PUBLISHED ON : பிப் 25, 2019

படைப்புத் திறன் அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவரும் பார்க்கும் கோணத்தில் தான் வேறுபடுகிறோம்.
கோணமா? அது என்ன? ஒரு சின்ன பயிற்சி செய்து பார்க்கலாம்.
நீங்கள் மூன்று அணிகளாகப் பிரிந்துகொள்ளுங்கள். உங்கள் பள்ளியில் உங்களுக்குப் பிடித்த மரத்தின் கீழ் நில்லுங்கள். இந்த மரத்தை எல்லோரும் ஒரே மாதிரியாகப் பார்ப்பது கிடையாது.
ஒவ்வொருவருக்கும், மரத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். நான் மரத்தில் பறவைகள் இருக்கின்றனவா என்றுதான் முதலில் கவனிப்பேன்.
வேறு சிலருக்கு மரத்தின் இலைகள், பூக்கள், மரத்தின் உயரம், வேரின் பாதை, மரப்பட்டை, காய்கள் ஆகியவை பிரியமானவை. ஒரே மரம்தான். ஆனால், எத்தனை புதிய கோணங்களை வழங்குகிறது?
அது மட்டுமா, இன்னும் சிலர் மரப்பட்டையைத் தட்டிப்பார்த்து ஒலி எழுப்புவார்கள். மரங்கொத்திப் பறவைகளை நேரில் பார்க்க விரும்புவார்கள். அது இனிமையான ஒலியை எழுப்பும்; காட்டின் அமைதியில் அந்த ஒலி தனியே கேட்கும்.
மரங்களை நட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பலாம். அங்கு நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரலாம். இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்கள் மூலமாகவே, நாம் இயற்கையோடு நெருங்கிப் பயணம் செய்ய முடியும்.
முதலில், நீங்கள் ஒரு மரத்தைப் பாருங்கள். அது என்ன எண்ணங்களை உங்களுக்கு ஏற்படுத்தியது? எதை முதலில் கவனித்தீர்கள், ஏன்? என்பன போன்ற அனுபவங்களை எழுதுங்கள். இது தான் படைப்புத்திறனுக்கான ஆரம்பம். இயற்கையை ரசித்தலே அதற்கான விதை.
- மான்ஸி
