PUBLISHED ON : ஆக 22, 2016

பூக்களின் இனப்பெருக்கம் மகரந்தச் சேர்க்கையால் (Pollination) நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியும். பூக்கள் பல வண்ணங்களில் பூக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் பூக்கும் பூக்களில் எப்படி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது? இரவு நேரங்களில் வண்ணம் தெரியாது. அதற்குப் பதிலாக பூக்களில் இருந்து வெளிவரும் நறுமணம் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கிறது. இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. மல்லிகை, முல்லை ஆகிய பூக்கள் இதற்குச் சிறந்த உதாரணம். பகல் நேரத்தில் பட்டாம்பூச்சி, தேனீ, பறவை ஆகியவை பூக்களின் நிறங்களால் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமாக விளங்குகின்றன. இரவு நேரங்களில் அந்துப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவை நறுமணக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இதற்கு உதவுகின்றன. எனவே இரவு நேரங்களில் பூக்களின் வண்ணத்துக்கு முக்கியத்துவம் இல்லை. இதனால்தான் இரவு நேரங்களில் பூக்கும் பூக்கள் பெரும்பாலும் வெண்மை நிறத்தில் இருக்கின்றன.
