தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குறை ஒன்றும் இல்லாத குயில்!

குறை ஒன்றும் இல்லாத குயில்!

குறை ஒன்றும் இல்லாத குயில்!


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.எஸ். நூற்றாண்டு செப்டம்பர் 16

அது 1966ஆம் ஆண்டு. நியூயார்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபை சந்திப்பு. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம். 'வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி…' என்கிற சிலப்பதிகாரப் பாடல் கம்பீரமும் கனிவும் கலந்து ஒலிக்கிறது. பார்வையாளர்கள் மெய்மறந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆம், ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியப் பாடகி என்கிற பெருமை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குக் கிடைக்கிறது.

அதற்கு முன்பும் பின்பும் இந்திய இசையில் மகுடம் சூட்டியபடி உலா வந்தவர்தான் எம்.எஸ். என்று அழைக்கப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. அந்த மகுடத்தை அங்கீகரிக்கும் விதமாகத்தான், இந்தியப் பிரதமராக இருந்த நேரு சொன்ன கூற்றும் அமைந்தது: 'நான் நாட்டுக்குத்தான் அரசன்; நீங்களோ இசைக்கே அரசி' என்றார் நேரு.

கர்நாடக இசைக்கு அரசியாக இருந்து, தன் ராஜ்யத்தை உலகம் முழுக்கப் பரப்பினார் எம்.எஸ். கர்நாடக இசையே தெரியாதவர்கூட எம்.எஸ்ஸின் குரலைக் கேட்காமல் இருக்க முடியாது. பணக்கார சாமியான திருப்பதி வேங்கடாசலபதியைத் தினமும் பாட்டுப் பாடி எழுப்புவது இவரது குரல்தான்! 'கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வா' என்கிற சுப்ரபாதப் பாடலைக் கேட்காதவர்கள் உண்டா?

இவரது பாட்டை ஆரம்பத்தில் கேட்டவர்கள் கர்நாடக சங்கீதத்தை இவ்வளவு சிறப்பாகப் பாடுகிறாரே என்று வியந்துகொண்டு இருந்த வேளையில் இவரது 'மீரா பஜன்' பாடல்கள் வெளியாயின. 'அடேங்கப்பா' என்றது ரசிகக் கூட்டம். எம்.எஸ்ஸை மீராவாகவே பார்க்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

இனிய இசையில் மயங்கியவர்கள் இவரை சினிமாவிலும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. பக்த மீராவாக இவர் நடித்த 'மீரா' என்கிற திரைப்படம் 1947ல் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'காற்றினிலே வரும் கீதம்' என்கிற பாடல், கிராமபோனில் ஒலிக்காத பட்டி தொட்டியே தமிழகத்தில் இல்லை. எம்.எஸ். காலமாகிவிட்ட பிறகும், காலத்தைக் கடந்து அந்தப் பாடல் இன்றைக்கும் காற்றின் அலைவரிசைகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இனியும் இருக்கும்.

மீரா பஜன்களான ஹிந்திப் பாடல்களில் பிரபலம் ஆன எம்.எஸ்.

ஏராளமான பிற மொழிகளிலும் பாடினார். அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள், எம்.எஸ்ஸின் உச்சரிப்பைப் பார்த்து, 'இவரது தாய்மொழி நம் மொழிதானோ?' என்று மயங்கினார்கள்.

உலகை, தன் இசையால் மயக்கிய எம்.எஸ்ஸின் இசைப் பயணம் ஆரம்பித்த கதையே சுவையானதுதான்.

தாயார் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கலைஞர். பாட்டி அக்கம்மாள் பிடில் கலைஞர். சகோதரர் சக்திவேல் மிருதங்க விற்பன்னர், சகோதரி வடிவாம்பாள் வீணை வித்வாம்சினி என்று மொத்தமும் இசைக் குடும்பம். எம்.எஸ்ஸுக்கு, தாயார்தான் முதல் குரு.

ஒருநாள், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி அரங்கில், தாயார் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். திடீர் என வாசிப்பதை நிறுத்திய அவர், விளையாடிக் கொண்டிருந்த சுப்புலட்சுமியைக் அழைத்து, “நீ பாடு!”

என்றார். திடீரென அழைத்துப் பாடச் சொன்னது கண்டு அசராமல், கூச்சமோ தயக்கமோ இல்லாமல், பாடி, அத்தனை பேரையும் அயர வைத்தார்.

அப்படித் தொடங்கிய இசைக்குயில், எத்தனையோ மனப் பூங்காக்களில் பாடிப் பறந்தது. இசைத்தட்டுகளும் ஒலிப்பதிவுப் பேழைகளும் இருக்கும் வரையில் 'எம்.எஸ்ஸின் பாடலைக் கேட்கவில்லையே' என்று யாருக்கும் 'குறை ஒன்றும் இல்லை'!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us