தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இன்றும் பலன் தரும் ஆயுதம்!

இன்றும் பலன் தரும் ஆயுதம்!

இன்றும் பலன் தரும் ஆயுதம்!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனம்: சத்தியாக்கிரகம்

பிரிட்டிஷாரை வெட்கப்பட வைத்து, நம் நாட்டை விட்டே ஓடவைத்த வலிமையான ஆயுதத்தின் பெயர் தான் 'சத்தியாக்கிரகம்' என்பது. கத்தியின்றி, இரத்தமின்றி நடந்த அமைதிப் புரட்சி அது.

இன்றைக்கு அந்த ஆயுதத்துக்கு மவுசு இருக்கிறதா?

இருக்கிறது. இன்றும் பல நாடுகளில், இந்த ஆயுதம் பயன் அளித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கலிபோர்னியாவில் விவசாயத் தொழிலாளியாக இருந்தவர் சீசர் சாவேஸ் (Cesar Chavez). மெக்சிக்கோவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அதிகம் படிக்காதவர். காந்தியடிகளின் நூலைப் படித்து, அகிம்சா வழிமுறைகளில் ஈடுபாடு கொண்டார்.

இவர், 1970களிலேயே மறியல்கள், உண்ணாவிரதங்கள், பாத யாத்திரைகள், பகிஷ்காரங்கள் முதலியவற்றை நடத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுத் தந்தார். கலிபோர்னியாவின் பல நகரங்களில் இவருடைய பெயரில் சாலைகள், பூங்காக்கள், மைதானங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் பகுதியில் இருந்த ஜீன் ஷார்ப் (Gene Sharp) என்ற அறிஞர், காந்தியடிகளின் சத்தியாக்கிரக முறைகளை வெகுவாக ஆராய்ந்து, பல நூல்களை எழுதியிருக்கிறார்.

'சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு' என்ற சிறு கையேட்டை எழுதி, எந்ததெந்த முறையில் சத்தியாக்கிரகம் செய்யலாம் என்று வழிகாட்டியுள்ளார். முதலில் பர்மிய மொழியில் அது வெளிவந்தது.

ஆங் சாங் சூகி 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார். காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி வன்முறையற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

எத்தனையோ கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாண்டி, அவர் பர்மிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவருக்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளது. ஜீன் ஷார்ப் எழுதிய புத்தகம் அதற்கு உறுதுணையாக இருந்தது.

செர்பியாவின் அதிபர் சுலோபடன் மிலசோவிக்கை (Slobodan Miloševi) 2000ஆம் ஆண்டில், பதவியிலிருந்து இறக்கி இளைஞர்கள் அகிம்சா முறையில் போராடி ஆட்சி மாற்றத்திற்கு வழி செய்தார்கள். இரத்தம் சிந்தாமல் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜீன் ஷார்ப் எழுதிய புத்தகத்தைப் படித்து, பயிற்சி முகாம்களை நடத்தி, இளைஞர்களைச் சேர்த்து இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்ததால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அடுத்து ஜார்ஜியாவில் எட்வர்டு ஷெவர்ட்டுநாட்சே (Eduard Shevardnadze) அதிபராக இருந்த சமயத்தில், லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடின. அதை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு 'ரோஸ் புரட்சி' (Rose Revolution) செய்தார்கள். செர்பியாவில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்ற தலைவர்களை அழைத்து, பயிற்சி முகாம்கள் நடத்தி இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடினார்கள்.

அந்த இயக்கத்திற்கு 'க்மாதா' என்று பெயர். அதற்கு 'போதும்' என்று பொருள். போராட்டத்தின் சின்னமாக 'முஷ்டி'யை வைத்துக்கொண்டார்கள். இந்தப் போராட்டத்தின் காரணமாக நடந்த 2003 தேர்தலில் ஷெவர்டு நாட்சே தோல்வியுற்று மிக்கேல் ஷாகஸ்வில்லி (Mikheil Saakashvili) வெற்றி பெற்றார்.

இதேபோன்று உக்ரைனிலும் நடந்தது. அரேபிய வசந்தம் (அரப் ஸ்பிரிங்) என்ற பெயரில், இதேபோன்று அறப்போராட்டங்கள் எகிப்திலும், டுனீசியாவிலும் நடந்தன. அங்கு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் எதிரொலியாக அல்ஜீரியாவிலும், சூடானிலும் பல ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் தொடர்ந்து நீடித்த நபர்களை கீழே இறக்கி, ஜனநாயகத் தேர்தலை நடத்துவதற்குப் போராடி வருகிறார்கள்.

காந்தியினுடைய சத்தியாக்கிரக வழி, இப்படிப் பல நாடுகளில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆட்சி மாற்றத்திற்கான புரட்சியை செய்திருக்கிறது.

- க.மு. நடராஜன், செயலர்,

தமிழ்நாடு சர்வோதய மண்டல்,

மதுரை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us