுத்தென்ன? உங்கள் நண்பர்களுக்குப் பிடித்த வண்ணங்களில் மாடர்ன் ஆர்ட் கப் செய்து, அவர்களுக்குப் பரிசளிக்க வேண்டியதுதான்.
- ஓவியா டீச்சர்
