தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டயரி (32) - கனவுகள் பலவிதம்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (32) - கனவுகள் பலவிதம்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (32) - கனவுகள் பலவிதம்


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“எனக்கொரு கனவு நேத்து. டேபிள்ல ஒரு பக்கம் ஒரு பெரிய பக்கெட் நிறைய நட்டிமேனியா ஐஸ்க்ரீம். இன்னொரு பக்கம் இன்னொரு பக்கெட்ல வழிய வழிய உருளைக்கிழங்கு சிப்ஸ். ஒரு சிப்ஸைக் கடிச்சுட்டு ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் சாப்பிடறேன். அமிர்தமா இருக்கு. இப்பிடியே மொத்தம் சாப்பிட்டு முடிச்சு வாயத் துடைச்சுக்கறப்பதான், விழிப்பு வந்து இது கனவுன்னு உறைச்சுது” என்றான் பாலு.

“உனக்கு இந்த மாதிரி கனவுதான் வரும் போலருக்கு” என்ற ஞாநி மாமா, தொடர்ந்து ஒரு பெரிய கனவைப் பத்திச் சொன்னார். “மார்ட்டின் லூதர் கிங் கூட ஒரு கனவு பத்திப் பேசியிருக்கார், தெரியுமா? சரியா 43 வருஷம் முன்னால் ஆகஸ்ட் 28ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்ல சுமார் 3 லட்சம் பேர் ஊர்வலமா போனாங்க. அந்த ஊர்வலத்தோட முடிவுல மார்ட்டின் லூதர் கிங் எழுதி வெச்சிருந்த பேச்சைப் பாதியில விட்டுட்டு தன்னோட கனவு பத்தி பேச ஆரம்பிச்சார்.”

“என்ன கனவு அது?” என்றான் பாலு.

“அமெரிக்கால கறுப்பினத்தவரும் வெள்ளையரும் சரிசமமா வாழற ஒரு காலம் வரும்கறதைப் பத்தின கனவு. பல மாநிலங்கள்ல இருந்த கடுமையான நிற வெறி ஒழிஞ்சு, கறுப்புக் குழந்தைகளும் வெள்ளைக் குழந்தைகளும் ஒண்ணா கை கோத்து ஒரே பள்ளிக்கூடத்துக்குப் போகறதைப் பத்தின கனவு.”

“அந்தக் கனவு பெருமளவு நிறைவேறிடுச்சுன்னு சொல்லலாம் இல்லியா? கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவை எல்லாரும் சேர்ந்து ரெண்டு தடவை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்ததே ஒரு பெரிய மனமாற்றம்தானே?” என்று நான் கேட்டேன்.

“நிச்சயமா. நிறைய மாறியிருக்கு. இன்னும் மாறவேண்டியதும் கொஞ்சம் கொஞ்சம் பாக்கி இருக்கு” என்றார் மாமா.

“என்னோட கனவும் ஒரு நாள் நிறைவேறும்” என்றான் பாலு. “அது நிறைவேறினா உனக்குத்தான் கஷ்டம். ஓவரா சிப்ஸும் ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுகிட்டே இருந்தா, மிதமிஞ்சிய குண்டனாயிடுவே. 25 வயசுலயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எல்லாம் வந்துரும்” என்றார் மாமா.

“அப்புறம் ஏன் இந்த சிப்ஸை கண்டுபிடிச்சாங்க? யார் கண்டுபிடிச்சது?” என்று அலுத்துக்கொண்டே கேட்டான் பாலு.

“இங்கிலாந்துல 1817ல இருந்த ஒரு சமையல் குறிப்பு புத்தகத்திலேயே எப்படி உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யணும்கற குறிப்பு இருந்திருக்கு. ஆனா அமெரிக்கால நியூயார்க்ல 1853 ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு சமையல்காரர் இதை அறிமுகப்படுத்தியதும் அது பிரபலமாயிடுச்சு. உருளைக்கிழங்கை நீளமா துண்டு துண்டா வெட்டி ஃப்ரெஞ்ச் ஃபிரை செய்வாங்க. ஓட்டலுக்குச் சாப்பிட வந்தவருக்கு அது பிடிக்கல. இன்னும் மெல்லிசா வேணும்னு கேட்டுகிட்டே இருந்தார். கடைசியில் சமையல்காரர் ரொம்ப மெல்லிசா சிப்ஸ் மாதிரி வெட்டி சமைச்சுக் குடுத்தது அவருக்கு பிடிச்சுப் போச்சு. சிப்ஸ் ருசியா இருக்கும். பொதுவாவே ருசியான தின்பண்டங்களை எல்லாம் அளவாதான் சாப்பிடணும்” என்றார் மாமா.

“ஐரோப்பால உருளைக்கிழங்குதான் முக்கியமான உணவுன்னு படிச்சிருக்கேனே. அப்ப அது எப்பிடி?” என்று கேட்டேன்.

“காரம், மசாலா எல்லாம் சேர்த்து எண்ணெயில பொரிச்சு நாம சாப்பிடற மாதிரி அவங்க சாப்பிடமாட்டாங்க. லேசா உப்பு போட்டு வேகவெச்சு, மிளகுப் பொடி தூவிச் சாப்பிடுவாங்க. சிப்ஸ், ஃப்ரெஞ்ச் ஃபிரை எல்லாம் தொட்டுக்கற விஷயம். பாலு மாதிரி அதையே லஞ்ச்சா சாப்பிடமாட்டாங்க” என்ற மாமா, “யுத்த காலங்கள்ல மக்களுக்கு ஐரோப்பால பிரதான உணவா இருந்தது உருளைக்கிழங்குதான். அயர்லாந்துல 1845ல உருளைக்கிழங்கு பயிரை பூச்சி தாக்கி பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பட்டினியால செத்திருக்காங்க. இன்னிக்கு ஆப்ரிக்கால பசி பட்டினி இல்லாம இருக்க உருளைக்கிழங்குதான் சிறந்த உணவுன்னு, அதை அங்கே பெரிய அளவுல பயிரிட ஏற்பாடு நடக்குது. இன்னிக்கு பல நாடுகள்ல உருளைக்கிழங்கு பயிரானாலும் நாடுவிட்டு நாடு அதைக் கடத்தல் செய்யறது கூட நடந்துகிட்டுதான் இருக்கு” என்றார்.

“கடத்தல்னு சொன்னதும் ஞாபகம் வருது மாமா. என் க்ளாஸ்மேட் சுதாகரை சில பேர் கடத்திகிட்டுப் போய் அவங்க அப்பா கிட்ட பணம் கேட்டாங்க ஞாபகம் இருக்கா?” என்றான் பாலு.

“ஆமா. அவனத்தான் போலீஸ் மீட்டுகிட்டு வந்துட்டாங்க இல்ல?”

“அவனைக் கடத்திகிட்டுப் போனப்ப அழுதுகிட்டே இருந்தானாம். அப்பறம் பொடாட்டோ சிப்ஸ் வாங்கிக் குடுத்ததும், அவங்க கூட ஃப்ரெண்டு ஆயிட்டானாம். வீட்டுக்கு வந்ததும் அப்பா கிட்ட, பாவம்ப்பா அவங்க, நீங்க கொஞ்சம் பணம் குடுத்துருக்கலாம்னு வேற சொன்னானாம். எல்லாம் சிப்ஸ் எஃபெக்ட்” என்றான் பாலு.

“கடத்தினவங்க மேலயே அன்பாயிடறதுக்கு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்னு பேரு. ஸ்டாக்ஹோம் நகரத்துல 1973 ஆகஸ்ட்ல ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க வந்தவங்க வங்கி ஊழியர்களை ஆறு நாள் பிணைக் கைதியா வெச்சிருந்தாங்க. இந்த ஆறு நாள் பழக்கத்துல பல ஊழியர்கள் கொள்ளைக்காரங்க மேல அனுதாபம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இந்த மாதிரி நடந்துக்கறதை உளவியல் அறிஞர்கள் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்னு அழைக்கறாங்க.”

“கடத்தினவங்களுக்குப் பிணைக் கைதிகள் மேல அனுதாபம் வராதா?” என்று கேட்டேன். “வரும். அதுக்கும் உளவியல்ல ஒரு பேர் வெச்சிருக்காங்க. லிமா சிண்ட்ரோம்னு. பெரு நாட்டுல லிமா நகரத்துல ஜப்பான் தூதர் நடத்தின விருந்துல நுழைஞ்சு நூற்றுக் கணக்கானவங்களை பிணைக்கைதியாப் பிடிச்ச ஒரு தீவிரவாதக் குழு, அதுல இருந்த பல பேர் மேல பரிதாபப்பட்டு விடுவிச்சுட்டாங்க” என்றார் மாமா.

“பாலுவை யாராவது கடத்தினா, அவங்களுக்கும் பாலு மேல பரிதாபம் வராது. பாலுவுக்கும் அவங்க மேல பரிவு வராது” என்றது வாலு.

“சிப்ஸும் நட்டிமேனியாவும் இருந்தா எல்லாம் மாறிடும்” என்றேன். எல்லாரும் சிரித்தார்கள்.

வாலுபீடியா 1: உருளைக்கிழங்கில் மொத்தம் 3500 வகைகள் இருக்கின்றன. கலர் கலரான உருளைக்கிழங்குகள் கூட உண்டு. அயர்லாந்தில் பஞ்சம் வந்தபோது முதலில் அவர்களுக்கு நிவாரணத் தொகை அனுப்பியது அடிமை இந்தியாவில் கொல்கத்தாவில் இருந்தவர்களே!

வாலுபீடியா 2: எத்தியோப்பியாவில் உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க உருளைக்கிழங்கை பயிராக்க ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விதை கொடுத்து உதவும் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனமான 'விட்டா'வைத் தொடங்கியவர் அன்னை தெரெசா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us