தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பள்ளிக்கூடத்தை மூடிவிடக் கூடாது!

பள்ளிக்கூடத்தை மூடிவிடக் கூடாது!

பள்ளிக்கூடத்தை மூடிவிடக் கூடாது!


PUBLISHED ON : அக் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்டை மாநிலமான கர்நாடகத்தில், குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து பாதியிலேயே நின்றுவிடக்கூடாது என்பதற்காக, ஆசிரியர்களே வாகனங்களில் சென்று அழைத்து வருகின்றனர். இந்த தியாகமிக்க பணியைத் தலைமையேற்று நடத்தி வருபவர், பக்ருத்தின். அவர் முதன்முதலாகச் சேர்ந்த வேலையே, மங்களூருவில் உள்ள தாருல் ஆரம்பப் பள்ளிக்கூடம்தான். 39 ஆண்டுகளாக அதே பள்ளியிலேயே ஆசிரியராக இருந்து வரும் பக்ருத்தின், பள்ளிக்கூடம் மூடப்படாமல் இருக்க, தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறார்.

''இந்தப் பள்ளிக்கூடத்தில், 1982இல் ஆசிரியராக இணைந்தேன். அதன் பின்னர், 39 ஆண்டுகளுக்குப் பின், ஓய்வுபெற இருக்கிற நிலையில்தான் கடுமையான சவாலை எதிர்நோக்கி உள்ளேன்.” என்று பேச ஆரம்பித்த பக்ருத்தின், “பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகள் தான் இங்கு படிக்கின்றனர். எல்லாமுமே அவர்களுக்கு இலவசமாகக் கிடைத்து வருகிறது. இனிமேலும் அது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.

தற்போது எங்கள் பள்ளி சந்தித்து வரும் மிகப்பெரும் சவாலே, மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதுதான். சரியான உள்கட்டமைப்பு இல்லாமல் இருப்பதுதான் அதற்கு காரணம்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனர். வீடுகளுக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடங்கள் இருப்பதும், அரசுப் பள்ளிகளைவிட வசதிகள் அதிகம் இருப்பதுமே அதற்கு காரணம். எங்களிடம் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகம்.” என்று சொல்லும் பக்ருத்தின், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

“மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், பள்ளியையே மூடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தடுக்க, எனது சக ஆசிரியர்கள் இராதாகிருஷ்ண நாயக் மற்றும் நூருதீன் ஆகியோரோடு இணைந்து வசூல்செய்து, இரண்டு கார்களை வாங்கினோம்.

நாங்களே, வாகனங்களை இயக்குகிறோம். தூரமாக உள்ள பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று, தினமும் 88 பிள்ளைகளை அழைத்து வருகிறோம். இதனால், வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. பள்ளியிலிருந்து குழந்தைகள் விலகுவது பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு கார்களின் பராமரிப்புச் செலவு மிக அதிகம். ஒவ்வோராண்டும் 2 லட்சம் ரூபாய் கார்களுக்காகவே செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. காரணம், எங்கள் மீது பெற்றோர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எங்கள் அக்கறையைப் பார்த்து, பிள்ளைகளை ஆர்வமாக அனுப்பி வைக்கின்றனர். எங்கள் சிரமத்தைப் புரிந்து பிள்ளைகளும் பொறுப்புடன் கல்வி கற்கின்றனர். எனவே, வாகன சேவையை நிறுத்தாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அரசு, இலவச நோட்டுப் புத்தகங்கள், மதிய உணவை வழங்கினாலும், அது போதுமானதல்ல. ஆரம்பகாலத்தில், சர்வ சிக்ஷா அபியான் மூலம் பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வந்துகொண்டிருந்தது. தற்போது, அது வெறும் 5 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்களே எங்கள் சொந்த நிதியைச் செலவிட்டு வருகிறோம்.

70 ஆண்டுக் கட்டடத்தில், தரைகளில் பெரும் விரிசல்கள் விழுந்துள்ளன. மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. மழைக்காலங்களில், வகுப்புகளில் பெருமளவு தண்ணீர் கசியும். சில சமயம் பள்ளிக்கூடத்தில் வெள்ளம் புகுவதால், விடுமுறையும் விடவேண்டியிருக்கிறது. இந்தச் சுதந்திர தினத்தில் கூட வெள்ளம் காரணமாக, சாலை ஓரத்தில் தான் கொடியேற்றிக் கொண்டாடினோம். இத்தனை சோதனைகளையும், விரைவில் கடப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக உள்ளது.” என்றார் பக்ருத்தின்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us