PUBLISHED ON : அக் 21, 2019
'காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி - என
மேவிய ஆறுகள் பலவோட - திரு
மேனி செழித்த தமிழ்நாடு'
என்று பாரதியார் பாடியுள்ளார்.
இந்தப் பாட்டில் தமிழ் நாட்டில் பாயும் முதன்மை ஆறுகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார். பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டிணை ஆறு வரைக்கும் பரவியிருந்தது. அக்காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ்ப் பெயர்களே இருந்தன. பிற்காலத்தில் வடமொழிப் பெயர்கள் நிலைத்துவிட்டன.
ஆந்திரத்தின் கிருட்டிணை (கிருஷ்ணா) ஆற்றுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு வழங்கினர். அவ்வாற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும். நீரின் அந்தக் கறுப்பு நிறத்தை உணர்த்தும் விதமாகவே கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி 'கிருட்டிணை' என்ற வடமொழிப்பெயர் நிலைத்தது. கிருட்டிணை ஆற்றின் தமிழ்ப்பெயர் 'கரும்பெண்ணை' என்பதாகும். பெண்ணை என்றால் நல்ல நீர்ப்பெருக்குடைய ஆறு என்று பொருள்.
காவிரி ஆற்றைக் 'காவேரி' என்று வழங்குவதும் உண்டு. இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால் 'வி' என்பது 'வே' ஆகி 'காவேரி' என்று ஆகிவிட்டது.
வடமொழியிலும் காவிரி என்று வழங்காமல் காவேரி என்றே வழங்குவர். கா என்றா சோலை. செல்லுமிடமெல்லாம் 'சோலைகளை விரித்துச் செல்பவள்' என்ற பொருளில் அமைந்த பெயர்தான் காவிரி. காவிரிக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் 'பொன்னி.'
தாமிரபரணி என்னும் ஆற்றுப் பெயரும் வடமொழிதான். அதற்குத் தமிழில் வழங்கப்பட்ட பெயர் 'தண்பொருநை.' பாரதியார் பாடிய பொருநை ஆறு, தண்பொருநை ஆற்றைக் குறிப்பதுதான். தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள். குளிர்ந்த நீர் பாயும் ஆறு என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
வைகை ஆற்றின் தூய பெயர் 'வையை' என்பதாம். 'வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்' என்கிறது புறநானூறு (71). வையை என்பதே நாளடையில் வைகை என்று மருவியது.
கொசஸ்தலை ஆற்றின் பெயரும் வடமொழிதான். அதன் தூய தமிழ்ப்பெயர் 'கொற்றலை.' சிறு சிறு அலைகள் மோதி விளையாடும் ஆறு என்ற பொருளில் அமைந்தது.
பவானி என்பதும் வடமொழிதான். பவானி ஆற்றின் தூய தமிழ்ப்பெயர் 'வானி ஆறு' என்பதாம். வானி எப்படியோ பவானி என்று திரிந்துவிட்டது. 'சாந்து வரு வானி நீரினும்' என்கிறது பதிற்றுப் பத்து (86). இன்றைக்கும் பவானி ஆற்றங்கரையில் கீழ்வானி, மேல்வானி, பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. இது பெரிய வானி ஆறு. இன்னொன்று சிறிய வானி ஆறு. அந்தச் சிறிய வானி ஆறுதான் 'சிறுவானி ஆறு.' கோவைக்கு நீர் கொடுப்பது. சிறுவானி ஆற்றினைச் 'சிறுவாணி' என்று எழுதுவது பிழையாகும்.
அமராவதி ஆற்றின் தூய தமிழ்ப்பெயர் 'ஆன்பொருநை.' ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது ஆன்பொருநை.
'பேரியாறு' என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது. அதைத்தான் 'பெரியாறு' என்கிறார்கள். பேரி என்றால் முரசு. ஜெயபேரிகை என்போம். வெற்றி முரசுபோல் ஆர்ப்பரித்தபடி பாயும் ஆறு என்ற பொருளில் 'பேரியாறு' எனப்பட்டது.
அடையாறில், வெள்ளப் பெருக்கின்போது தேனடைகள் மிதந்து சென்றிருக்கின்றன. அதனால் அப்பெயர் வந்தது. அடையாறு என்பதனை 'அடையார்' என்று தவறாக எழுதுகிறோம். கூவம் என்றால் கிணறு. வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால், கூவம் ஆற்றுக்கு அப்பெயர் வந்தது.
- மகுடேசுவரன்
