PUBLISHED ON : ஆக 20, 2018

தமிழில் வல்லின உயிர்மெய்யெழுத்துகளில் (கசதப வரிசை) தொடங்கும் சொற்கள் பல இருப்பினும், அவ்வெழுத்துகளில் தொடங்கும் வடமொழிச் சொற்கள் குறைவாகவே இருக்கின்றன. இப்பகுதியில் தகர வரிசையில் தொடங்கும் வடமொழிச் சொற்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
தனலட்சுமி, தனசேகர் என்று பெயர் வைக்கிறோம். அப்பெயர்கள் வடசொற்களால் ஆனவை. தனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். இறந்தோரைத் தீயிட்டுச் சுடும் 'தகனம்' என்ற சொல்லும் வடசொல்லே. எரித்தல் என்பது அதன் பொருள். ஒருவருக்குக் கொடுத்து விடுவதை வடமொழியில் 'தத்தம்' என்கிறார்கள். ஒருவருக்குப் பணிந்து தருவதைத் 'தட்சிணை' என்கிறார்கள். அதனைத் தமிழில் காணிக்கை என்று சொல்ல வேண்டும். விரைவுச் செய்தியைக் குறிக்கும் 'தந்தி' என்பதும் வடசொல்லே. தந்திரம் என்னும் வடசொல் சூழ்ச்சி என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாக இருக்கிறது. தந்தம் என்பது யானைப்பல்.
இல்லறத்தார் இருவரையும் தம்பதி என்கிறது வடமொழி. இணையவர் என்பது தமிழ். தயவு, தயை ஆகிய இரண்டும் வடசொற்களே. அன்புமிகுந்த இரக்கத்தைக் குறிப்பவை அவை. அதற்குக் கண்ணோட்டம் என்ற பழஞ்சொல்லும் இருக்கிறது. தரிசனம் என்பதைப் பார்வை என்று தமிழில் சொல்ல வேண்டும். தற்காலத்தில் தருணம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அதற்கு மாற்றாக வேளை, பொழுது என்று சொல்லலாம். அத்தருணத்தில் என்று எழுதாமல் அவ்வேளையில் என்று எழுதுவது சிறப்பு.
தராசு என்பதை நிறைக்கோல், எடைக்கோல் எனலாம். தாசன் என்பதும் வடசொல்தான். அடியார் என்பது அதற்கிணையான தமிழ்ச்சொல். கண்ணதாசன் என்பதற்குக் 'கண்ணனின் அடியார்' என்பது பொருள். தாவரம் என்னும் வடசொல் மரஞ்செடிகொடிகளைக் குறிப்பது. தானம் என்பது ஈகை. திடம் என்பதைத் திண்மை, திட்பம் என்று தமிழில் சொல்லலாம்.
தீரன் என்பவன் திண்ணியன். தீரம் என்பது கரையைக் குறிக்கும். நதிதீரம் என்பது ஆற்றங்கரை. தியானம் என்பதைத் தமிழில் 'அறிதுயில்' என்கிறார்கள். செல்வத்தைக் குறிக்கும் மற்றொரு வடசொல் திரவியம்.
நாம் விரும்பி உண்கின்ற 'திராட்சை' வடசொல்தான். 'கொடிமுந்திரி' என்பதுதான் திராட்சைக்கான தமிழ்ப்பெயர். திருப்தி என்று சொல்லாமல் மனநிறைவு எனலாம். திவ்யம் என்பது இனிமை. தினசரி என்பதனை 'நாள்தோறும்' என்று எழுதலாம். தீர்க்கம், துக்கம், துரிதம், தூரம் போன்றவையும் வடசொற்களே. தெளிவு, துன்பம், விரைவு, தொலைவு ஆகியன அவற்றுக்குரிய தமிழ்ச்சொற்கள். தீர்த்தம் என்பது தூயநீர்.
துரோகத்தை இரண்டகம், வஞ்சனை என்றும் துவாரத்தைத் துளை என்றும் தைரியத்தை அஞ்சாமை என்றும் தமிழில் கூறலாம்.
நினைவிற்கு
1. தட்சிணையை தமிழில் எப்படிக் கூறுகிறார்கள்?
2. தரிசனத்திற்கு தமிழ் என்ன?
3. திரவியம் என்பது எதைக் குறிக்கும்?
- மகுடேசுவரன்
