PUBLISHED ON : டிச 05, 2016

பாலுவுக்கும், எனக்கும் தபால் தலை சேகரிப்பது, ஒரு பழைய பொழுதுபோக்கு. பழைய என்றுதான் சொல்ல வேண்டும். கூரியர் வந்ததிலிருந்து, தபால் ரொம்ப அடிபட்டுவிட்டது. கூரியர் கடித உறைகளில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமே கிடையாது. அரசாங்கம் நடத்தும் அஞ்சல் துறையில் மட்டும்தான், இன்னமும் ஸ்டாம்ப் இருக்கிறது.
ஏன் அதை ஸ்டாம்ப் என்று சொல்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஸ்டாம்ப் என்றால், முத்திரை குத்துவது. ஸ்டாம்பின் மீது தபால் முத்திரை குத்துவதால், அந்தப் பெயர் வந்திருக்கிறது. ஆனால், தமிழில் ஏன் ஸ்டாம்பை முத்திரை வில்லை என்று சொல்லாமல், தபால் தலை என்று சொல்கிறோம் என்று, ஞாநி மாமாவைக் கேட்டேன்.
ஸ்டாம்பில் முதன்முதலில் போட ஆரம்பித்த படம் தலை என்பதனால்தான் என்றார் மாமா. பிரிட்டனில், 176 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்பில், விக்டோரியா மகாராணியின் தலையின் பக்கவாட்டுத் தோற்றம் அச்சிடப்பட்டது. அதன் பின், எல்லா நாடுகளிலும் ஆரம்பத்தில் அவர்களுடைய தலைவர்களின் தலையை அச்சிடும் வழக்கம்தான் இருந்திருக்கிறது. பிறகுதான் ஸ்டாம்புகளில், பறவை, விலங்கு, செடி, கட்டடம் முதலியவற்றை அச்சிட ஆரம்பித்தார்கள். ஆனாலும், அதிகமாக அச்சிடப்பட்டது தலைதான். அதனால் ஸ்டாம்ப் என்பது, தமிழில் தபால் தலையாகிவிட்டது.
ஏன் ஸ்டாம்ப் ஒட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டது என்பதையும் மாமா சொன்னார். ரோலண்ட் ஹில் என்ற பள்ளிக்கூட ஆசிரியர்தான், இதை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் தபால் அனுப்பினால், அனுப்புபவர் காசு கட்ட வேண்டியதில்லை. யாருக்கு தபால் வருகிறதோ அவர்தான், காசு கட்டி தபாலைப் பெற்றுக் கொள்ளவேண்டும். இந்த முறையினால், நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. பல பேர் தபாலை வாங்கிக் கொள்ள மறுத்துவிடுவார்கள்.
இந்தப் பிரச்னையை ஆராய்ந்த ரோலண்ட் ஹில், நிறைய பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்தார். அதன்படி, ஒரு பென்னி ஸ்டாம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எந்த ஊரிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ள ஊருக்கு போகும் தபாலாக இருந்தாலும், ஒரு பென்னி ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்பது, மக்களைக் கவர்ந்தது. தபால் எவ்வளவு தூரம் போகிறது என்பதை விட, தபாலின் எடை எவ்வளவு என்ற அடிப்படையில்தான் ஸ்டாம்ப் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது ரோலண்ட் ஹில் அறிமுகப்படுத்திய முறையாகும். இன்று வரை, உலகமெங்கும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது.
“ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது மாதிரி, ஸ்டாம்பிலும் கள்ள ஸ்டாம்ப் உண்டு தெரியுமா?” என்றது வாலு.
“முதல் ஸ்டாம்ப் வந்து, அடுத்த
23 ஆண்டுகளிலேயே, 'கள்ள ஸ்டாம்பை கண்டுபிடிப்பது எப்படி?' என்று ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியானால், எந்த அளவு கள்ள ஸ்டாம்ப் அச்சிடுவது, அப்போதே நடந்தது என்று ஊகிக்கலாம்” என்றார் மாமா.
இத்தாலியில், 1884-ல் பிறந்த ஜீன் ஸ்பெராட்டி என்ற ஒரு ஆசாமி, 100 வெவ்வேறு விதமான ஸ்டாம்புகளை 5,000 முறை, கள்ள ஸ்டாம்பாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
'பொதுவாக, கள்ள நோட்டு அச்சிடுபவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக, சுய லாபத்துக்காகத்தான், அந்த சட்டவிரோதமான வேலையை செய்வார்கள். ஆனால், ஸ்பெராட்டி அப்படிச் செய்யவில்லை. அவருக்கு புகைப்படக் கலையிலும், அச்சுக் கலையிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் கைதானபோது, அசல் மாதிரியே தானும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான், செய்ததாக சொல்லியிருக்கிறார். தன்னுடைய கலைத் திறனைப் பார்த்து வியந்தவர்கள், அவற்றை வாங்கிக் கொள்ள விரும்பியதால், ஸ்டாம்பில் இருந்ததை விட கம்மி விலைக்குக் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். இந்த வாதத்தை எல்லாம், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு அபராதம் விதித்தது. வழக்கு நடக்கும்போது, அவருக்கு 64 வயது ஆகிவிட்டதால், சிறையில் அடைக்காமல் விட்டுவிட்டார்கள். ஸ்பெராட்டி தன்னிடம் இருந்த நகல் தபால் தலைகள், அச்சிடப் பயன்படுத்திய கருவிகள் எல்லாவற்றையும், பிரிட்டிஷ் தபால் தலை சேகரிப்போர் சங்கத்துக்கு விற்று விட்டார்' என்றார் மாமா.
'பழைய ஸ்டாம்புகள், தவறாக அச்சிடப்பட்ட ஸ்டாம்புகள், போலி ஸ்டாம்புகள், இவற்றில் எது ஒன்று எனக்குக் கிடைத்தாலும், நான் கோடீஸ்வரனாகி விடுவேன்' என்றான் பாலு. பிரிட்டிஷ் பென்னி ரெட் என்ற அசல் ஸ்டாம்ப், 3 கோடி ரூபாய் விலைக்கு ஏலத்தில் போயிருக்கிறது. பிரிட்டிஷ் கயானா ஒரு செண்ட் மேக்னடா என்ற ஸ்டாம்ப், உலகத்திலேயே ஒரே ஒரு ஸ்டாம்புதான் இப்போது இருக்கிறதாம். அதன் விலை 60 கோடி ரூபாய்! இந்தியாவில் நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில், வெளியான ஸ்டாம்புகளெல்லாம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்படுகின்றன.
“ஸ்டாம்புகளில் தலைவர்கள், பறவை, விலங்கு படங்களையெல்லாம் அச்சிடுகிறார்கள். நான் என் நண்பர்களுக்கு அனுப்பும் கடிதத்தில், என் முகம் போட்ட ஸ்டாம்பை அச்சிட்டு அனுப்ப வழி இருக்கிறதா?” என்று கேட்டான் பாலு.
“முதலில் வெளிநாடுகளில்தான், அதற்கு நடைமுறை இருந்தது. அதன்படி குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிட்டால், நாம் விரும்பும் படத்தை ஸ்டாம்பில் அச்சிட்டு கொடுத்து விடுவார்கள். இப்போது இந்தியாவிலேயே அந்த முறை வந்துவிட்டது” என்றார் மாமா.
“எவ்வளவு தொகை?” என்று ஆர்வமாகக் கேட்டான் பாலு.
“ஐந்து ரூபாய் மதிப்புள்ள 12 தபால் தலைகளில் உன் தலையை அச்சிட்டுக் கொடுக்க, வெறும் 300 ரூபாய் தான்” என்றார் மாமா.
“வெறுமே ஸ்டாம்பில் நம் தலையை அச்சிடுவதில் என்ன பெருமை இருக்கிறது? உன்னிடம் ஒரு ஊரையே கொடுத்து அதை நிர்வாகம் செய்து, பேர் எடுத்து, அதற்காக உன் தலையை ஸ்டாம்பில் போட்டால், அதுதான் பெருமை” என்றது வாலு.
அப்படி யாராவது செய்திருக்கிறார்களா என்ன?
“அமெரிக்கா உருவானபோது, அதெல்லாம் நடந்தது.” என்றார் மாமா.
“சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால், பிரிட்டிஷ் அரசர் சார்லஸ், தான் வாங்கிய கடனுக்குப் பதிலாக, அமெரிக்காவில் 45 ஆயிரம் சதுர மைல் நிலத்தை, தன் ராணுவ அதிகாரியின் மகனாகிய வில்லியம் பென் என்பவருக்குக் கொடுத்தார். வில்லியம் பென்னின் கடவுள் கொள்கை, அரசருக்கு பிரச்னையாக இருந்தது. கடவுளைத் தொழுவதற்கு ஆலயம் தேவையில்லை. நேரடியாக ஒவ்வொருவரும் கடவுளிடம் தொழுது கொள்ளலாம். சர்ச் வேண்டாம் என்று கருதிய கிவேக்கர்களில் ஒருவராக பென் இருந்தார். எல்லா கிவேக்கர்களையும் நான் அமெரிக்காவுக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என்று சொன்ன பென், தான் வாங்கிய நிலத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்தி, மக்களைக் குடியேற்ற ஆரம்பித்தார். இன்று ஜனநாயகம், உரிமைகள் என்று பேசப்படும் பலவற்றை வில்லியம் பென், அன்றைக்கு அங்கே செயல்படுத்த ஆரம்பித்தார். தன் மாகாணத்துக்கு சில்வேனியா (அழகிய காடு) என்று பெயர் சூட்டினார். அதனுடன் பென் பெயரையும் சேர்த்து, அதுதான் இப்போது, பென்சில்வேனியா என்று அழைக்கப்படுகிறது” என்றார் மாமா.
“எனக்கு ஒரு மாவட்டம் கிடைத்தால் போதும். வேறு விதமான பள்ளிக்கூடம், வேறு விதமான அரசு அலுவலகம், வித்தியாசமான போலீஸ் ஸ்டேஷன், சினிமா தியேட்டர் என்று எல்லாவற்றையும் உருவாக்கி, அதற்கு பாலுப்பட்டி என்று பெயர் வைப்பேன்.” என்றான் பாலு.
“பாலுப்பட்டி உருவாவதற்கு உனக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும். அதற்கு முன்னால், இப்போது உனக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தில் என்ன செய்யப் போகிறாய் என்று யோசி. சின்ன வட்டத்துக்குள் முதலில் பயிற்சி எடுத்துக் கொள். நீதானே சி.பி.எல்?” என்று கேட்டார் மாமா.
“ஆமாம். ஒரு சி.பி.எல். என்ன செய்யமுடியும்?” என்றான் பாலு.
“அண்மையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனைப் பார்த்தேன். அவருக்கு 90 வயது ஆகப் போகிறது. ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு மாணவன் ஏதோ விதியை மீறியதற்காக, கூப்பிட்டு விசாரித்தாராம். அவன் கேட்டானாம், 'யார் போட்ட ரூல்ஸ்?' என்று. இவர் உடனே யோசித்தார். ரூலை இவரும் போடவில்லை. மாணவரும் போடவில்லை. வேறு யாரோ போட்டதை, இருவரும் செய்யவேண்டியிருக்கிறது. 'சரி. உங்களுக்கான நடத்தை விதிகளை நீங்களே உருவாக்குங்கள்' என்று அந்த மாணவன் தலைமையில் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அவர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிமுறைகள்படி, அந்தப் பள்ளி அதன் பிறகு நடைபெற்றிருக்கிறது. எனவே, நீயும் சி.பி.எல்லாக செய்யக் கூடியதை முதலில் செய்” என்றார் மாமா.
“உடனே செய்யக் கூடியது, ராஜினாமா செய்துவிட்டு நல்ல சி.பி.எல்லைப் போடச் சொல்வதுதான்.” என்றது வாலு. பாலு அதை துரத்த, நாங்கள் சிரித்தோம்.
வாலுபீடியா 1: அரசாங்கமே கள்ள ஸ்டாம்ப் அச்சிடுமா? அமெரிக்க அரசு செய்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி மக்களுக்கு அனுப்பிய பிரச்சாரக் கடிதங்களில், ஹிட்லர் தலை போட்ட போலி ஜெர்மன் ஸ்டாம்புகளை அச்சடித்து ஒட்டி அனுப்பியது.
வாலுபீடியா 2: ஸ்டாம்ப் முறையை உருவாக்கிய ரோலண்ட் ஹில், கல்வியிலும் சீர்திருத்தம் செய்தவர். தான் நடத்திய பள்ளியில், மாணவர்களை அடிப்பதும், பயமுறுத்தி ஒழுக்கப்படுத்துவதும் கூடாது என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார்.
