PUBLISHED ON : அக் 29, 2018

என் புத்தகத்தில் நிறைய மயில் படங்களை வரைந்து வைத்திருந்தேன். அதுவும் கணிதப் பாடநூல், பயிற்சி நூல் என்று எல்லாவற்றிலும் குட்டி குட்டி மயில்கள் தோகை விரித்துக்கொண்டு நடனம் ஆடின. சின்ன வயதில் இருந்தே எனக்கு வரையத் தெரிந்த ஒரே பறவை மயில்தான். அதுவும் அது பறக்காது. ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும். ஒரு பழைய மரத்தின் தண்டில்தான் மயில் வீற்றிருக்கும்.
அன்று என் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த உமா மிஸ், மயில்களையும் பார்த்தார். எனக்குப் பெருமையாக இருந்தது. என் கைவண்ணத்தை மிஸ் பாராட்டுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
“கிளாஸ் போரடிச்சுதா? என்ன செய்யறதுன்னு தெரியாம, மயில் வரைஞ்சுக்கிட்டிருந்தியா?”
பொட்டில் அறைந்தாற் போலிருந்தது. ஆமாம், இவற்றை வரைந்தபோது, வகுப்பில்தான் இருந்தேன். பெரும்பாலும் கணித ஆசிரியர் சொல்லிக்கொடுத்தது ஏற்கெனவே தெரிந்திருந்தது. வீட்டில் பல கணக்குப் போட்டுப் போட்டு பழகியிருந்தேன். புதிதாக, சுவாரசியமாக இல்லாத நிலையில், இவற்றை வரைந்து கொண்டிருந்தேன்.
'ஆமாம்' என்று சொல்லக் கூச்சமாக இருந்தது. லேசாக வழிந்தேன். “மிஸ் சொல்லிக் கொடுத்தது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும். என்ன செய்யறதுன்னு தெரியலை…”
உமா மிஸ் வழக்கம்போல் உடனே ஏதும் சொல்லவில்லை. யோசிக்கிறார் என்று அர்த்தம். சற்று நேரம் கழித்து ஆரம்பித்தார்.
“இது ஒரு பிரச்னை. அதாவது, மாணவர்களுடைய தகுதி, தேர்ச்சியைச் சரியாக மதிப்பிடாதபோது ஏற்படும் சோர்வு இது.”
“அப்படின்னா, எனக்குத் தகுதி போதலையா மிஸ்?”
“இல்லயில்ல. நான் சொல்றது வேற. ஒரு குறிப்பிட்ட வகுப்புகள்ல என்ன சொல்லித் தரணும்ங்கறதை நம்ம கல்விமுறை சுருக்கி வெச்சிருக்கு. அது ஒரு புத்தகமாக இருக்கும். அந்தப் பாடப்புத்தகத்தை அந்த ஆண்டுக்குள்ள முடிக்கணும்னு திட்டமிடுவோம். அல்லது, ஸ்டூடண்ட் ஓராண்டு, குறிப்பிட்ட வகுப்புல இருந்துட்டு, அடுத்த ஆண்டுதான் அடுத்த வகுப்புக்குப் போகணும்னு வழிமுறை உருவாக்கி வெச்சிருக்கோம். இதெல்லாம், இன்னிக்குச் சரியான அணுகுமுறை இல்லைங்கற எண்ணம் ஏற்பட்டிருக்கு.”
“எப்படி மிஸ்?”
“அமெரிக்காவுல ஏற்பட்டிருக்கிற இத்தகைய சிந்தனைக்குப் பேரு, 'தேர்ச்சி சார்ந்த கற்றல்'. அதாவது காம்பிடன்சி பேஸ்டு லேர்னிங் (Competency Based Learning). ஒரு குறிப்பிட்ட வகுப்புல ஒரு பையன் இத்தனை மாசம் உட்கார்ந்திருக்கணும்ங்கறது கணக்கு இல்ல. அந்த வகுப்புல அவன் கற்றுக்கொள்ள வேண்டிய திறன்கள் என்னென்ன என்பதுதான் முக்கியம். அதை அவன் ரொம்ப வேகமாகக் கத்துக்கலாம். அவன் கத்துக்கிட்டான், போதிய தேர்ச்சி பெற்று விட்டாங்கறதை அவனுடைய ஆசிரியர் ஏத்துக்கணும். உடனே அடுத்த வகுப்புக்குப் போகலாம்.”
“அதாவது அடுத்த கிளாஸுக்கா மிஸ்?”
“இல்ல. இங்கே கிளாஸ்னு சொல்றதே தப்பு. ஒவ்வொரு அறையையும் 'வொர்க் ஷாப்'ன்னு சொல்றாங்க. மாணவர்கள் பல்வேறு நிலைகள்ல இருக்காங்க. பல்வேறு தேர்ச்சி நிலைகள்ல. உதாரணமா, நீ கணிதத்துல வேகமா முன்னேறும் மாணவன். வேறொரு மாணவன், வேறொரு பாடத்துல வேகமாக முன்னேறலாம். அவங்க கத்துக்கவேண்டிய திறன்களில் வேகமாகத் தேர்ச்சி அடையலாம். அதேபோல் வேறொரு பாடத்துல நீ வேகமாகத் தேர்ச்சியடையாமல் போகலாம். அங்கே நீ நிதானமாக அந்தக் குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொண்டு, அதுல தேர்ச்சி அடையும் வரையும் முயற்சி செய்யணும். இங்கே ஒவ்வொரு பாடமும் தேர்ச்சி அடைப்படையில பல்வேறு அறைகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஓர் அறையில் இருந்து அடுத்த அறைக்குப் போவதுதான் திறன் மேம்பாடு.”
“ஒரே குழப்பமாக இருக்குமே மிஸ்? ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு ஸ்டூடண்டும் இருக்கலாமே?”
“கரெக்ட். அதுதான் உண்மையான நிலைமை. நாம் ஒவ்வொரு மாணவருடைய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தணுமே தவிர, மொத்தமாக ஒரே மட்டமாக தட்டி அனுப்பக் கூடாதுங்கறதுதான் எண்ணம். தனித்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும், இயல்பான புத்திசாலித்தனத்துக்கும் இடம் கொடுக்கணும்ங்கறதுதான் திட்டம்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாடத்துல போதிய திறனும் தேர்ச்சியும் வந்துடுச்சான்னு நாம் சோதிப்பதே இல்லை. இங்கே அந்தச் சோதனைதான் முக்கியம். ஒவ்வொரு மாணவரும் நிச்சயம் தேர்ச்சி அடைஞ்சுட்டாருன்னு தெரிஞ்சாதான் அடுத்த கட்டத்துக்கே நகர முடியும். அகல உழுவதைவிட ஆழ உழுவது சிறந்ததுன்னு நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு இல்லையா? அது மாதிரி, இது திறனை ஆழமாக ஊன்றும் முயற்சி.”
“போதிய தேர்ச்சி பெறமுடியாதவங்களுக்குத் தோல்வி மனப்பான்மை வந்துடாதா மிஸ்?”
“வராது. ஏன்னா, அங்கே மதிப்பெண் முறையோ, கிரேடு முறையோ கிடையாது. திறன் மேம்பாடுதான் முக்கியம். அதைக் கத்துக்கிட்டு, மேலே வர, ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் ஆகலாம். அதில் தப்பே இல்லை. அதற்கான அவகாசத்தைக் கொடுத்தால் தான், தேர்ச்சிபெற முடியும்.
ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ கதிர். உதாரணமா, நீ பிதாகரஸ் தேற்றம் படிக்கிறேன்னு வெச்சுக்கோ. அந்தச் சூத்திரத்தை மட்டும் படிச்சுட்டேன், எனக்கு அது தெரியும்னு சொல்றது போதாது. அது எங்கே எல்லாம் பயன்படும், எப்படியெல்லாம் இதுவரை பயன்பட்டிருக்கு, யாரெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க, அதன் உள்ளர்த்தம் என்னன்னு அத்தனையும் தெரிஞ்சு இருக்கணும். அதுதான் தேர்ச்சி. வெறும் தகவலுக்கு அப்பாற்பட்டு, அறிவுக்கும் அப்பாற்பட்டு தேர்ச்சிதான் இன்றைய தேவை. எனக்குத் தெரியும்னு சொன்னா, அந்த வகுப்புக்குத் தேவையான சகலமும் தெரிஞ்சு இருக்கணும். இத்தகைய தேர்ச்சி உயர உயரத்தான் முன்னேற்றம் ஏற்படும்.
பலபேர் அரைகுறையாகப் படிச்சுட்டு, பின்னாடி வேலையில திண்டாடும் நிலைமை ஏற்படும். உலகம் இப்போ தேர்ச்சியை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கு. அதுக்குத் தயாராவதுதான் முக்கியம்.”
“நம்ம ஊர்ல இதெல்லாம் எப்போ மிஸ் வரும்?”
உமா மிஸ் முகத்தில் புன்னகை மட்டும் மயில் மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தது. உணர்வற்ற மயில். கணிதத்தில் அடுத்தடுத்த நிலைக்கு நகர்வது எப்படி, தேர்ச்சியைப் பெறுவது எப்படி என்று யோசிக்கத் தொடங்கினேன்... உமா மிஸ் முன்னால் நடந்துகொண்டிருந்தார்.
