
தலைக்கு மேலே ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். ஆனால் சிலருக்கு தலை முடியே பிரச்னையாக இருக்கும். முடி கொட்டுவது, வழுக்கை விழுவது, நரைமுடி தோன்றுவது இப்படி நிறைய பிரச்னை இருக்கும்.
நம் தலையில் ஆயிரக்கணக்கான முடிகள் உள்ளன. ஒவ்வொரு தலைமுடிக்கும் வேர் உண்டு. முடிவேரின் கீழே பப்பிலா (Papilla) என்ற பகுதி இருக்கிறது. தலைமுடி வளர்வதற்கான சத்துகள் இங்கிருந்தே பெறப்படுகின்றன. பப்பிலாவில் புது செல்கள் உருவாகி தலை முடியாக வளர்கிறது.
மனித உடலில் உள்ள சத்துகள் முழுவதும் அழியும் வரை, தலைமுடியின் வேர்ப்பகுதியில் புது செல்கள் உருவாகி முடி வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே இறந்த பிறகும் ஒரு சில நாட்களுக்கு மனிதனுக்கு முடி வளர்கிறது.
நம் தலைமுடியில் 50 சதவீதம் கார்பன் இருக்கிறது. அதனால் எளிதில் தீயில் கருகி விடும். தலைமுடி இறந்த செல்கள் என்பதால், வெட்டும் போது வலிப்பதில்லை.
ஒரு ஒற்றைத் தலைமுடி, 100 கிராம் அளவுள்ள சாக்லேட்டை தூக்க முடியுமாம். ஒவ்வொரு தலை முடியும் மாதத்தில் 1 செ.மீ. அளவுக்கு வளரக்கூடியது. இப்படி வளரும் ஆயிரக்கணக்கான முடியையும் எடுத்து கணக்கிட்டால், ஒரு வருடத்திற்கு 16 கி. மீ. தூரம் வரை நீளுமாம்.