PUBLISHED ON : ஆக 22, 2016

சின்ன வயசில் உங்களுக்கு சாப்பாடு ஊட்டும் போது ''இந்தா வெண்டைக்காய் பொரியல் சாப்பிடு, கணக்கு நல்லா வரும்'' என்று சொல்வதை கேட்டிருக்கீங்கதானே! கணக்கு நல்லா வரும் என்பதற்கான ஆதாரம் ஏதும் வெண்டைக்காயில் இல்லை. ஆனால் நம் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் இதில் இருப்பதால், அந்த சத்துகள் நம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவக்கூடும் என்பதால், பெற்றோர் கணக்கை காரணம் காட்டி நம்மை வெண்டைக்காய் சாப்பிட வைத்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கர்கள் ட்வி (Twi ) மொழியில் ஓக்ரா (Okra) என்று இதனை அழைத்தனர். பின்னர் 18ஆம் நூற்றாண்டு கடைசியில் ஆங்கிலத்தில் அப்படியே இடம்பெற்றது.
பண்டைய எகிப்தியர்கள் 12ஆம் நூற்றாண்டில் வெண்டைக்காயை பயிரிட்டிருக்கிறார்கள். பிறகு வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. காயை சமையலில் பயன்படுத்தியதோடு விதைகளை வறுத்து காபி போல் தயாரித்து அருந்தியிருக்கிறார்கள்.
இது ஒரு வெப்ப மண்டல தாவரம். வருடம் முழுவதும் காய்க்கும். இதில் ஏ, பி, சி, இ, கே வைட்டமின்கள் அடங்கி உள்ளன. இரும்பு, கால்சியம், நார் சத்துகளும் இருக்கின்றன. கொழுப்பில்லாத சத்து நிறைந்த காய்களில் வெண்டைக்காயும் ஒன்று.
இதில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இதயத்துக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
வெண்டைக்காய் இந்தியில் பிந்தி (Bhindi), தெலுங்கில் பெண்டகாய (Bendakaya), மலையாளம் வெண்டகய் (Vendakai), கன்னடத்தில் பென்டே (Bende), குஜராத்தியில் பிந்தா (Bhinda), வங்க மொழியில் டேர்ஷ் (Dherash) என்றும் அழைக்கப்படுகிறது.
வெண்டை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டு, மூன்றாவது இடங்களில் நைஜீரியா, ஈராக் நாடுகள் உள்ளன.
