PUBLISHED ON : ஜன 01, 2018

அசோலா
ஆங்கிலப் பெயர்கள்:
'மஸ்கிட்டோ ஃபெர்ன்' (Mosquito Fern),
'டக்வீட் ஃபெர்ன்' (Duckweed Fern),
'ஃபேரி மோஸ்' (Fairy Moss),
'வாட்டர் ஃபெர்ன்' (Water Fern)
தாவரவியல் பெயர்:
'அசோலா' (Azolla)
குடும்பம்:
'சால்வினியசியே' (Salviniaceae)
தண்ணீரில் மிதக்கக்கூடிய மிகச்சிறிய பெரணி (Fern) வகைத் தாவரம். தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போல அமைந்திருக்கும். தட்டையான செதில் போன்ற இலைகள் செழித்து வளர்ந்திருக்கும். மெல்லிய நீரில் மூழ்கி இருக்கும் வேர்களையும் கொண்டது.
வியட்னாமில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நெல் வயலில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க வளர்க்கப்பட்ட அசோலா, இன்று உலகம் முழுவதும் பிரபலமான உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. காற்றில் இருக்கும் நைட்ரஜன் சத்தை உறிஞ்சும் 'அனாபீனா' (Anabaena) என்னும் நீலப்பச்சைப்பாசி தங்கி இருக்க அசோலா இடம் தருவதால், நெல் விளைச்சலில் இயற்கை உரமாகச் செயற்பட்டு மண்ணில் நைட்ரஜன் அளவை அதிகரிக்கிறது. அசோலா விதைகளை நெல் வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும்போது தூவிவிட்டால், நன்கு செழித்து வளரும். தண்ணீர் இல்லாமல் வற்றிப்போகும்போது, அசோலா மக்கி உரமாகிப் பயிருக்கு ஊட்டம் கொடுக்கும்.
இதில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள், பீட்டாகரோடின் (Betacarotene) ஆகிய சத்துகளும் உள்ளன. அசோலாவை பச்சையாகவோ, உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குக் கொடுக்கலாம். 'பீட்டாகரோடின்' சத்து கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின் (Albumin), குளோபுலின் (Globulin), கரோடின் அளவு அதிகமாக உள்ளது.
கால்நடைகளின் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து ஆகியவற்றையும் கொண்ட அசோலாவை, கால்நடைகள் சுலபமாக ஜீரணித்துக் கொள்ளும். அதிவேக வளர்ச்சி கொண்ட அசோலா 3 முதல் 10 நாட்களுக்குள் இரு மடங்காக அதிகரிக்கும். கையளவு நிலமும் கைப்பிடியளவு அசோலாவும் இருந்தால் , ஒரு தண்ணீர் தொட்டியிலேயே எளிதில் அசோலாவை தயாரிக்கலாம்.
- அ.லோகமாதேவி
