தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சின்ன விஷயங்களின் ரசிகர்

சின்ன விஷயங்களின் ரசிகர்

சின்ன விஷயங்களின் ரசிகர்


PUBLISHED ON : ஆக 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சூரியன் மீண்டும் எழுவான்;

வெய்யிலோ மீண்டும் தோன்றும்;

ஆனால், என் தோட்டத்துப்

பச்சைப் பசும்புல்லில்

பனித்துளிகளை

எல்லா பருவங்களிலும்

காண இயலாது'

இந்தக் கவிதையை எழுதியவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். சூரியன் ஓர் இரவுப்பொழுது சென்றுவிட்டால் மீண்டும் வந்து விடுவான். தன் கதிர்களை விரித்து பூமி எங்கும் வெய்யிலைப் பரப்புவான். ஆனால், இரவின் குளிரால் புல்லின் நுனியில் படர்ந்திருக்கும் முத்துப் போன்ற அந்தப் பனித்துளியை எப்போதும் பார்க்க இயலாது. அதற்குரிய பருவத்தில் மட்டும்தானே பார்க்க முடிகிறது... என்று ஏக்கத்தோடு இயற்கையை வர்ணித்திருக்கிறார் வாஜ்பாய்.

இந்தியப் பிரதமராக இருந்தவர், தோட்டத்தின் மூலையில் எங்கோ படர்ந்திருக்கும் புல்லின் பனித்துளியைக் கண்டு ரசித்து, அதைக் கவிதையாக எழுதியிருக்கிறார். வாழ்வில் சின்னச்சின்ன அற்புதங்களைக்கூட அவர் அலட்சியப்படுத்தவில்லை, நுணுக்கமாக ரசித்திருக்கிறார். வாஜ்பாய் இந்தியில் எழுதிய கவிதை நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் வாஜ்பாய். சின்னப்பிள்ளை என்ற மதுரையைச் சேர்ந்த பெண், படிக்காத பெண்களுக்காகச் சமூகத் தொண்டு செய்வதை அறிந்து, அவரது கால்களைத் தொட்டு வணங்கியவர். தேசத்தின் மீது மிகுந்த பற்று வைத்தவர்.

நம் நாட்டின் மீது அவருக்கு எந்த அளவிற்கு பற்று இருந்ததோ அதே பற்று அண்டை நாடுகளுடனும் இருந்தது அவருக்கு. அவர் அண்டை நாடுகளுடன் நல்லுறவையே விரும்பினார்.

கார்கிலில் ஆக்கிரமிப்பு செய்த பாகிஸ்தானுடன் வாஜ்பாய் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேருந்து வசதியை ஏற்படுத்தினார்.

ஈராக்கிற்கு எதிராகப் போரிட அந்நாட்டுக்கு இந்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. அதை அவர் சார்ந்த பா.ஜ.க. ஆதரித்தது. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய், இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், 'ஜனநாயக நாடான இந்தியா, ஈராக்கிற்கு எதிராகப் படைகளை அனுப்பாது' என அறிவித்தார்.

* வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார்.

* 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

* 1957இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

* 1977இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

* 1996இல் முதல் முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற வாஜ்பாய், 13 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.

* 1998இல் மீண்டும் பிரதமரான வாஜ்பாய், 13 மாதங்களில் ஆட்சியை இழந்தார்.

* 1999இல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று, வாஜ்பாய் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

* பத்ம பூஷண் விருது பெற்ற வாஜ்பாய்க்கு, 2014இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us