தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உன்னத நோக்கம் முக்கியம்!

உன்னத நோக்கம் முக்கியம்!

உன்னத நோக்கம் முக்கியம்!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனம் : போட்டி மனப்பான்மை

'நம்மை முதலிடத்தில் வைத்துக்கொள்வது எப்படி? யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை, நான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.' இதுதான், இன்றைக்குப் பெரும்பாலான மாணவர்களின் சிந்தனையாக மாறிவருகிறது.

நாம் எந்தவொன்றிலும் முதலிடம் பெறவேண்டும் என்று போட்டி போடுவது தவறல்ல. அதற்குத் தேவையான திறனை வளர்த்துக்கொள்வதோ உழைப்போ நிச்சயம் அவசியம்தான்.

ஆனால், ''அதிலே உன்னத நோக்கமும், குழு சார்ந்த போட்டியுமே இருக்க வேண்டும்'' என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.

காந்தி, ஒருமுறை போட்டியொன்றை அறிவித்தார். அதில் வெற்றி பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றார்.

யார், அதிக நூலை நூற்கிறார்கள் என்பதுதான் அந்தப் போட்டி.

இந்தப் போட்டியின் உன்னத நோக்கத்தைக் கவனிக்க வேண்டும். இது பொதுவான நன்மைக்காக நடத்தப்படுகிற போட்டி.

கடைசியில் பயனடையப்போவது அந்தச் சமூகம்தான். அது, யார் அதிக சம்பளம் பெறப்போகிறார், யார் பெரிதாக வீடு கட்டப்போகிறார், யார் விலையுயர்ந்த கார் வாங்கப்போகிறார் என்பதற்கான போட்டி அல்ல. அதாவது, தனிநபர் வளர்ச்சியை முன்னிறுத்தாத போட்டி அது.

யார் சமூகத்துக்கு அதிக நன்மை தரும் காரியத்தைச் செய்யப்போகிறார், அதற்கான வழியைக் கண்டுபிடிக்கப்போகிறார் என்பதற்கான போட்டி.

ஒரு நிஜ சம்பவத்தைச் சொன்னால், நாம் எப்படிச் சரியாகப் போட்டி போடுவது என்பது புரிந்துவிடும்.

ஓர் ஓட்டப்பந்தயம். அதில் ஆறு வீரர்கள் பங்கேற்றார்கள். திரும்பத்திரும்பப் போட்டி வைக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற சிறந்த பந்தய வீரன் ஒருவனால், மீண்டும் அடுத்தடுத்த போட்டிகளில் அதே வேகத்துடன் சோபிக்க முடியவில்லை.

காரணத்தை ஆராய்ந்தால், அவனுக்குச் சோர்வு ஏற்படவே, பிறர் தன்னை முந்திவிடுவார்களோ என்று திரும்பிப் பார்த்தவாறே ஓடினான். இப்படி முழுக்கவனத்தையும் ஓட்டத்தில் செலுத்த முடியாததே, அவனுடைய பின்தங்கலுக்குக் காரணமாக அமைந்தது.

போட்டி போடும்போது, அடுத்தவர்கள் நம்மை முந்திவிடுவார்களோ, அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்தே நமது ஆக்கத்திறனை இழந்துவிடுகிறோம்.

நமது முழுக்கவனமும் வேலையில் இருக்க வேண்டும். அதைக் கூர்மையாக, ஆக்கபூர்வமாக எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான், செயல் திறன் அர்த்தமுள்ளதாகப் பயன்படும்.

ஒரு சுயநலனை, தனியாளின் வெற்றியை மையப்படுத்திய போட்டியின் விளைவு, மனஅழுத்தம். ஆனால், பொதுநலனை மையப்படுத்திய போட்டியில் குழு ஒத்துழைப்பு இருக்கும்.

ஒருவர் காலை மற்றொருவர் வாரிவிடமாட்டார். மாறாக, ஒருவர் கீழே விழுந்தால் இன்னொருவர் தூக்கி விடுவார். இதுதான் அறம் சார்ந்த போட்டி. இதில் ஏற்படும் வீழ்ச்சி, ஒருவருக்கானதல்ல; அந்தக் குழுவுக்கானதாக இருக்கும். வெற்றியும் அப்படியே!

சூ. குழந்தைசாமி, செயலர், காந்தி அமைதி நிறுவனம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us