PUBLISHED ON : ஜூன் 27, 2016

நீரோடையில் பிறந்து கடலை நோக்கிப் பயணித்து கடலில் வளர்ந்து திரும்பவும் பிறந்த இடமான நீரோடைக்கு வந்து முட்டையிட்டு இறந்து போகிற ஒரு மீன் இனம் இருக்கிறது. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதுதானே! பறவைகள் தன் இனப்பெருக்கத்திற்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கிறது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே 'சால்மன்' (Salmon) என்ற மீன் இனம் இனப்பெருக்கத்திற்காக இடம் பெயர்கிறது. சால்மன் மீன் ஆற்று நீரில் வாழ்வதற்குத் தகுந்த உடலமைப்போடு பிறக்கும். பின் அவை கடலை நோக்கிப் பயணிக்கின்றன. சிறிது காலம் முகத்துவாரத்தில் வசிக்கின்றன. உப்பு நீர் பழகியதும் கடலுக்குச் சென்று இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வாழ்கின்றன. இறுதியில் இனப்பெருக்கத்திற்காக பிறப்பிடம் நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றன. கடலில் இருந்து நதியை அடைய ஆயிரம் மைல்களைத் தாண்டி கூட இந்தப் பயணம் நடைபெறுகிறது. பெண் சால்மன் மீன்கள் தங்கள் வாலினால் நீருக்கடியில் பள்ளம் தோண்டி அதில் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன. அதன் பின்னர் அங்கே வரும் ஆண் மீன்கள் குழியை மூடி விடுகின்றன. நீண்ட காலம் கடல் நீரில் வாழ்ந்து பழகிய அவற்றால் ஆற்று நீரில் வாழ முடியாமல் முட்டையிட்ட நிலையோடு ஆற்றங்கரைகளில் இறந்துபோகின்றன. தனது பெற்றோறைப் பார்க்காமலே பிறக்கும் சால்மன் குஞ்சுகள் மீண்டும் சுழற்சியைத் தொடங்குகின்றன. சால்மன் மீன்கள் அலாஸ்கா, அட்லான்டிக் கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
