PUBLISHED ON : மே 29, 2017

“கீக்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான் பாலு. “இடத்துக்கேத்த மாதிரி மாறும். சில சமயம் லூசுன்னு திட்டறதுக்கு கீக்ம்பாங்க. ரொம்ப புத்திசாலியா இருந்தா, மூளைக்காரன்னு பாராட்டறதுக்கும் கீக்ம்பாங்க” என்றார் ஞாநி மாமா.
“அதெப்படி லூசும் புத்திசாலியும் ஒண்ணா இருக்க முடியும்?” என்றேன்.
“அது அப்படித்தான். சமயத்துல ரொம்ப புத்திசாலித்தனமா ஒருத்தர் செய்யறது மத்தவங்களுக்குப் பிடிக்காட்டி, லூசு மாதிரி ஏதாவது செய்யாதேன்னுதானே சொல்றாங்க.” என்றார் மாமா. “தவிர கீக் என்ற சொல் ஜெர்மன் கேக்லருந்து வந்தது. கேக்ன்னா கோமாளி, முட்டாள், வழக்கத்துக்கு வித்யாசமா நடந்துக்கறவங்கன்னு அர்த்தம்.”
“உன்னை ஏன் கீக்ன்னு சொல்றாங்க?” என்று பாலுவைக் கேட்டேன்.
“எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ்னு இருக்கேன். அதிகமா யாரோடவும் பழகறதில்லையாம். நான் தனியா எனக்குன்னு ஓர் உலகத்தை படைச்சுக்கிட்டு அதுலயே இருக்கேனாம். அப்படின்னு என் க்ளாஸ்மேட் மகேஷ் சொல்றான்.” என்றான் பாலு.
“மகேஷ் சொன்ன விளக்கம் சரிதான். ஆனா நீ ஒண்ணும் அப்பிடி இல்லியே. உன் உலகத்துல நாங்கள்லாம் இருக்கோமே” என்றார் மாமா. “நீ அவனோட அதிகம் பழகாததுனால அப்பிடி சொல்லியிருப்பான்.”
“எனக்குத் தெரிஞ்சு கீக்ன்னா, நல்ல சோடா பாட்டில் கண்ணாடி போட்டிருக்கணும். நீ கண்ணாடியே போடலியே” என்று சிரித்தேன். பிறகு மாமாவிடம் கேட்டேன். “ஏன் கதைகள்ல, சினிமாவுல எல்லாம் ரொம்ப புத்திசாலிப் பொண்ணு, புத்திசாலிப் பையன் கேரக்டர்னா தடியா கண்ணாடி போட்டு விட்டுடறாங்க?”
“நிறைய படிச்சுத்தான் அவங்க புத்திசாலியாகியிருப்பாங்க. நிறைய படிச்சா கண் கெட்டுப்போய் கண்ணாடி போட வேண்டி வந்திருக்கும்னு கற்பனை பண்ணிக்கறாங்க. நிறைய படிக்கறதுக்கும் கண் பார்வை பாதிக்கறதுக்கும் அதிக தொடர்பு ஒண்ணும் இல்லை. உண்மையில நிறைய டி.வி., சினிமா பார்த்தாதான் கண் பாதிக்கப்படற வாய்ப்பு அதிகமா இருக்கு.” என்றார் மாமா.
“என்னை கீக்ன்னு சொன்னா சந்தோஷப்படறதா? வருத்தப்படறதா?” என்று கேட்டான் பாலு. “முன்னெல்லாம் டெக்னாலஜி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் இத்தோட ஆழ்ந்து போனவங்கள மட்டும்தான் கீக்ன்னு சொன்னாங்க. இப்ப அப்பிடி இல்ல. வழக்கத்துக்கு மாறா யோசிக்கறவங்க, வித்யாசமா கற்பனை செய்யறவங்க எல்லாருமே கீக்தான். அப்பிடி இருக்கறதுக்காக பெருமைப்படணும்னு 'கீக் பிரைடு டே' (Geek pride day) மே 25ந் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடறாங்க.” என்றார் மாமா.
“எதுக்குத்தான் டே கொண்டாடறதுன்னு லிமிட்டே கிடையாதா?” என்றேன்.
“உலக டவல் தினம் கூட இருக்கு தெரியுமா?” என்றது வாலு. எனக்கும் பாலுவுக்கும் சிரிப்பு தாங்கவில்லை. டவலுக்கு கூடவா ஒரு தினம்?!
டக்ளஸ் ஆடம்ஸ் என்று ஓர் ஆங்கிலேய எழுத்தாளர் இருந்தார். பிரபஞ்சத்தைச் சுற்றி வருவதற்கான வழிகாட்டி என்று ஒரு வானொலி நிகழ்ச்சி நடத்தினார். அதையே நாவலாகவும் எழுதினார். இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றன. அந்த நாவலில், 'டவலின் சிறப்பு' பற்றி எழுதியிருக்கிறார். அவர் 49ம் வயதில் இறந்ததும், அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிப்பதற்காக, 'டவல் தினம்' கொண்டாட ஆரம்பித்தார்கள்.
“டவலுக்கு அப்படி என்ன சிறப்பு?”
“டக்ளஸ், நாவலில் அதை எழுதியிருக்கிறார். உலகம் சுற்றும்போது குளிரான இடத்தில் டவலை உடம்பில் சுற்றிக் கொண்டால் இதமாக இருக்கும். அழகான கடற்கரை மணலில் அதை விரித்து அதன் மீது படுத்துக்கொள்ளலாம். இன்னொரு ஊரில் அதை போர்த்திக்கொள்ளலாம். பாய்மரப் படகில் அதை பாயாக பயன்படுத்தலாம். யாரோடாவது சண்டை போட வேண்டி வந்தால், டவலை நனைத்து ஆயுதமாக்கிக் கொள்ளலாம். மாசுபடாமல் காப்பாற்ற தலையைச் சுற்றி அணியலாம். பிரச்னையான இடத்தில் அதை சமாதானத்துக்கான வெள்ளைக் கொடியாகப் பயன்படுத்தலாம். அழுக்காய் இருப்பதாக நினைக்கும்போது, துடைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் டக்ளஸ் எழுதியதை, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.” என்றார் மாமா.
“இதே மாதிரி நான் கைக் குட்டைக்குக்கூட சிறப்புகளைப் பட்டியலிடுவேனே?”என்றேன்.
“இடு. கொண்டாடு. நாம் விரும்பினால் எதற்கு வேண்டுமானாலும் கொண்டாட்ட தினத்தை உருவாக்கலாம். ஆனால், அது தேவைதான் என்று எல்லாரும் கருதினால்தான், அந்த தினம் பிரபலமாகும்; பரவலாகும்” என்றார் மாமா. “அப்படித்தான் 2014ல் மாதவிலக்கு ஆரோக்கிய தினத்தை, மே 28ல் ஒவ்வொரு வருடமும் அனுசரிப்பதென்று ஐ.நா. சபை ஆரம்பித்தது. இப்போது எல்லா நாடுகளும் அதைப் பின்பற்றுகின்றன.”
“அதெல்லாம் பெண்கள் சமாச்சாரம். அவர்கள் கொண்டாடிக் கொள்ளட்டும்” என்றான் பாலு. “அப்படி இல்லை. அம்மாவுக்கோ சகோதரிக்கோ அப்படி சிரமமாக இருக்கும் நாட்களில், நாம் எப்படி ஒத்துழைக்கவேண்டும் என்று வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் மாமா.
“அப்படியானால், எனக்குப் புரிகிற மாதிரி அதைப் பற்றிச் சொல்லுங்கள்.” என்றான் பாலு. “சொல்கிறேனே” என்றார் மாமா.
“ஒவ்வொரு சிறுமியும் எதிர்காலத்தில் குழந்தை பெறுவதற்கு வசதியாக, அவள் உடலில் இயற்கை சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. சினைப்பை, கருப்பை இரண்டும் இருக்கின்றன. பத்து, பன்னிரண்டு வயதாகும்போது மூளையில் இருக்கும் ஹைப்போதலமசின் உத்தரவுப்படி, பிட்யூட்டரி சுரப்பி சில ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கும். அதுதான் சினைப்பையில் முட்டைகளை உருவாக்கும். இன்னொரு ஹார்மோன் எஸ்ட்ரோஜன். ரத்தத்தில் அது அதிகமானதும், அது இன்னொரு ஹார்மோனாகிய லூட்டினைசரை சுரக்க வைக்கும். இதன் வேலை சினைப்பையில் இருந்து முட்டையை கருப்பைக்கு அனுப்புவதுதான். சினைமுட்டை இருக்கும் உறை உடைந்து 'ப்ரொஜெஸ்ட்ரோன்' என்ற இன்னொரு சுரப்பு கருப்பைக்கு போய் அதன் உட்சுவர் முழுவதும் மெழுகி வைக்கும். இளநீரின் உட்புறத்தில் வழுக்கை மாதிரி இது கருப்பையில் இருக்கும். இங்குதான் பின்னர் குழந்தை உருவாகவேண்டும். அதுவரை ஒவ்வொரு மாதமும் இது கலைந்து ரத்தத்துடன் வெளியேறுவதைத்தான், மாதவிலக்கு ரத்தப் போக்கு என்று சொல்கிறோம். தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை இந்த ரத்தப் போக்கு இருக்கும். அந்த நாட்களில் உடல் சோர்வு இருக்கும். தலைவலி, எரிச்சல் முதலியவை கூட ஏற்படும். சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று விளக்கினார் மாமா.
“பள்ளிக்கூடங்களில் கழிப்பறை தூய்மையாக இருந்து, நல்ல தண்ணீர் வசதியும், நாப்கினை எரிக்க ஏற்பாடும் செய்தால்தான் சிறுமிகள் தூய்மையாக இருக்க முடியும்.” என்றேன் நான்.
“அரசு மனசு வைத்தால் ஒரே வருடத்தில், எல்லா பள்ளிகளிலும் இதையெல்லாம் செய்துவிட முடியும்” என்றார் மாமா.
“இதுபோல ஆண்களும் அனுசரிக்க தனி தினம் எதுவும் இல்லையா?” என்றான் பாலு. “எல்லா தினங்களும் எல்லாரும் அனுசரிக்கத்தான். எந்தச் சிக்கலும் இல்லாமல் நாம் எல்லாரும் அனுசரித்துக் கொண்டாட ஒரு தினம் இந்த வாரம் வருகிறது.” என்று மாமா சொன்னதும், பாலு “என்ன அது? என்ன அது?” என்று வேகமாகக் கேட்டான்.
“உலக பால் தினம் ஜூன் 1” என்றது வாலு.
“எல்லா தினமும் பால் தினம்தான். வாங்க எல்லாரும் போய் மசாலா பால் சாப்பிடுவோம்” என்று எழுந்தார் மாமா. எழுந்தோம்.
வாலுபீடியா 1
கீக் கார்ப்ஸ் என்ற அமைப்பு, தொழில்நுட்பத்தில் கில்லாடிகளாக இருப்பவர்களை, வளரும் ஏழை நாடுகளுக்கு அனுப்பி அங்கே தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவ ஏற்பாடுகள் செய்கிறது. மாலி நாட்டில் உள்ளூர் மொழியான பம்பாராவில் விக்கிபீடியாவைக் கொண்டு வந்தது இதன் சாதனை.
வாலுபீடியா 2
எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ், இடதுகையால் கிடார் வாசிப்பார். அழிந்து வரும் காண்டாமிருகம் இனத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்திய பேரணியில், அவர் காண்டாமிருக வேடம் அணிந்து சென்றார், அந்த நிகழ்ச்சியில் 70 லட்சம் ரூபாய் வசூலானது
