PUBLISHED ON : அக் 21, 2019

உலகில், எல்லா துறையிலும் 'வாரிசு'கள் உள்ளது போல், இலக்கியத் துறையிலும் உண்டு.
ஒருவர் எழுத்தாளராகத் திகழ்கிறார் என்றால், அவரைப் பார்த்துப் பலரும் எழுத்தின்பால் ஈர்க்கப்படுவார்கள். அவருடைய மகனோ மகளோ அப்படி ஈர்க்கப்படுவதில் வியப்பில்லையே.
எழுத்தாளர்களுடைய பிள்ளைகள், தங்கள் தந்தை அல்லது தாய் மும்முரமாக எழுதுவதையும், அவருடைய படைப்புகள் பிரசுரமாவதையும், வாசகர்களுடைய வரவேற்பை, பாராட்டைப் பெறுவதையும் சிறுவயதிலிருந்தே தொடர்ந்து பார்க்கிறார்கள். அதனால் கவரப்படுகிறார்கள். தாங்களும் அதுபோல் எழுதவேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
'எங்கள் வீட்டுக்குப் பத்திரிகை, பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால், நீங்கள் சின்னப்பிள்ளைகள்தானே, உள்ளே போங்கள் என்று எங்கள் தாய் சொல்லமாட்டார்' என்கிறார் எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் மகள், சுகந்தா சுதர்சனம். 'எங்களையும் உடன் உட்கார வைத்துக் கொண்டுதான் பேசுவார். அவர்கள் பேசும் இலக்கிய விஷயங்களை நாங்களும் கேட்டுக் கொண்டிருப்போம்.'
அதேபோல், ஓர் எழுத்தாளருடைய வீட்டில் பலவிதமான நூல்கள் இருக்கும். அவற்றைப் படிப்பதன் மூலம், அவர்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்வளம் பெருகும். பலவிதமான அனுபவங்களைக் கற்றுக்கொள்வார்கள். அவற்றை எழுத முனைவார்கள். இவர்களும் எழுத்தாளர்களாவதற்கு இது வழிவகுக்கும்.
இப்படித் தமிழில் எழுத்தாளர்களுடைய 'வாரிசு'களாகத் திகழ்ந்த சிறந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. எடுத்துக்காட்டாக, 'கல்கி'யின் மகன் கி.ராஜேந்திரன், மகள் ஆனந்தி இருவரும் எழுத்தாளர்கள். கி. ராஜேந்திரனுடைய மகள் சீதா ரவியும் எழுத்தாளர்தான். இதேபோல், கவிஞர் பாரதிதாசனுடைய மகன் மன்னர்மன்னன், எழுத்தாளர் அகிலனின் மகன் அகிலன் கண்ணன், தமிழ்வாணனின் மகன் லேனா தமிழ்வாணன் என்று பல எழுத்துலக வாரிசுகளைக் குறிப்பிடலாம்.
அதேசமயம், ஒருவர் எழுத்தாளருடைய வாரிசு என்பதாலேயே அவருக்கு வாய்ப்புகள் வந்துவிடாது. அவர்களிடம் சொந்தத் திறமை இருந்தால்தான் சிறந்து விளங்க முடியும்.
எடுத்துக்காட்டாக, கவிஞர் கண்ணதாசனுடைய மகன் கண்மணிசுப்பு பாடல் எழுத முயன்றபோது, அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆனால், போதிய வாய்ப்புகள் வரவில்லை. 'நான்கு ஆண்டுகள் முயன்றும் பத்துப் பாடல்கள்தான் எழுதக் கிடைத்தன' என்கிறார் அவர்.
ஆக, வாரிசுகளாக இருந்தாலும் சரி, புதிதாக எழுத வருகிற முதல் தலைமுறை எழுத்தாளர்களானாலும் சரி, திறமைதான் முக்கியம், அதற்குத்தான் முதலிடம்!
அது சரி, ஒரே எழுத்தாளர் வீட்டில் பல வாரிசுகள் இருப்பதுண்டா?
கண்டிப்பாக உண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர் அ. மாதவையாவுக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள். அனந்தநாராயணன், கிருஷ்ணன், மீனாம்பாள், லட்சுமி, விசாலாட்சி, சரஸ்வதி என்கிற அந்த ஆறு பேருமே சிறுகதை எழுத்தாளர்கள். இந்தச் சகோதர, சகோதரியர் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு, 'முன்னிலா' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது!
- என். சொக்கன்
