தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிங்கம்டா

சிங்கம்டா

சிங்கம்டா


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'காட்டு ராஜா சிங்கம்!' அதன் கம்பீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் அப்படிச் சொல்கிறோம். சிங்கம் பற்றிய கதைகள் நிறையவே கேட்டிருக்கிறோம். உண்மையான தகவல்களைக் கொஞ்சம் அறிவோமா?

ஆண் சிங்கம் 180 கிலோ எடையுள்ளது. பெண் சிங்கம் 130 கிலோ. இரண்டும் மணிக்கு 81 கி.மீ. வேகத்தில் ஓடும்.

இதன் நிறம் இளம் பழுப்பு, இள மஞ்சள் கலந்த கலவை. வரிக்குதிரை, மான், ஒட்டகச்சிவிங்கி, எருமை, காண்டாமிருகம், நீர்யானை எனப் பெரிய விலங்குகளில் தொடங்கி பறவை, முயல், ஊர்வன என சிறிய உயிரிகள் வரை வேட்டையாடி உண்ணும். வேறு இரையே கிடைக்காவிட்டால் யானையைக்கூடத் தாக்கும்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் குறிப்பாக, அங்கோலா (Angola), போட்ஸ்வானா (Botswana), மொசாம்பிக் (Mozambique), தான்சானியா (Tanzania), தெற்கு சூடான் (South Sudan) முதலிய நாடுகளில் சிங்கங்கள் அதிகமாக உள்ளன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் (Gir National Park)

சிங்கங்கள் காணப்படுகின்றன. இங்கு ஏறக்குறைய 400 சிங்கங்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள விலங்கியல் பூங்காக்களிலும் சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன.

சிங்கம் கர்ஜிக்கும் ஒலி 5 கி.மீ. முதல் 8 கி.மீ.வரை கேட்கும். இருக்கும் இடத்தை கூட்டத்தினருக்குத் தெரியப்படுத்தவும் எதிரிகளை பயமுறுத்தவும் இந்த கர்ஜனையை எழுப்புகின்றன. யானையே அடிக்கக் கூடிய வலிமை வாய்ந்த சிங்கம், பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது!

'சிங்கம் சிங்கிளாதான் வரும்' என்று சொல்வது தப்பு. அவை கூட்டமாக வாழும் இயல்பு உடையது. ஒரு குழுவில் 15 சிங்கங்கள் வரை இருக்கும். இவற்றில் பெண் சிங்கங்களும் குட்டிகளும் அதிகம் இருக்கும். ஒன்றிலிருந்து மூன்று வரையிலான ஆண் சிங்கங்கள் இடம் பெற்றிருக்கும். குழுவிலிருந்து மற்றொரு ஆண் தகுதிக்கு வந்ததும் அதன் தலைமையில் பிறிதொரு குழுவாகப் பிரிந்து சென்றுவிடும்.

பெரும்பாலும் (90 சதவீதம்) பெண் சிங்கங்கள்தான் வேட்டையாடும். தாவரங்களிலும் புல்தரைகளிலும் பதுங்கி இருந்து உணவைத் தேடும். தனியாகச் சென்றால் எளிதில் இரையை அடைய முடியாது என்பதை உணர்ந்து கூட்டமாகச் சென்று தாக்கும். வேட்டையாடிய உணவை முதலில் உண்ணுவது ஆண் சிங்கங்கள்தான்.

சிங்கம் உண்மையில் ஒரு சோம்பேறி. சுமார் 16 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை சும்மாவே படுத்திருக்கும். அல்லது உறங்கும். குளிர்ச்சி மிகுந்த இரவு நேரத்தில் வெளியில் உலவுவதாலும் நிறைய நேரம் ஓய்வாக இருப்பதாலும் இதன் வியர்வைச் சுரப்பிகள் குறைவாகவே வேலை செய்யும். இரவில் நடமாடுவதற்கு வசதியாக அதன் பார்வை ஒளித் திறன் அதிகம். மனிதர்களை விட 6 மடங்கு அதிகமான பார்வைத் திறன் கொண்டது.

பிறக்கும் பொழுது சிங்கக் குட்டிகளின் எடை 1.5 கிலோ. பிறந்த குட்டிகளை (cub) இரண்டு அல்லது மூன்று பெண் சிங்கங்கள் சேர்ந்து பராமரிக்கின்றன. கவனிப்பும் அக்கறையும் நிறைய இருப்பதால், குட்டிகள் மகிழ்வுடன் விளையாடுகின்றன. இப்படி ஆறு வாரங்கள் பெண் சிங்கங்களின் பாதுகாப்பில் குட்டிகள் வளரும். சிங்கத்தின் அறிவியல் பெயர் பேந்தரா லியோ (Panthera leo). சராசரி ஆயுட்காலம் 12ல் இருந்து 16 ஆண்டுகள்.

எகிப்திய இலக்கியங்களில் சிங்கத்தைப் பற்றிய சித்தரிப்புகள் உள்ளன. பண்டைய எகிப்தியர்கள் சிங்கத்தின் வலிமை வீரத்திற்காக வணங்கி இருக்கிறார்கள். அல்பேனியா (Albania), பெல்ஜியம் (Belgium), பல்கேரியா (Bulgaria), இங்கிலாந்து (England), எத்தியோப்பியா (Ethiopia), லக்ஸம்பர்க் (Luxembourg), நெதர்லாந்து (Netherland) சிங்கப்பூர் (Singapore) டென்மார்க் (Denmark) நார்வே (Norway) இலங்கை (Srilanka ) ஆகிய அத்தனை நாடுகளுக்கும் சிங்கம்தான்

தேசிய விலங்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us