PUBLISHED ON : அக் 29, 2018

நடை, உடை, பேச்சு, பாவனை என, எல்லாவற்றிலும் காந்தியைப் போல் இருக்க முயற்சி செய்கிறார் அபிதா பேகம், வயது 43. கர்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அரசுக் கல்லூரி ஒன்றில், பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். ஆறு வயதிலிருந்தே கதர் ஆடையை மட்டுமே அணிந்து வரும் அபிதா பேகத்தின் காந்தியச் சிந்தனைகள், இன்றைய இளைஞர்களை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகிறார். காந்திய சிந்தனைகளைப் பரப்புவதற்காக, நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு காந்தியத் தேர்வுகளை நடத்தி வருகிறார். அந்த வரிசையில், சிறைவாசிகளுக்காகவும் தேர்வுகளை நடத்தத் தொடங்கியுள்ளார் அபிதா. அவரிடம் பேசியதிலிருந்து...
“எனக்கு ஆறு வயதாக இருக்கும்போதே, கதர் ஆடை மீது ஒரு வித ஆசை தொற்றிக்கொண்டது. அதற்குக் காரணம் என் அப்பா அஃப்தாப் அஹமது தான். தீவிரமான காந்தியவாதியான அவருக்கு, தற்போது, 83 வயதாகிறது. நான் பார்த்த நாளிலிருந்து காந்தியின் போதனைகளை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறார்.
மக்களின் நன்மதிப்பு பெற்று, கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றிய என் தந்தைதான் எனக்கு ரோல்மாடல். பொது வாழ்க்கையில் இருந்து அவர் ஓய்வுபெற்று விட்டாலும், இன்னமும் காந்தியின் போதனைகள் அடங்கிய புத்தகங்கள் படிப்பதை, வழக்கமாக வைத்திருக்கிறார். சிறுவயது முதலே, எனக்கு காந்தியக் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட, அவர் ஒரு முக்கிய காரணம்.
இன்றைய டிஜிட்டல்மயமான, அவசர யுகத்தில் காந்தியைப் பற்றிப் பேசினால் யார் கேட்கப்போகிறார்கள்? பொறுமையுடன் கேட்பவர்கள் குறைவு. ஆனால், அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதல்லவா? காந்தி, அவர் வாழ்ந்த காலத்தைவிட, தற்போதுதான் அதிகம் தேவைப்படுகிறார். அதற்காகத்தான் காந்தியைப் பற்றிய தேர்வுகளை நடத்தி வருகிறோம்.
Gandhi Vichar Sanskar Pariksha (GVSP) என்ற இந்தத் தேர்வை,15 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வை எழுத வயதோ, படிப்போ ஒரு தடையில்லை. மாணவர்களிடம் 25 ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு தேர்வு நடத்துகிறோம். தேர்வில் பங்குபெறும் அனைவருக்கும் காந்தியின் சரித்திரம் தொடர்பான புத்தகத்தை வழங்குகிறோம். ஒவ்வோராண்டும் டிசம்பர் கடைசியில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. நல்ல மதிப்பெண் எடுப்பவர்களை, சர்வோதய தினக் கொண்டாட்டத்திற்கு அழைப்புக் கொடுத்து விருதுகள் வழங்குகிறோம்.
எவ்வளவு கொடூரமானவர்களையும் காந்தியச் சிந்தனைகள் மாற்றிவிடும் என்பது என் ஆழமான நம்பிக்கை. அதற்காகத்தான் தற்போது சிறைக்கூடங்களிலும், இலவசமாக காந்தியத் தேர்வுகளை நடத்தத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்தியுள்ளோம். சிறைக்கைதிகளுக்கு காந்தியின் திரைப்படத்தைப் போட்டுக் காண்பிப்போம். பின்னர் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன் பிறகு தேர்வுகளை நடத்துகிறோம்.” என்கிறார் அபிதா பேகம்.
