PUBLISHED ON : டிச 05, 2016

அன்று நமது சிங்க அண்ணாச்சிக்குப் பொல்லாத நாள்.
இரை தேடி அலைந்த சிங்க அண்ணாச்சியின் கண்ணில், ஒரு முயல் தட்டுப்பட்டது. முயல் போக்குக் காட்டி, தாவித் தாவி ஓடி, ஒரு புதருக்குள் போய்விட்டது.
புதரில் பாய்ந்த சிங்க அண்ணாச்சிக்கு முயல் சிக்கவில்லை. அதற்கு பதிலாக, உள்ளங்காலில் ஒரு முள் தைத்ததுதான் மிச்சம்.
வலி தாங்காமல் கர்ஜித்தது சிங்க அண்ணாச்சி. எப்படி முயற்சி செய்தும், முள்ளை எடுக்க முடியவில்லை. கண்ணில் தட்டுப்பட்ட விலங்குகளிடம் எல்லாம், முள்ளை எடுத்துவிடச் சொல்லிக் கேட்டது சிங்க அண்ணாச்சி. ஆனால், அவை தொடை நடுங்கிப் போய், பக்கத்திலேயே வராமல் ஓடின.
ஒரு நரி மட்டும், தயங்கியபடியே சிங்க அண்ணாச்சியின் பக்கத்தில் வந்தது. ''நரியே, நரியே என் காலில் தைத்த முள்ளை எடுத்து விடுவாயா?'' என்று பரிதாபமாகக் கேட்டது சிங்க அண்ணாச்சி.
“எனக்கு முள் எடுத்துப் பழக்கம் இல்லை. வேறு ஒரு விலங்கை வைத்து எடுத்து விடுகிறேன். ஆனால், அப்படிச் செய்வதற்கு ஒரு நிபந்தனை...'' என்று இழுத்தது நரி.
“நிபந்தனையா? என்ன அது?'' என்றது சிங்க அண்ணாச்சி.
“காசோ பணமோ வேண்டாம். நான் உங்கள் முதுகில் ஏறி ஐந்து மிதி மிதிக்க வேண்டும்,” என்றது நரி.
சிங்க அண்ணாச்சிக்கு, கோபம் கோபமாக வந்தது. “என்ன, என்னை மிதிக்க வேண்டுமா? நான் யார் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?'' என்று உறுமியது சிங்க அண்ணாச்சி.
“உங்கள் முள்ளை எடுத்து விடுவது எனக்குத் தேவை இல்லாத வேலை. முள் வேண்டாம் என்றால், மிதி வாங்கிக் கொள்ளுங்கள்,” எகத்தாளமாகச் சொன்னது நரி.
'மிதி வாங்கிக் கொண்டு முதலில் முள்ளை எடுத்துக் கொள்வோம். பிறகு முள் எடுத்துவிடும் விலங்கை அடித்துச் சாப்பிட்டு விடுவோம்...' என்று நினைத்த சிங்க அண்ணாச்சி, ''சரி, நரியே! என்னை மிதி” என்றது.
ஆசை தீர சிங்க அண்ணாச்சியை ஐந்து முறை மிதித்த நரி, ஒரு முள்ளம்பன்றியை அழைத்து வந்தது. சொடக்குப் போடும் நேரத்தில், சிங்க அண்ணாச்சியின் முள்ளை எடுத்துவிட்டது முள்ளம்பன்றி.
“வாடா, வா! இப்போது உன்னை அடித்துச் சாப்பிடப் போகிறேன்” என்று கர்ஜித்தது சிங்க அண்ணாச்சி.
உடனே, தன் முட்களைச் சிலிர்த்துக் கொண்ட முள்ளம்பன்றி, ''ம்... இப்போது என்னைச் சாப்பிடுங்கள்” என்றது.
ஒரு முள் குத்திய வலியையே மறக்க முடியாத சிங்கம், நூற்றுக்கணக்கான முட்களைப் பார்த்து மிரண்டு போனது.
“சரி சரி... போய்த் தொலை. உன்னை இன்னொரு நாள் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றபடி நடையைக் கட்டியது சிங்க அண்ணாச்சி.
ரமேஷ் வைத்யா
