PUBLISHED ON : ஆக 08, 2016

ஓர் இளவரசி இருந்தார். அவருக்கு சூரியனை மிகவும் பிடித்தது. ஆனால் சூரியனுக்கோ அந்த இளவரசியைப் பிடிக்கவில்லை. பிறகு ஒரு நாள் அந்த இளவரசி இறந்து போனார். இறந்த இளவரசியின் சாம்பலில் இருந்து வெண்மை நிறமுள்ள மல்லிகைப் பூக்கள் தோன்றின. நறுமணமும் வீசியது.
ஆனால் சூரியன் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்ட காரணத்தால் மல்லிகை சூரியன் இல்லாத இரவுப் பொழுதில் மலர ஆரம்பித்தது.....'
இப்படி ஒரு கதை மல்லிகைப் பூவுக்கு சொல்லப்படுகிறது. சரி கதை போகட்டும். நிஜத்தில் இதன் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாமா?
வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாய் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க பரவலாக அறியப்பட்ட பூ. தோட்டமாக பயிர் செய்யப்படுவதுடன் வீட்டின் முகப்பு, அண்மைகளில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் வெண்மை நிறம்கொண்டது.
மல்லிகையில் 200 வகை ரகங்கள் உள்ளன. இதன் தாயகம் ஆசியா. நம் ஊரில் கூட ஜாதி மல்லி, பவளமல்லி, நித்தியமல்லி, அடுக்கு மல்லி, குண்டு மல்லி என்று பல ரகங்கள் உள்ளன. சிலவகை மல்லிகை, செடியில் பூக்கும். கொடியில் மலரும் மல்லிகை வகையும் உண்டு. மரமல்லி, மரத்தில் பூக்கும்.
மல்லிகையில் நறுமணப்பொருட்கள், சோப்பு, பவுடர், ஷாம்பு உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
சீன மக்கள் ஆழ்ந்த அன்பு, மகிழ்ச்சி, நேர்த்தியின் சின்னமாக மல்லிகையைப் பார்க்கிறார்கள்.
